சஹ்ரானின் கூட்டங்களுக்கு எதிராக
 2013,2014 ஆண்டுகளில்
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில்
11 முறைப்பாடுகளை செய்தோம்
நீதிமன்றத்தில் வழக்கும் பதிவாகியுள்ளது.
மௌலவி கே.ஆர்.எம். சஹ்லான்



சஹ்ரானின் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் செல்வார்கள். வஹாபிசத்தை பின்பற்றும் 20 பள்ளிவாசல்கள் காத்தான்குடியில் உள்ளது. சஹ்ரானும் ஆரம்பத்தில் வஹாபிசவாதியாகவே இருந்தார். இறுதியாக அது பயங்கரவாதமாக மாறியது. இன்றும் வஹாபிசம் என்று கூறிக்கொண்டு பலர் இயங்கி வருகின்றனர். இது எதிர்காலத்தில் பயங்கரவாதமாக மாறலாம் என்ற அச்சம் உள்ளது. அதற்கு நல்ல உதாரணம் சஹ்ரான் என - சூபி முஸ்லிம் பிரிவினை சேர்ந்த பிரதிநிதியாக பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாத் அமைப்பின் செயலாளர் மௌலவி கே.ஆர்.எம்.சஹ்லான் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் அல்லாத அனைவரையும் கொல்லவேண்டும் என்ற கருத்துக்களை வெளிப்படையாக சஹ்ரான் மூன்று சந்தர்ப்பங்களில் பேசினார். ஆனால் இது குறித்து எவருமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அகில இலங்கை ஜமியத்துல்லா உலமா சபை உள்ளிட்ட அனைவரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்று சூபி முஸ்லிம் பிரிவினை சேர்ந்த பிரதிநிதியான அல்ஹாஜ் ரஹுமான் மௌலவியிடம் விசாரணை நடத்தியது. இதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் கூறியதானது,

தாருல் அதர் அத்தாவியா என்ற அடிப்படைவாத அமைப்பை இவர்கள் உருவாக்கினர். பின்னர் ஜப்பானுக்கு சென்றார். சில மாதங்கள் தங்கியிருந்து மீண்டும் இலங்கைக்கு வந்தார்கள். வந்து தாருல் அதர் அத்தாவியா அமைப்பில் இணைந்து இயங்கி பின்னர் அதில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அதில் இருந்து வெளியேறி தேசிய தவ்ஹித் ஜமாஅத் என்ற அமைப்பை உருவாக்கினார்.

அப்போது ஆளுநர் அளவி மௌலான ஆயுத குழுக்கள் குறித்த எச்சரிக்கை விடுத்தது செய்தித்தாள் ஒன்றில் வந்தது. எவ்வாறு இருப்பினும் தேசிய தொஹித் ஜமாஅத் என்ற அமைப்பை சமூக சேவை குழுவாக பதிவு செய்து சாதாரண குடிசை ஒன்றில் இவர்கள் ஆரம்பித்தனர்.

இன்று இது பாரிய பள்ளியாக உள்ளது. இவர்கள் ஆரம்பத்தில் இருந்து சூபி முஸ்லிம்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து பிரசாரங்களை செய்தார். சூபிக்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்ற பிரச்சாரத்தை செய்தார். அப்போது தவ்ஹித் என்ற மாத சஞ்சிகை ஒன்றும் இவர்களால் வெளியிடப்பட்டது.

இந்த சஞ்சிகைகளில் சூபிகள் குறித்து கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்தார். சூபி முஸ்லிம்கள் பொதுவாக அன்னதானம் வழங்குவோம். இது எமது வழக்கம். இதனை பெற்று சாப்பிடுவது பன்றி இறைச்சியை சாப்பிடுவதற்கு சமமானது என்ற கருத்துக்களை வெளியிட்டார். துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக 2013,2014 ஆண்டுகளில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 11 முறைப்பாடுகளை செய்தோம். இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கும் பதிவாகியுள்ளது.

இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோதும் அவர் தனது பிரசாரத்தை கைவிடவில்லை. வழக்கும் கைவிடப்பட்டது. எமது மனதை புண்படுத்தும் செயற்பாடுகள் குறித்து மேஜர் ஜெனரல் லால் பெரேராவிடம் நாம் தெரிவித்தோம். அவர்கள் இவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் இதனைக்கூட அவர் பொருட்படுத்தாது மேஜர் ஜெனரலையே விமர்சனம் செய்தார்.

பின்னர் தேர்தல் வந்தது. அதன்போது காத்தான்குடியில் சில கட்சிகள் அவருடன் உடன்படிக்கை செய்தன. இக் காலத்தில் அவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டார். இந்த கட்சிகளுடன் அவர் செய்துகொண்ட உடன்படிகையில் பல அடிப்படைவாத கருத்துக்கள் இருந்தது. குறிப்பாக சூபி சமூகத்துக்கு எதிராக அவர் கருத்துக்களை முன்வைத்தார்.

காத்தான்குடியில் மாத்திரம் பத்தாயிரம் சூபி மக்கள் உள்ளனர். இவர்களுக்கு எதிராக பல மோசமான கருத்துக்களை முன்வைத்தார். இந்த உடன்படிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கைச்சாத்திடப்பட்டது.

கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக அவர் 2016 ஆம் ஆண்டு உரையாற்றியதுடன் மட்டுமல்ல அவர்களுக்கு எதிராக பேசிய கருத்துக்களை மட்டக்களப்பு தேவாலயங்களில் கையளித்தார். இதில் கிறிஸ்மஸ் தினம் குறித்தே அதிகமாக விமர்சித்தார்.

பௌத்தர்களுக்கு எதிராக அவர் பேசியதாக நான் அறியவில்லை. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் வெளிவந்த பழைய இறுவெட்டுக்களில் பெளத்த மதம் குறித்து பேசியதை நான் பார்த்தேன். அதுமட்டும் அல்ல 2016 இல் இலங்கைக்கு எதிராக, தேசியதிற்கு எதிராக அவர் உரை நிகழ்த்தினார்.

மூன்று தடவைகள் இவ்வாறு அவர் தேசிய எதிர்ப்பு கருத்துக்களை கூறினார். இதில் முஸ்லிம் இல்லாத அனைவரையும் கொல்லவேண்டும் என்று கூறியுள்ளார். பகிரங்க கூட்டத்தில் இவற்றை அவர் கூறினார்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பிற்காலத்தில் தீவிரவாதியாக மாறிய வரலாறுகள் நிறைய உள்ளது. அவ்வாறு தான் சஹ்ரானும் மாறியிருக்க வேண்டும். இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரானதாகவே தேசப்பற்று என்று கூறினார். தாய்நாட்டை நேசிப்பவர் முஸ்லிம் அல்ல. இலங்கையின் தேசிய கொடியை ஏந்தினால் இஸ்லாமிய ஆட்சிக்கு பாதிப்பு, இலங்கையில் இஸ்லாமிய கொடி பறக்க வேண்டும், இலங்கை நாட்டை முஸ்லிம்கள் கைப்பற்ற வேண்டும் என அவர் பேசினார். அதன் பின்னர் அவரது முகப்புத்தகத்தில் பல வன்முறை கருத்துக்கள் உள்ளது. இது குறித்த தகவல்களை உள்ளடக்கி கடிதமாக தயாரித்து ஜனாதிபதி காரியாலயம், நீதி அமைச்சர் காரியாலயம் (விஜயதாச ராஜபகஷ) பிரதமர் காரியாலயம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் காரியாலயத்தில், அமைச்சர் சாகல ரத்னாயாக அவர்களின் காரியாலயத்தில் கையளித்ததுடன் பொலிஸ்மா அதிபரிடமும் முறைப்பாடு செய்தோம். பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி நாலக டி சில்வாவிடமும் ஒரு பிரதியையும் வழங்கினோம். பின்னர் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்தது. இந்த விடயம் பிரதமர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்ற கடிதம் வந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்தும் பல கடிதங்கள் வந்தது.

