ஆட்சி அ.தி.மு.க.விடம்;
கடிவாளம் தி.மு.க.விடம்;
வெறுங்கையுடன் நிற்கும் விஜயகாந்த்
===================================
கருத்துக் கணிப்புக்கள் அனைத்தையும் பொய்யாக்கி வித்தியாசமான ஒரு முடிவைத் தந்திருக்கின்றது தமிழக சட்டசபைத் தேர்தல்.இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளையும் பின்தள்ளிவிட்டு மூன்றாவது அணி ஆட்சியைப் பிடிக்கும் என்று ஒரு கருத்துக் கணிப்பு சொன்னது.தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவருதற்கு முன் நடத்தப்பட்ட சில கருத்துக் கணிப்புக்கள் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என்றன.
தமிழக அரசியலைப் பொருத்தவரை ஒரு கட்சி தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் ஆட்சி அமைத்த வரலாறு 30 வருடங்களாக இல்லை.அதிமுகவும் திமுகவும் மாறி மாறியே ஆட்சி அமைத்து வந்தன.அதன் அடிப்படையிலும் இம்முறை திமுகவே ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்,அந்த ஊகங்கள்-கருத்துக் கணிப்புகள் எல்லாவற்றையும் பொய்யாக்கி 30 வருடங்களின் பின் ஒரு கட்சி தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் ஆட்சியைப் பிடித்த சாதனையை அதிமுக இந்தத் தேர்தலில் நிலைநாட்டியுள்ளது.
அதிமுக ஒருபுறம் அந்தச் சாதனையைப் படைத்தாலும் மறுபுறம் ,அது வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதைக் காணலாம்.அதேபோல்,திமுக தோல்வியைத் தழுவினாலும் அது கணிசமான அளவு முன்னேறி இருப்பதையும் காணலாம்.
இந்த இரண்டு கட்சிகளையும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளையும் தவிர வேறு எந்தக் கட்சியும் ஓர் ஆசனத்தைக் கூடப் பெறாமை அதிசயமாகும்.அதிலும்,ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பார்க்கப்பட்ட விஜயகாந்த் கட்சியின் படுதோல்வியானது பரிதாபகரமானதும் ஆச்சரியமிக்கதுமாகும்.
இந்தத் தேர்தல் ஆறு முனைத் தேர்தலாக அமைந்திருந்தது.அதிமுக,திமுக,மக்கள் நல கூட்டணி,பா.ஜ.க,நாம் தமிழர் கட்சி மற்றும் பா,ம.க ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் தனித்தனியாகவும் களமிறங்கின.
டம்மி பீசானார் விஜயகாந்த்
=========================
இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாக விஜயகாந்தின் தேமுதிக பார்க்கப்பட்டது.அவர் இணையும் கட்சி ஆட்சி அமைக்கும் என எதிர்வுகூறப்பட்டது.அதிமுகவை தவிர எல்லாக் கட்சிகளும் அவருடன் கூட்டணி அமைப்பதற்கு முயற்சி செய்தன;பேச்சுக்களில் ஈடுபட்டன.ஆனால்,அவர் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து பின்பு மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து கூட்டணி அமைத்துக் கொண்டார்.இதனால் அந்தக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பாக்கப்பட்டது.
ஆனால்,அந்தக் கூட்டணி ஓர் ஆசனத்தைக் கூடப் பெறாமல் மண் கவ்வியமைதான் பரிதாபத்திலும் பரிதாபம்.தனது ஆசனத்தைக் கூட விஜயகாந்தால் காப்பாற்ற முடியாமல் போனது.2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றிட்யீட்டிய பின் ஜெயலலிதாவுடன் முரண்பட்டுக் கூட்டணியில் இருந்து வெளியேறினார் விஜயகாந்த்.அப்போது அவரது கட்சி 29 ஆசனங்களைக் கொண்டிருந்தது.23 ஆசனங்களை கொண்டிருந்த திமுகவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி சட்டசபையில் பிரதான எதிர்கட்சி என்ற அந்தஸ்தை விஜயகாந்தின் கட்சி பெற்றது.
இந்த அந்தஸ்துதான் அவரை ஒரு பெரிய-மக்கள் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாகக் காட்டியது.அவரிடம் கணிசமான வாக்கு பலம் இருக்கின்றது என அனைவரும் நம்பினர்.கருத்துக் கணிப்புகளும் அவ்வாறுதான் கூறின.ஆனால், அதிமுகவில் போட்டியிட்டதால்தான்-ஜெயலலிதாவின் தயவால்தான் அவருக்கு 2 29 ஆசனங்கள் கிடைத்தன என்ற உண்மை இப்போது தெரிய வந்துள்ளது.
அதுபோக,அவர் தேர்தல் மேடைகளில் உளறிய உளறல்கள் அவரை மக்கள் மத்தியில் ஒரு செல்லாக் காசியாக மாற்றின.அவர் முதலைமைச்சர் பதவிக்குத் தகுதியற்றவர் என்பதை உணர்ந்த மக்கள் அவரைத் தோற்கடித்தனர்.விஜயகாந்தின் உளறல்கள் தினமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தலை நிமிர்ந்தது திமுக
=====================
அடுத்ததாக இந்தத் தேர்தலில் திமுகவின் நிலைமையை எடுத்துப் பார்த்தால் அது கணிசமான அளவு முன்னேறி இருப்பதை அவதானிக்கலாம்.2011 ஆம் ஆண்டு தேர்தலில் 23 ஆசனங்களை மாத்திரம் பெற்று பிரதான எதிர்கட்சி என்ற அந்தஸ்தைக் கூட இழந்த திமுக இந்தத் தேர்தலில் 89 ஆசனங்களைப் பெற்று முன்னேறி இருக்கின்றது.திமுக கூட்டணிக்கு 98 ஆசனங்கள் கிடைத்தன.
