பணம்..!! என்ற ஒன்றை மாத்திரம்

குறிக்கோளாக கொண்டுள்ள டியூசன் வகுப்பு நிலையங்கள்




எங்கட குடும்ப செலவுக்கே அவ்வளவு கஸ்டம் தம்பி இருந்தும் கிழமைக்கு கிழம வகுப்புக் காசி மட்டும் ஒவ்வொரு பிள்ளைக்கும் 500 ரூபா கொடுக்கன் அவ்வளவு வகுப்புக் காசி எடுக்காக தம்பி“  (நான் செவியுற்ற ஒரு தாயின் கதறல்)

அன்புக்குரிய மேலான பெரியோர்களோ, ஊர் சீர்திருத்தவாதிகளே, கல்வி அபிவிருத்திச் சமூகமே, பெற்றோர்களே மற்றும் ஆசிரியர்களே உங்கள் அனைவருக்கும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.

நமது இலங்கைத் திருநாட்டில் கல்வியானது இலவசமாகவே அனைவருக்கும் கிடைக்கப் பெறும் வகையில் வழியமைக்கபட்டுள்ளது இலவசக் கல்வி, இலவச பாடநுால், இலவச சீருடை என எல்லா வசதிகளும் இலவசமாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது இருந்தும் பாடசாலைக் கல்வியின் தரம் குறைந்துள்ளதால் பகுதி நேர கல்விக் கடைகள் என்றழைக்கப்படும் டியூசன் வகுப்புக்களை நாடி எமது மாணவர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள் அவ்வாறு பாடசாலைக் கல்வியின் தரம் குறைந்து காணப்பட பிரதான காரணம் பணம் உரிஞ்சும் டியூசன் வகுப்பு நிலையங்கள்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

நமது ஊர்களைப் பொறுத்தவரையில் பாடசாலைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்விக் கடைகளின் எண்ணிக்கையும் காணப்படுகின்றது என்றே கூறலாம் அதிலும் 5ம் தர மாணவர்களை இலக்காக வைத்து அமைக்கப்பட்டுள்ள கல்விக் கடைகளே அதிகம்.

தரம் 5 மாணவர்களை மூச்சு வாங்க வாங்க வைத்து பாடசாலையிலும் பகுதி நேர வகுப்புக்களிலும் கற்றுக் கொடுத்து அவர்களை புலமைப் பரீட்சையில் சித்தியடைய வைத்து எதைச் சாதித்து விடப் போகின்றார்கள், இன்று தரம் 5 மாணவர்கள் புலமைப் பரீட்சை என்ற ஒன்றினால் உளவியல் ரீதியாக பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றார்கள், அதனுடைய பாரதுாரங்கள் மாணவர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக அமைகிறது. தரம் 5ல் புலமைப் பரீட்சையை நடாத்தக் கூடாது என்று கோரிக்கைகளும் பல தரப்பினரால் முன்வைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

பாடசாலை முடிந்து வீடு வந்த கையோடு இரவு பகல் பாராது மாணவர்கள் வீதி வீதியாக டியூசன் வகுப்பு டியூசன் வகுப்பு என்றே அழைந்து திரிகிறார்கள்.   ஒவ்வொரு ஊர்களிலும் சந்திக்குச் சந்தி, மூலைமுடுக்கு எல்லாம் கல்விக் கடைகள் அமைக்கப்பட்டு மாணவர்களிடத்தில் பணம் உரிஞ்சப்படுகிறது போதாக் குறைக்கு சில ஆசிரியர்கள் அவர்களது வீடுகளிலே பகுதி நேர வகுப்புக்களை ஆரம்பித்து மாணவர்களுக்கு போதிக்கின்றார்கள், பணம் உரிஞ்சுகின்றார்கள்

பெரும்பாலான கல்விக் கடைகள் தரம் 5 புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்களையே குறி வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது காரணம் கேட்டால் தரம் 5 மாணவர்களை புலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைய வைக்க வேண்டும் என கூறுகிறார்கள். தரம் 5 மாணவர்களை புலமைப் பரிசில் பரீட்சையின் பால் அதிக மோகத்தனமாக்கியதும், அந்த மாணவர்களின் பெற்றோர்களின் மனதில் அந்த பரீட்சையை ஏதோ மாணவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் பரீட்சையான பிரம்மையை ஏற்படுத்தியதுமான பெருமை கல்விக் கடைகள் நடாத்தும், அதிலே கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களையே சாரும்.