பின்னர் காத்தான்குடி அலியார் சந்தியில் ஒரு பிரசார கூட்டத்தை சஹ்ரான் நடத்தினார். தேசிய தவ்ஹித் ஜமாஅத் இந்த கூட்டத்தை நடத்தியது. இதில் சூபி முஸ்லிம்களை முஸ்லிம்கள் அல்ல என நாம் ஏன் கூறுகின்றோம் என்பதே இந்த கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. இதன்போது அந்த இடத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது சூபி முஸ்லிம் ஒருவரை தவ்ஹித் ஜமாஅத் நபர் ஒருவர் வாளால் வெட்டினார். இன்னொருவரும் தாக்கப்பட்டார். இது குறித்த பொலிஸ் முறைப்பாடுகள் பதியப்பட்டது. இதில் ஒன்பது தவ்ஹித் அமைப்பினரும் சூபியை சேர்ந்த நால்வரும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் இவர் காத்தான்குடியில் இருக்கவில்லை. நாம் இந்த சம்பவம் குறித்து காத்தான்குடியில் முறைப்பாடு செய்தோம். அதன் பின்னர் சஹ்ரானை காணவில்லை. சஹ்ரான் மட்டும் அல்ல இவரது அமைப்பின் பலர் இருந்தனர். நியாஸ் என்ற நபர் தொடர்ச்சியாக இவற்றை பரப்பி வந்தார். சூபிகள் இஸ்லாமியர்கள் அல்ல என ஜம்மியத்துல் உலமா தீர்ப்பு வழங்கியுள்ளது என்ற கருத்துக்களை முன்வைத்தார்.

சூபிக்கள் முஸ்லிம்கள் இல்லை என ஜமியத்துல் உலமா ஒரு தீர்ப்பை நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டது. அதில் சூபிக்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. அதுமட்டும் அல்ல காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா சபை பல அடிப்படைவாத செயற்பாடுகளை செய்தது. நாம் முஸ்லிம்கள், எம்மையே கொலைசெய்ய வேண்டும் என ஜம்மியத்துல் உலமாக கூறுவது எம்மால் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது. (இந்தக் கருத்தை கூறிய போது அவர் அழுதார். தொடர்ச்சியாக காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா சூபிகளுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தனர்.

சூபிக்கள் முஸ்லிம் அல்லாதவர்கள், இவர்களுடன் தொடர்புகள் இருக்கக் கூடாது இவர்களை ஒதுக்கிவைக்க வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தனர். இதனை எதிர்த்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டோம். தவ்ஹித் ஜமாஅத் அமைபிற்கும் ஜமியத்துல் உலமா அமைபிற்கும் இடையில் எந்த நிறுவன ரீதியான தொடர்பும் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் இவர்கள் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கினர். இவர்கள் அனைவரும் இணைந்து சூபி முஸ்லிம்களுக்கு எதிரான தீர்மானத்தை வெளியிட்டனர். இன்றும் இந்த அமைப்பினர் காத்தான்குடியில் உள்ளனர்.

அடிப்படைவாதம் இருந்தால் தீவிரவாதம் வரும். இன்று நாட்டில் இவ்வாறு ஒரு விடயம் உருவாக நீண்டகாலமாக இவர்கள் மத்தியில் அடிப்படைவாதம் இருந்தது. இது வஹாபிசம். இந்த வஹாபிசத்தை பின்பற்றும் இருபது பள்ளிவாசல்கள் காத்தான்குடியில் உள்ளது. இலங்கை முழுவதும் வஹாபிசம் உள்ளது, இவர்களில் பலர் மத இறுக்கக் கொள்கை கொண்டவர்கள். ஆனால் மிக தீவிரமாக வன்முறையை தூண்டும் கருத்துக்களை பற்றி சஹ்ரான் வெளிப்படையாக பேசினார். சஹ்ரானைன் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் செல்வார்கள். இன்றும் வஹாபிசம் உள்ளது. சஹ்ரானும் ஆரம்பத்தில் வஹாபிசவாதியாகவே இருந்தார். இறுதியாக அது பயங்கரவாதமாக மாறியது. இன்றும் வஹாபிசம் என்று கூறிக்கொண்டு பலர் இயங்கி வருகின்றனர். இது எதிர்காலத்தில் அச்சுறுதலாக அமையலாம் என்றார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top