தமிழகத்தின் 6-ஆம் முறையாக முதல்வராகப் போவது யார்?

இன்று  வியாழக்கிழமை விடை தெரிந்துவிடும்



தமிழகத்தின் முதல்வராக 6-ஆம் முறையாக பதவியேற்கப் போவது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவா, திமுக தலைவர் கருணாநிதியா என்ற எதிர்பார்ப்புக்கு இன்று  வியாழக்கிழமை விடை தெரிந்துவிடும்.
கடும் போட்டிக்கு மத்தியில் தமிழகத்தை ஆளப் போகும் கட்சி எது?முதலமைச்சராக பதவி ஏற்க போவது யார்?
1967-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு தமிழகத்தில் திமுக முற்றுப்புள்ளி வைத்ததுபோல, அதிமுக, திமுக ஆகிய திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சிறிய கட்சிகள் முயற்சித்ததுடன், அந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் மறுத்துவிட்டன.
இதன் காரணமாக அதிமுக, திமுக, தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 6 முனைப் போட்டி ஏற்பட்டது.
இந்த 6 கட்சிகளும் வாக்குப்பதிவு முடிந்தும் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆனால், இந்த முறை அதிமுக அல்லது திமுக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புதான் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்குப் பிறகும் 10-க்கும் மேற்பட்ட கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. இந்தக் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் அதிமுக அல்லது திமுக ஆட்சி அமைக்கும் என்றே கூறியுள்ளன.
அதேசமயம் அதிமுக வெற்றிபெறும் என்ற கருத்துக் கணிப்பும் சரி, திமுக வெற்றிபெறும் என்ற கருத்துக் கணிப்பும் சரி இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசத்தைக் காட்டவில்லை. ஒரு கட்சியைவிட, மற்றொரு கட்சி 10-இல் இருந்து 20 தொகுதிகள் வரை கூடுதலாகப் பெறும் என்ற வகையிலேயே கணிப்புகள் வருகின்றன. இதனால், போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் பதவிக்குப் போட்டி: திமுக, அதிமுக ஆட்சியை வரவிடாமல் தடுப்பதற்கான கூட்டணி என்பதைவிட, இந்த முறை முதல்வர் பதவியை அடைய வேண்டும் என்பதற்காகவே கூட்டணி உருவாக்கப்பட்டது எனலாம்.
மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும், பாமக சார்பில் அன்புமணியும் முதல்வர் வேட்பாளர்களாகக் களம் கண்டனர். பாஜக தலைவர் தமிழிசை, நாம் தமிழர் கட்சி சீமான் ஆகியோர் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளர்களாக களம் கண்டனர்.
ஆனால், அதிமுக - திமுகவுக்கு இடையே போட்டி நிலவுவதன் மூலம் பலரின் முதல்வர் கனவுகள் சிதைந்துள்ளன. முதல்வர் பதவிக்கு ஜெயலலிதா, கருணாநிதி இடையேதான் மீண்டும் போட்டி நடைபெற்று வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 1991-ஆம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அதன் பிறகு 2001-லும், 2011-லும் வெற்றி பெற்று முதல்வராகப் பதவி வகித்தார். இதற்கிடையில் இரண்டு முறை பதவி விலக நேரிட்டு, மீண்டும் முதல்வராக அவர் பதவியேற்றுள்ளார். இந்த முறை அதிமுக வெற்றிபெற்றால், ஜெயலலிதா 6-ஆவது முறையாக பதவியேற்பார்.

அண்ணா மறைவுக்குப் பிறகு 1969-இல் முதல்வராக கருணாநிதி பதவியேற்றார். அதன் பிறகு 1971, 1989, 1996, 2006 தேர்தல்களில் வெற்றிபெற்று முதல்வராக இருந்துள்ளார். இந்த முறை திமுக வெற்றிபெற்றால் கருணாநிதி 6-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்பார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top