பிரபல நடிகை கல்பனா காலமானார்!

மலையாள - தமிழ் நடிகையான கல்பனா இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 51.
தெலுங்குப் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

நடிகை ஊர்வசியின் சகோதரியான கல்பனா, சின்னவீடு, சதிலீலாவதி, காக்கி சட்டை போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக 1983-ல் நடிக்க ஆரம்பித்தவர், இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நடிகை கல்பனா. மலையாள பட உலகில் திக் விஜயம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 1983–ல் பிரபல மலையாள கதாசிரியர் வாசுதேவ நாயரின் மஞ்சு (மூடுபனி) என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிறகு பிரபலமானார். அதன்பிறகு காமெடி வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.
'தனிச்சு அல்ல நான்' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். தமிழில் பாக்கியராஜ் ஜோடியாக 'சின்னவீடு' என்ற படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என 300–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கமலஹாசனுடன் 'சதிலீலாவதி', 'பம்மல் கே. சம்பந்தம்' ஆகிய படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழ் உள்பட பல மொழிப்படங்களில் நடித்து வந்தார்.
நேற்று ஒரு சினிமா பட சூட்டிங்கிற்காக நடிகை கல்பனா ஐதராபாத் சென்றார். அங்குள்ள ஒரு ஓட்டலில் அவரும், படக்குழுவினரும் தங்கியிருந்தனர். இன்று அதிகாலை நடிகை கல்பனா அவரது அறையில் மயங்கி கிடந்தார். படக்குழுவினர் அவரை மீட்டு அங்குள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். அவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்து போன கல்பனாவின் சகோதரிகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகிய 2 பேருமே திரையுலகில் கலக்கியவர்கள்.
இவர்களில் ஊர்வசி, நடிகர் பாக்கியராஜின் 'முந்தானை முடிச்சு' படம் மூலம் அறிமுகம் ஆகி தமிழ் பட உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்தார். இன்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கல்பனாவின் தந்தை வி.பி. நாயரும் ஒரு நாடக நடிகர் ஆவார்.
கல்பனாவின் உடல் இன்று விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கல்பனாவின் மரணம் பற்றி தெரியவந்ததும் மலையாள மற்றும் தமிழ் திரைப்பட கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது இறுதி சடங்கில் பங்கேற்கவும் அவர்கள் திருவனந்தபுரம் செல்கிறார்கள்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top