இன்று இலங்கையில் காணப்படுகின்ற இஸ்லாமிய அமைப்புக்களை எடுத்துக்கொண்டாலும் சரி, அரசியல் கட்சிகளை எடுத்துக் கொண்டாலும் சரி, தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எந்த விடயத்திலும் மூக்கை நுழைக்காது தவிர்த்துக்கொள்வார்கள். இது ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்துக்கும் விதி விலக்கல்ல.

அமைச்சர் ஹக்கீம் ஜனாதிபதி மைத்திரியினை இரு கரம் கூப்பி கும்பிடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது பிழையான விடயம் என ஒரு சாராரும், சரியென இன்னுமொரு சாராரும் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். இது இஸ்லாம் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ஒரு மார்க்க ரீதியான அமைப்பின் கருத்து மிகவும் பொருத்தமானது.

இருந்த போதிலும் மார்க்க ரீதியான அமைப்புக்கள் பெரிதும் அரசியல் வாதிகளின் விடயங்களை தலை போட விரும்புவதில்லை. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் பத்வா கேட்பது வீண் வேலை. அதே நேரம் அவர்கள் அரசியல் வாதிகள் தொடர்பில் யாரையும் விமர்சித்ததாகவும் இல்லை.

ஆனால், தற்போது SLTJ இன் தலைவராக உள்ள றஸ்மின், அசாத் சாலியின் குடும்பத்தினர் மலர்த்தட்டு ஏந்தி விகாரை சென்ற விடயத்தை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். ஒரு அமைப்பு நீதியானதாக இருந்தால், ஒரு விடயத்தில் ஒரு அரசியல் வாதியை விமர்சித்தால், ஏனைய அரசியல் வாதிகள் பிழை செய்கின்ற போது அவர்களையும் விமர்சிக்க வேண்டும். அல்லாது போனால், SLTJ யினர் அசாத் சாலியை விமர்சித்தது மார்க்கத்தை அடிப்படையாக கொண்டல்லாமல், பழியை அடிப்படையாக கொண்டதென கூறி விடலாம்.

இதன் போது றஸ்மின் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை நோக்கி “அஷ்ரபுக்கு முர்த்தத் பத்வா வழங்கிய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவால், அசாத் சாலிக்கு பத்வா வழங்க முடியுமா ” என வினா எழுப்பி இருந்தார்.

இப்போது நான் கேட்கிறேன்

“ ஆசாத் சாலியை விமர்சிக்க முடிந்த உங்களால், அமைச்சர் ஹக்கீமை விமர்சிக்க முடியுமா? ”

நிச்சயமாக அமைச்சர் ஹக்கீமை SLTJ அமைப்பினால் விமர்சிக்க முடியாது. விமர்சிக்கவும் மாட்டாது. அவ்வாறு விமர்சிக்காமல் இருந்தால், இவர்களும் தங்களுக்கு எதிர்ப்பு வருமாக இருந்தால் மார்க்கத்தை மக்களுக்கு மத்தியில் கூறுவதை தவிர்ந்து கொள்வார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். முஸ்லிம்கள் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் மார்க்கத்தை கூற துணிவற்றவர்கள், அந்நிய மக்கள் மத்தியில் சென்று மார்க்கத்தை பரப்ப எந்த வித தகுதியும் அற்றவர்கள்.

இஸ்லாமிய அடிப்படையில் கும்பிடுதல் பிழையல்ல என அரசியலுக்காக இஸ்லாத்தை விட்டும் வேறு பாதை செல்லும் முஸ்லிம்கள் உருவாகிவிட்டனர். இதன் போதும் முஸ்லிம்களுக்கு தெளிவை உண்டுபண்ண இயலாதவர்கள், இனி இஸ்லாம் பேச வேண்டிய அவசியமில்லை.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top