சாய்ந்தமருது மக்கள்,

மேயர் பதவி ஒன்றிற்காக ஏமாளியாவார்களா?



சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையானது தற்போது உச்ச கட்டத்தை அடைந்துள்ளதை நாம் அறிவோம். இந்நிலையில் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றத்தை தருவதாக கடந்த காலங்களில் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து நிறைவேற்ற முடியாமல் போனமையை மறைப்பதற்காக, உரிமை மற்றும் அபிவிருத்தி எனும் மாயை காட்டி சாய்ந்தமருது மக்களை தொடந்தும் ஏமாற்றும் படலத்தை சில அரசியல்வாதிகள் முடிக்கி விட்டுள்ளனர்.
கடந்த முப்பது வருட காலமாக சாய்ந்தமருது மக்கள் தமக்கான உள்ளூராட்சி மற்றத்திற்காகப் போராடி வருவதுடன் இந்த மக்கள் 1987ம் ஆண்டின் பின் வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களிடமும் அரசியல் பிரதிநிதிகளிடமும் தமது கோரிக்கை குறித்து வலியுறுத்தி வருகின்றனர்.
சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தைப் பெற்றுத் தருவதாக பல தடவைகள் கூறியிருந்தபோதும் அது இன்றுவரை கைகூடாத நிலையிலேயே இருந்து வருகின்றது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அதாவுல்லாஹ் நான்காகப் பிரிக்க எடுத்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தியவர்களே, தற்போது கல்முனை நான்காகப் பிரிக்கப்பட வேண்டுமென கோரி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத் தக்கது.
அப்போதே, அதாவுல்லாஹ்வின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் தற்காலத்தில் கைசேதப்பட வேண்டிய தேவை இருந்திருக்காது. 'சோனி முட்டிய பிறகுதான் குனிவான்' என்ற கிராமத்துப் பழமொழியை சும்மா சொல்லவில்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளவும் முடியும்.
சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படாவிட்டால் தங்களது வாக்கு வங்கி பாரிய சரிவை எதிர்கொள்ளும் என்ற அச்சலிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வாயாலேயே 'தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி மன்றம் வழங்குவேன் என்று கடந்த பொதுத் தேர்தலில் வாக்குறுதி வழங்க வைத்தது. தேர்தல் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படாமலிருப்பது சாய்ந்தமருது மக்களை திட்டமிட்டு ஏமாற்றிய செயலாகும்.
தேர்தல் காலத்தில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை இதர கட்சிகளும் தங்களது தேர்தல்கால பேசு பொருளாக எடுத்துக் கொண்டமையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக களமிறங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் வழங்க தாங்கள் முயற்சி செய்வதாகவும் மேடைகளில் முழங்கினர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
'சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையானது ஒரு தேர்தல் கால காய்ச்சல் கோஷம்' என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் ஒரு முறை மலினப்படுத்திப் பேசியிருந்தை சாய்ந்தமருது மக்களால் என்றும் மறக்க முடியாதவர்களாவே உள்ளனர்.
கடந்த 2017.08.28ம் திகதி சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மற்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கான உறுதிமொழியை அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்கள் வழங்கியிருப்தாக, அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் STC தலைவர் ஜெமீல் ஆகியோர் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் சந்திப்பு மேற்கொண்ட படங்களுடனான செய்திகளை சமூக வலைத்தளங்களிலும் முகநூல்களிலும் காண முடிந்தது.
குறித்த செய்தி வெளியாகிய ஓரிரு தினங்களில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மற்றம் வழங்கப்படுவதால் கல்முனை மாநகரம் பாதிக்கப்படும் என்றும் கல்முனை மாநகர சபை முஸ்லிம்களின் கைகளில் இருந்து பறிபோய் விடும் என்ற கருத்துக்களையும் இதே சமூக வலைத்தளங்களிலும் முகநூல்களிலும் காண முடிந்தது.
பிந்திய தகவல்களிபடி கல்முனையைச் சேர்ந்த பள்ளிவாசல் பிரதிநிதிகள் இது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரைச் சந்தித்து தமது அதிருப்திகளை வெளியிட்டதாகவும், றவூப் ஹக்கீமின் தலையீட்டால்தான் குறித்த 2017.08.28ம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவில்லை என்ற வலுவான குற்றச்சாட்டுக்களை சாய்ந்தமருதில் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது.
