ஜிகா வைரஸ் நோயின் தீவிரம்

உலக சுகாதார அமைப்பு 1 ஆம் திகதி அவசரமாக கூடுகிறது

ஜிகா வைரஸ் நோயின் தீவிரம் குறித்து அவசரமாக கூடி, முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு 1 ஆம் திகதி ஜெனீவாவில் கூடுகிறது. இதை அந்த அமைப்பின் தலைமை இயக்குனர் மாக்கரெட் சான் தெரிவித்துள்ளார்
உலக நாடுகளின் கவனம் தீவிரவாதத்தில் இருந்து இப்போது ஜிகா வைரஸ் பக்கம் திரும்பி இருக்கிறது. டெங்கு காய்ச்சல் போன்று இந்த வைரசும் ஏடிஸ் வகை கொசுக்களால்தான் பரவுவதாக கூறப்படுகிறது.
1947-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஜிகா காட்டில் காணப்பட்ட குரங்குகளை இந்த வைரஸ் தாக்கியதை தொடர்ந்து அதற்கு ஜிகா வைரஸ் என பெயரிடப்பட்டது.
பிரேசில் நாட்டில் இருந்து பரவத்தொடங்கிய இந்த ஜிகா வைரஸ், இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் கால் பதித்துள்ளது.
இந்த வைரஸ் தாக்கிய 80 சதவீதம் பேருக்கு அறிகுறியே தெரியவில்லை. கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தாக்கி இருந்தால் அதை கண்டுபிடிப்பது கடினம் ஆகும். இவர்களுக்கு கர்ப்பம் தரித்த முதல் 3 மாதங்களில் ஜிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும்.
பிரேசிலில் இப்படி ஏறத்தாழ 4 ஆயிரம் குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தாக்கினால் அதற்கு சிகிச்சையும் இல்லை. வராமல் தடுப்பதற்கு தடுப்பூசியும் இல்லை என்பதால் உலக நாடுகள் அலறுகின்றன.
ஜிகா வைரஸ் 40 லட்சம்பேரை தாக்குகிற ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தின் அமெரிக்க பிராந்தியத்தின் தொற்றுநோய் வல்லுனர் மார்கோஸ் எஸ்பினால் கூறும்போது, “ஜிகா வைரஸ் 4 மில்லியன் பேரை தாக்கும் என எதிர்பார்க்கிறோம். இதை டெங்கு, சிக்குன்குன்யா நோய்களின் ஒன்றுவிட்ட சகோதரர் என கூறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நோயின் தீவிரம் குறித்து அவசரமாக கூடி, முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு 1ஆம் திகதி ஜெனீவாவில் கூடுகிறது. இதை அந்த அமைப்பின் தலைமை இயக்குனர் மாக்கரெட் சான் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top