கடந்த காலங்களில் திமுகவின் குடும்பச் சண்டை உச்சத்தில் இருந்தும்கூட அடிமட்டத்தில் இருந்து கட்சியை மீளக் கட்டியெழுப்பும் பணியை திமுக செவ்வனே செய்து வந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.அந்தச் செயற்பாடுகள் திமுகவுக்கு நல்ல பலனைக் கொடுத்திருக்கின்றது.
அதிமுகவின் சரிவுக்கு காரணம் என்ன?
===================================
இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் ஆட்சியைப் பிடித்த பெருமையை அதிமுக தட்டிச் சென்றபோதிலும் மறுபுறம்,அக்கட்சி கடும் வீழ்ச்சியையே சந்தித்துள்ளது.2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 203 ஆசனங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.அவற்றுள் 150 ஆசனங்களை அதிமுக தனதாக்கிக் கொண்டது.ஆனால்,இம்முறைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 134 ஆசனங்களை மாத்திரமே பெற்றது.அவற்றுள் 131 ஆசனங்கள் அதிமுகவுக்கு உரியது.
அதுபோக,இம்முறை ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் அவர் 39,537 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.ஆனால்,2015 இல் அத்தொகுதியில் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் அவர் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அதனுடன் ஒப்பிடுகையில் ஜெயலலிதா இம்முறை தேர்தலில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளால் பின்தள்ளப்பட்டுள்ளார்.
அவரது கட்சியும் வீழ்ச்சியைச் சந்தித்து அவரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளநிலையில், வெறும் ஒரு வீத வாக்கு வித்தியாசத்தாலேயே திமுகவை பின்தள்ளி அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.அதிமுக 40.8 வீத வாக்கையும் திமுக 39.8 வீத வாக்கையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிமுகவின் இந்த வீழ்ச்சிக்குக் காரணம் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு விவகாரம் என்பதில் சந்தேகமில்லை.சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டபோதிலும்,மக்கள் அவரை குற்றவாளியாகவே பார்க்கின்றனர் என்பது இந்தத் தேர்தலில் தெளிவாகத் தெரிய வந்துள்ளது.
அதுபோக,இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை வைத்து அவர் நடத்திய அரசியலும் எடுபடவில்லை.ராஜிவ் காந்தியின் கொலையாளிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் தான் வெற்றி பெற்றால் தமிழீழத்தை உருவாக்குவேன் என்றும் ஜெயலலிதா கூறிய எவையும் எடுபவில்லை என்பதும் இதில் இருந்து விளங்குகின்றது.இதனால்,ஜெயலலிதா 19 ஆசனங்களை இழந்திருக்கின்றார்.
ஏனைய கட்சிகளின் நிலைமை
============================
ஏனைய கட்சிகளான பா.ம.க,நாம் தமிழர் கட்சி,இடது சாரிக் கட்சிகள் மற்றும் பா.ஜ.க போன்றவை ஆசனங்கள் எவற்றையும் பெறவில்லை.ஆனால்,திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட தேசிய காங்கிரசுக்கு எட்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன.2011 ஆம் ஆண்டு தேர்தலி 5 ஆசனங்களை வென்ற காங்கிரஸ் இம்முறை மேலதிக மூன்று ஆசனங்களால் முன்னேறியுள்ளது.அதே கூட்டணியில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஓர் ஆசனம் கிடைத்துள்ளது.
இடதுசாரிக் கட்சிகள் தங்களிடம் இருந்த 19 ஆசனங்களையும் இழந்து வெறுங்கையுடன் நிற்கின்றன.தமிழக வரலாற்றில் முதல் தடவையாக இடதுசாரிக் கட்சிகள் இல்லாத சட்டசபை அமையப் போகின்றது.பா.ஜ.க கடந்த முறைத் தேர்தலைப் போன்று இந்தத் தேர்தலிலும் ஓர் ஆசனத்தையும் வெல்லவில்லை.ஆனால்,அதன் வாக்கு வங்கி அதிகரித்திருக்கின்றது.வாக்கு விகிதத்தில் நான்காவது இடத்துக்கு அது முன்னேறியுள்ளது.
ஆகவே,இந்தத் தேர்தலில் அதிமுக 19 ஆசனங்களை இழந்து திமுக 66 ஆசனங்களை மேலதிகமாகப் பெற்றுள்ளது.பலமான எதிர்கட்சியாக மாறியுள்ளது.மூன்றாவது இடத்தில் இருப்பது எட்டு ஆசனங்களைக் கொண்டுள்ள காங்கிரஸாகும்.காங்கிரஸ் திமுகவின் கூட்டணிக் கட்சியாக இருப்பதால் இரண்டாவது கட்சியும் மூன்றாவது கட்சியும் திமுகதான்.ஆகவே,இந்த அரசியல் நிலைமை அதிமுகவுக்கு சாதகமாக அமையாது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
[எம்.ஐ.முபாறக்]
0 comments:
Post a Comment