பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்த கவுரி லங்கேஷ் (வயது 55) என்ற பத்திரிகையாளர் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மதவாத கொள்கைகளை தீவிரமாக எதிர்த்து வந்தார். அவர் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் பற்றி முதல்-மந்திரி சித்தராமையா உயர் அதிகாரிகளுடன் நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்த பிறகு சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி விசாரிக்க ஐ.ஜி. தலைமையிலான ஒரு சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து உத்தரவிட்டுள்ளேன்.
கவுரி லங்கேஷ் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய தந்தை காலத்தில் இருந்து கவுரி லங்கேஷ் எனக்கு நன்றாக அறிமுகம் ஆனவர். கவுரி லங்கேஷ் வீட்டில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுடும் காட்சி பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சில துப்பு கிடைத்துள்ளது.
கவுரி லங்கேஷ் கொலையை கொண்டாடும் விதமாக முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.
கவுரி லங்கேஷ் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கண்தானம் செய்திருந்ததால் முன்னதாக, டாக்டர்கள் அவரது கண்களை எடுத்துச் சென்றனர். முதல்-மந்திரி சித்தராமையா அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மந்திரிகள், நடிகர் பிரகாஷ்ராஜ், முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள், கன்னட திரையுலகினர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
சாம்ராஜ்பேட்டையில் உள்ள சுடுகாட்டில் துப்பாக்கி குண்டுகள் முழங்க கவுரி லங்கேசின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பெங்களூருவில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கெளரி லங்கேஷ். அவரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே...
==============================================================
* கெளரி லங்கேஷின் தந்தை பி.லங்கேஷ், கர்நாடகாவில் பிரபலமான பத்திரிகையாளர், கவிஞர், திரைப்பட இயக்குநர். ‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற பிரபல கன்னட தினசரியை நடத்திவந்தார். இது, விளம்பரங்களே இல்லாமல், முழுக்க முழுக்க வாசகர்களை நம்பி நடத்தப்பட்ட பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது.
* 1962-ம் ஆண்டு பிறந்தவர் கெளரி லங்கேஷ். இவருக்குக் கவிதா லங்கேஷ் என்ற சகோதரியும், இந்திரஜித் லங்கேஷ் என்ற சகோதரரும் உள்ளனர். இருவருமே திரைப்பட இயக்குநர்கள்.
* தந்தையின் வழியில் பத்திரிகைத் துறையில் நுழைந்தவர் கெளரி லங்கேஷ். 1980-ம் ஆண்டு முதல் டைம்ஸ் ஆப் இந்தியா, சண்டே மேகஸின் போன்ற பத்திரிகையில் பணியாற்றி வந்தார்.
* 2000-ம் ஆண்டு இவரின் தந்தை காலமானார். தொடர்ந்து பத்திரிகையை யார் நடத்துவது என்பதில் கெளரி லங்கேஷூக்கும், சகோதரர் இந்திரஜித் லங்கேஷூக்கும் சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அதன்பிறகு, ‘கெளரி லங்கேஷ் பத்ரிகே’ எனத் தனது பெயரில் பத்திரிகை தொடங்கி, ஆசிரியராகப் பொறுப்பேற்றார் கெளரி.
* ஊடகங்களில் சுதந்திரத்தைப் பற்றி தொடர்ந்து குரல் கொடுத்தவர். அரசியல் தத்துவங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மக்கள் ஒடுக்கப்படுவதைத் தனது எழுத்துகள் மூலம் கண்டித்தவர். 2016-ம் ஆண்டு, “இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து கருத்துச் சுதந்திரத்தை முடக்கிவருகிறது” என்று ஒரு பேட்டியில் அழுத்தமாகத் தெரிவித்தார்.
* டெல்லி ஜவஹார்லால் நேரு பல்கலைக்கழத்தில் போராடிய கன்ஹையா குமாருக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தார் கெளரி லங்கேஷ். குஜராத் மாநிலத்தில், பசு காவலர்கள் தலித் மக்கள் மீது நடத்தும் வன்முறைகளை எதிர்த்து வருபவர், ஜிக்னேஷ் மெவானி (Jignesh Mevani). கன்னையா குமாரையும், ஜிக்னேஷையும் தன் சொந்த மகன்போல கருதினார் கெளரி.
* இந்தியாவில் நிலவிவரும் சாதி அமைப்பு பற்றியும், மதச்சார்புடைய அரசியல் அமைப்பைப் பற்றியும் கெளரி தொடர்ந்து தனது அனல் பறக்கும் எழுத்துகளில் வெளிப்படுத்தினார்.
* 2016-ம் ஆண்டு நவம்பரில், கர்நாடக பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த ப்ராஹலாத் ஜோஷி மற்றும் உமேஷ் துஷி பற்றி இவர் எழுதிய கட்டுரை பெரும் சர்ச்சையில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து, கெளரி மீது அவதூறு வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கில் கெளரிக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், தண்டனை வழங்கப்பட்ட அதே நாளிலேயே பெயிலில் வெளியில் வந்தார்.
* 2015-ம் ஆண்டு, மூத்த பத்திரிகையாளர் எம்.எம்.குல்பர்கி கொல்லப்பட்டபோது, “இந்துத்துவ அமைப்புகளும் மோடி ஆதரவாளர்களும் அவர்களுடைய தத்துவத்தை எதிர்ப்பவர்களைக் கொலை செய்வதை வரவேற்கின்றனர்’ என்று ஓங்கிக் குரல் கொடுத்தவர் கெளரி லங்கேஷ்.
* கெளரி கொல்லப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு, சிலர் அவரைப் பின்தொடர்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவருக்குப் புதிய எண்ணிலிருந்து அழைப்புகள் வந்ததாகவும், அவர் வசிக்கும் தெருவில் வெள்ளை நிற கார் கடந்த சில நாள்களாகச் சுற்றிவந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
* நேற்று அவர் தனது அன்றாட பணியை முடித்துக்கொண்டு, காரில் வீடு திரும்பினார். வீட்டு வாசலை நெருங்கியபோது, அவரை நோக்கி ஏழு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. அதில் மூன்று குண்டுகள் அவர் மீது பாய்ந்தன..
0 comments:
Post a Comment