பீக்கொக் மாளிகையில் இருந்து

இரண்டு மண்பானைகள், பாதணி மீட்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் மயில்மாளிகை நீச்சல் தடாகத்தில் இருந்து இரண்டு மண்பானைகள் மீட்கப்பட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ஸவுக்கு சொந்தமான பெருந்தொகைப் பணம் அவரது நெருங்கிய நண்பரான ஏ.எஸ்.பி. லியனகேவிற்கு உரித்தான பீக்கொக் பெலஸ் எனப்படும் மயில் மாளிகையின் நீச்சல் தடாகத்தினுள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அதற்கேற்ப குறித்த ஆடம்பர மாளிகையின் நீச்சல் தடாகமும் மணலால் நிரப்பப்பட்டிருந்தது.
இதனை அடத்து குறித்த நீச்சல் தடாகத்தை சோதனை செய்து உண்மையைக் கண்டறியுமாறு மாளிகையின் உரிமையாளர் ஏ.எஸ்.பி. லியனகே பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்கமைய பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டிருந்த மணல் இன்று மாலை பொலிஸாரின் விசேட கண்காணிப்புடன் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் நீச்சல் தடாகத்திலிருந்து இரண்டு மண்பானைகள் மீட்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
குறித்த மண் பானைகள் யாகம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த தடாகத்தில் இருந்து பாதணியொன்றும் மீட்கப்பட்டிருந்தது. மீட்கப்பட்ட பாதணி தமக்குச் சொந்தமானதென ஏ.எஸ்.பி. லியனகே அடையாளம் காட்டியிருந்த போதிலும், குறித்த பாதணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு உரித்தானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.  


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top