இதேவேளை, அமைச்சர் றவூப் ஹக்கீமை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பிரதிநிதிகளும் கொழும்பில் சந்தித்து இது தொடர்பில் வலியுறுத்தியிருந்தபோதும் அவர்கள் வெறும் கையுடனே திரும்பியிருந்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் சாதகமான பதிலை றவூப் ஹக்கீம் வழங்காததையடுத்து, தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமைச் சந்திக்க சந்தர்ப்பம் பெற்றுத் தருமாறு சாய்ந்தமருது பள்ளிவாசல் பிரதிநிதிகள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட றவூப் ஹக்கீம் பிரதமரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதன்படி றவூப் ஹக்கீமையும் அழைத்துக்கொண்டு போய் பள்ளிவாசல் நிருவாகம் பிரதமரைச் சந்தித்தது. அதன்போது பிரதமர் 'நான் செய்து தருவேன்' என்ற கருத்துப்பட கூறினாரே தவிர குறித்த கால எல்லைக்குள் அதாவது இன்னும் இத்தனை நாட்களில் அல்லது இத்தனை மாதங்களில் செய்து தருவதாக சொல்லவில்லை என்றே அறிய முடிகின்றது.
பிரதமரின் அறிவிப்பும் சாய்ந்தமருது மக்களை 'கடல் வற்றி கருவாடு திங்கும் வரைக்கும் குடல் வற்றி செத்ததாம் பூனை' என்ற பழமொழிக்கு ஒப்பாக காத்திருக்க வைத்திருக்கின்றது.
இவ்வாறிருக்க மிக விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலொன்றை எதிர்நோக்கினால் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரத்தை தந்திரமாக கையாள முஸ்லிம் காங்கிரஸ் மேல் மட்டம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பேசப்படுகின்றது.
அதாவது, சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படாத நிலையில் தேர்தல் நடந்து கல்முனை மாநகர சபை ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுமானால் கல்முனை மநாகர சபையின் மேயாராக சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதன் மூலம் சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சி மன்ற கோஷத்திற்கு வாய் பூட்டு போடும் முயற்சிகளும் திரை மறைவில் நடந்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இதற்காக மு.காவில் இருந்து பிரிந்து சென்றவர்களை கட்சிக்குள் மீண்டும் உள்வாங்கி அவர்களில் ஒருவரை மேயராக்குவதற்கான பேச்சுவார்த்தைகளும் முடிக்கிவிடப்பட்டுள்ளன. இதற்கான பேரம் பேசல்கள் கட்டம் கட்டமாக நடைபெற்று வருவதாக அரசல் புரசலாகப் பேசப்படுகின்றது. இந்த வேளையில் கல்முனை மாநகர சபையைப் பிரித்து சாய்ந்தமருதுக்கு தனியான சபை வழங்க கூடாது என்று வாதிப்போர்களும் இந்த நடவடிக்கைக்கு துணைபோவதாகவும் பேசப்படுகின்றன.
கடந்த காலங்களில் சிறாஸ் மீராசாஹிபுக்கு இரண்டு வருடம் மேயர் பதவி கொடுத்தது போலல்லாது பதவிக் காலம் முழுவதும் சாய்ந்தமருதைச் சேர்ந்தவருக்கே வழங்குதற்கான மறைமுக ஒப்புதல்களும் ஏனைய தரப்பினர்களிடமிருந்து பெறுவதற்கான முனைப்புகளும் காட்டப்பட்டு வருகின்றமையை அறியக் கூடியதாகவுள்ளது.
எனவே, என்ன விலை கொடுத்தேனும் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி மன்றம் வழங்கக்கூடாது என்று கங்கணங்கட்டிக் கொண்டிருக்கும் தரப்பினர் தமது காரியங்களை மிகக் கச்சிதமாக செய்துவருகின்ற நிலையில் சாய்ந்தமருது மக்கள் சபை கிடைக்காவிட்டாலும் மேயர் பதவி கிடைத்தால் நம்மவரே மாநகரத்தை ஆளுவார் என்ற நப்பாசையில் இருப்பர்களேயானால் அப்படி நினைப்பவர்களை விட அறிவீனர்கள் வேறும் யாருமே இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம்.
மேயர் பதவியைப் பெற்றுக் கொண்டால், பதவி தந்த விசுவாசத்திற்காக கட்சித் தலைமைக்கு சேவகம் செய்கின்ற பொம்மையாக அந்த மேயர் இருப்பாரேயன்றி இன்னும் நான்கு வருடத்திற்கு சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் என்ற கதைக்கே இடமிருக்காது.
எனவே, மேயர் பதவிக்காக நமது ஊரின் சுயாதீனத்தையும் கௌரவத்தையும் தாரை வார்த்துக் கொடுப்பதா அல்லது நம்மை நாமே ஆள நமது சபையை வென்றெடுக்க அரசியல் தலைமைகளுக்கு அழுத்தம் கொடுப்பதா என்று சாய்ந்தமருது மக்கள முடிவெடுக்க வேண்டிய காலம் இதுவன்றி வேறில்லை.
எம்..சர்ஜுன்
சாய்ந்தமருது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top