விமானி ஒருவர் பறக்கும் விமானத்தில் ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்து செல்பி எடுத்ததாக வெளியான புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் வசித்து வரும் பிரேசில் நாட்டு விமானி ஒருவர், சமீபத்தில் துபாயில் உள்ள பாம் ஜுமைரா தீவுக்கு மேலே விமானத்தில் பறந்துள்ளார். அப்போது, விமானிகளின் அறையில் உள்ள ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தபடி செல்பி எடுத்ததாக கூறி, அந்த படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பாதி உடல் வெளியே தெரியும்படி உள்ள இந்த புகைப்படத்தின் பின்னணியில் துபாயின் பாம் ஜுமைரா தீவு தெரிவது போன்று உள்ளது. இந்த புகைப்படத்தை 15000 பேர் லைக் செய்து தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ள அதேசமயம், பலர் சந்தேகங்களையும் எழுப்பி கருத்தை பதிவு செய்துள்ளனர். படத்தின் உண்மைத்தன்மை குறித்தும் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

‘இது நிச்சயமாக உண்மையான புகைப்படமாக இருக்காது. Green Screen என்ற தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி போட்டோஷாப் செய்துள்ளார்’ என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ‘வானத்தில் பறந்துகொண்டு இருக்கும்போது விமானியின் தலைமுடி கலையாமல் நேராக இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ என சிலர் கூறியுள்ளனர்.

மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பறக்கும்போது எதிர் திசையை நோக்கி கையை வெளியே நீட்டி துல்லியமாக புகைப்படம் எடுக்க முடியாது. ஏனெனில், இவ்வளவு வேகத்தில் பறக்கும்போது அவரது கை ஆடாமலும், புகைப்படம் மிகவும் தெளிவாகவும் எடுக்க வாய்ப்பில்லை என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top