உலகின் செல்வந்தர்கள் தரவரிசையில்

மீண்டும் முதலிடத்தில் பில் கேட்ஸ்


உலகின் செல்வந்தர்கள்  தரவரிசையில் 87.4 பில்லியன் அமேரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மைக்ரோசப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
உலகின் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தும் வெல்த்-எக்ஸ் (Wealth-X) இணையதளம் சொத்துகள், முதலீடு, லாபம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் உலகின் பெரும் செல்வந்தர்களை தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில், இந்த ஆண்டின் தரவரிசை பட்டியலுக்காக சுமார் ஒரு லட்சம் தொழிலதிபர்களின் பொருளாதார நிலையை சீராய்வு செய்ததில், மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான அமனிக்கோ ஆர்ட்டெகா 66.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தையும், 60.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் முதலீட்டு நிறுவன உரிமையாளரான வாரென் பஃபெட் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் 42.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். 42.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் பிளூம்பர்க் ஒன்பதாம் இடத்தை பிடித்துள்ளார்.
33.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் பிரபல வால்மார்ட் சங்கிலித்தொடர் வணிக வளாகங்களின் உரிமையாளரான அலைஸ் வால்ட்டன் என்ற பெண் தொழிலதிபர் பதினைந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
பில்கேட்ஸ் முதல் இடத்தில் இருக்கும் உலகின் மிகப் பெரும்  பணக்காரர்கள் பட்டியலில் 50 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, அஸிம் பிரேம்ஜி, திலிப் ஷாங்கி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
வெளியிடப்பட்டுள்ள பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி 27வது இடத்திலும், விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி 43வது இடத்திலும், திலிப் ஷாங்வி 44வது இடத்திலும் உள்ளனர்.
உலகின் பெரும் பணக்காரர்கள் 50 பேரின் மொத்த சொத்து மதிப்பையும் கூட்டினால் அமெரிக்க டாலரில் 1.45 டிரில்லியன்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே 29 பெரும் பணக்காரர்களைக் கொண்டுள்ள அமெரிக்கா, அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடாக மகுடம் சூட்டிக் கொண்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த 4 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பணக்காரர்கள் பட்டியலில் வெறும் 4 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top