ஒரு சில குறித்த பாடங்களுக்கு குறித்த பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லாது சிரமப்படும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு பகுதி நேர வகுப்புக்கள் நியாயமானதாக இருந்த போதிலும் ஏனைய மாணவர்களையும் மற்றும் தரம் 5 மாணவர்களையும் மையப்படுத்தி வகுப்புக்கள் நடாத்தப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது அதிலே பணம் பறிக்கும் பெரும் அநியாயமே உள்ளது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பகுதி நேர வகுப்புக்கள் ஆசிரியர்களுக்கு பகுதி நேர தொழிலாக அமைந்து விடுகிறது அதனால் அவர்களுக்கு இலாபமே ஆனால் பாதிப்புக்களுக்கு உள்ளாகுவது யார்..?? பெற்றோர்களும் ஏழை மாணவர்களும்தான்.

ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி கற்றுக் கொடுக்கக் கூடிய பெரும்பாலான ஆசிரியர்கள் பகுதி நேர வகுப்புக்களுக்கே செல்கிறார்கள் இதனால் அவர்களால் மேற்கொள்ளப்படும் பாடசாலைக் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் நிச்சயமாக ஆரோக்கியத்தன்மையிருக்காதுபாடசாலைகளில் அவர்கள் பெறும் சம்பளத்தை விட அதிகமாக வருமானம் பகுதி நேர வகுப்புக்களில் கிடைக்கப் பெறும் பட்சத்தில் எவ்வாறு அவர்களால் பாடசாலைக் கற்றல்-கற்பித்தல் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட முடியும்..???

அவர்களது முழுக் கவனமும் பகுதி நேர வகுப்புக்களின் பால்தானிருக்கும் அதற்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காகவே தன்னை தயார் படுத்திக் கொள்வார்கள்.

பாடசாலைகளிலே கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு சில ஆசிரியர்கள் சொந்தமாக கல்விக் கடைகளை வைத்துள்ளார்கள், சிலர் ஏனையோரின் கல்விக் கடைகளில் கற்றுக் கொடுக்கின்றார்கள் இவர்கள் பாடசாலை மாணவர்களிடத்தில் தனது கல்விக் கடைகளில் வகுப்பிற்கு வரச் சொல்லி மாணவர்களை அழைப்பதாகவும் முறைப்பாடுகள் உள்ளது.

இலங்கை அரசாங்கமும் பகுதி நேர வகுப்புகள் நடாத்துவதிலும், ஆசிரியர்கள் பகுதி நேர வகுப்புக்களுக்கு செல்வதிலும் கட்டுப்பாடுகள், தடைகள் விதித்திருந்தும் இவைகள் இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

01. பகுதி நேர வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் ஒரு போதும் பாடசாலைக் கல்வியை முதன்மையாக நம்பியிருப்பதில்லை அதே போல் ஆசிரியர்களும் அவற்றை பொருட்டாக கருதுவதில்லை.

02. பகுதி நேர வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்கள் பகுதி நேர வகுப்புக் கற்றல்களை பின்பற்றுவதா அல்லது பாடசாலை கல்வியைப் பின்பற்றுவதா என்ற குழப்பத்திலேயே இருப்பார்கள்.

03.பகுதி நேர வகுப்புக்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றது இதனால் ஏழை மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த சிரமமப்படுகின்றார்கள். நாளாந்தம் செலவுக்கே கஷ்டப்படும் குடும்பங்கள் குறித்த தொகையினை வாரம் ஒரு முறை எவ்வாறு செலுத்த முடியும்..??

04. பகுதி நேர வகுப்புக்களால் மாணவர்களுக்கு மன உளைச்சல், அதிக சுமை, நிம்மதியான துாக்கமின்மை, அமைதியின்மை போன்ற பல்வேறு உளவியல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகிறது.

05.பகுதி நேர வகுப்புக்கள் நடாத்தப்படும் இடங்களில் எப்போதும் இளைஞர்களின் நடமாட்டம் அதிகமிருக்கும் காரணம் நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

06. மாலைப் பொழுதுகளிலும் சரி, இரவு நேரத்திலும் சரி மாணவிகள் கூட்டம் கூட்டமாக, தனித்தனியா வீதிகளிலே பகுதி நேர வகுப்புக்களை முடித்து விட்டு உலா வருகின்றார்கள் இதனால் வீதிகளில் நெரிசல் ஏற்பட்டு விபத்துக்களும் சம்பவிக்கின்றன.

07. மிக முக்கியமாக பகுதி நேர வகுப்புக்களால் பாடசாலைக் கல்வியின் தரம் மிகக் குறைந்து விட்டது.

எமது பிள்ளைகளின் ஆரோக்கிய கல்வி நடவடிக்கைளின் நலன் கருதி நமது ஊர்களிலே இருக்கும் கல்விக் கடைகள் விடயத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், மாணவ-மாணவிகளை பாடசாலைக் கற்றல்களில் ஈடுபடுத்தி பாடசாலைக் கல்வியை தரம் கூடியதாக மாற்ற வேண்டும், பகுதி நேர வகுப்புக்களால் நமது பிள்ளைகளும், பெற்றோரும் அவதியுறுவது நிறுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top