போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னரும்

பிரபாகரன் உயிருடன் இருந்தார்!
நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிப்பு


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்னதாகவே போர் முடிவடைந்து விட்டதாக அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸ அறிவித்தார் என்று போரை முன்னின்று நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.
நிதியமைச்சின் கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று  நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போது சரத் பொன்சேகா இந்தத் தகவலை வெளியிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
போர் முடிவுற்றதாக கூறப்படும் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்று விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தார். அதனை அறிந்தும்கூட அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஸ போர் முடிவுற்றதாக அறிவித்துவிட்டார். ஆனால் அன்றைய தினம் நடந்ததை நானும் அறிவேன்.
யுத்தத்தை வெற்றிகொண்ட பெருமையை அடைவதற்காக திட்டமிட்டபடி என்னை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். நான் நாடு திரும்பியவுடன் என்னை அலரிமாளிகைக்கு அழைத்து முப்படைகளின் தளபதி என்ற பதவிலியிருந்து விலகுமாறும் கடும் அழுத்தத்துடன் தெரிவித்தனர்.
அத்துடன் நாடு திரும்பிய மஹிந்த ராஜபக்ஸஃ யுத்த வெற்றியை தம்வசப்படுத்திக்கொள்ளும் நோக்கில் மண்ணைத் தொட்டு முத்தமிட்டார்.
கோத்தபாய  ராஜபக்ஸவும் யுத்த வெற்றியை தன்வசப்படுத்திக் கொள்ளும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தார்.
1990ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விலகியவர் எவ்வாறு போர் வெற்றிக் கிரீடத்திற்கு உரிமை கொண்டாட முடியும்
வௌ்ளைக்கொடி விவகாரத்தில் மூன்று வருடங்கள் தான் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையானேன். இந்த விடயம் தொடர்பில் உண்மையை கண்டறிய கட்டாயம் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்
சட்டதிட்டங்களை பின்பற்றியே யுத்தத்தை முன்னெடுத்தோம். சட்டங்களை மீறியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் பங்கு கொள்ள வேண்டும்
விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்கு பற்றல் குறித்து எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. தான் சட்டத்திட்டங்களுக்கு அமையவே இராணுவத்தை வழிநடத்திச் சென்றேன்.

வெளிநாட்டவர்கள் விசாரணைகளில் பங்கு கொள்வதானது, விசாரணைகளின் நம்பிக்கையை அதிகரிக்க செய்யும் இவ்வாறு சரத் பொன்சேகா  தெரிவித்த்ள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top