.எஸ்  தீவிரவாதக் குழுவில் ஊடுருவி
ஆவணப்படம் பிடித்த செய்தியாளர்!

பிரான்ஸில் இஸ்லாமிய தேச (.எஸ்.) தீவிரரவாத அமைப்புக்கு ஆதரவான இளைஞர் குழுவில் ஊடுருவி, அவர்களது நடவடிக்கைகளை அந்த நாட்டுச் செய்தியாளர் ரகசியமாகப் படம் பிடித்துள்ளார்.
"சையது ரம்ஸி' என்ற புனைப் பெயரைக் கொண்ட அந்த செய்தியாளர், அவ்வாறு எடுக்கப்பட்ட விடியோ தொகுப்புகளைக் கொண்டு "கடவுளின் சிப்பாய்கள்' என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.
"பயங்கவாதத்தில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள விரும்பினேன்.
அதற்காக, அவர்களது குழுவில் இணைய முடிவு செய்தேன்' என்று தெரிவித்துள்ளார்ர் அவர்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
பயங்கரவாத ஆதரவுக் குழுவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது கடினமான காரியமாக  எனக்கு இருக்கவில்லை.
முகநூல் சமூக வலைதளங்களில் மதப் போரை வலியுறுத்தும் பதிவுகளைப் பின் தொடர்ந்தாலே, அந்தக் குழுக்களுடன் எளிதில் தொடர்பு கிடைத்துவிடும்.
அந்த வகையில், பிரான்ஸில் செயல்படும் ஒரு மதவாத இளைஞர் குழுவின் தொடர்பு எனக்குக் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, அந்தக் குழுவின் "அமீர்' (தலைவர்) என்றழைக்கப்பட்ட ஒசாமா என்பவரை பிரான்ஸின் மையத்தில் அமைந்துள்ள ஷாட்டரூ நகரில் சந்தித்தேன். பிரெஞ்சு துருக்கியரான அவரது தலைமையில் சுமார் 12 இளைஞர்கள் செயல்பட்டு வந்தனர். முதல் சந்திப்பிலேயே, தற்கொலைத் தாக்குதலுக்கு என்னைத் தயார்ப்படுத்த ஒசாமா முயற்சி செய்தார்.
தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுவோருக்கு சொர்க்கம் காத்திருப்பதாகவும், அங்கு அவர்களுக்கென்று தனி மாளிகை, இறக்கைகளுடன் கூடிய தங்கக் குதிரை, பெண்கள், சேவகம் புரிவதற்கு தேவதைகள் இருப்பார்கள் என்றும் ஆசை வார்த்தைகள் கூறினார்.
மற்றொரு முறை பாரீஸ் நகரில் அவரை சந்தித்தபோது, வானில் பறக்கும் ஒரு விமானத்தைக் காட்டி, "ஒரு சிறிய ராக்கெட் லாஞ்சர் இருந்தால் அந்த விமானத்தை எளிதாக சுட்டு வீழ்த்தி விடலாம். இஸ்லாமிய தேசத்தின் பெயரால் நீ செய்யக்கூடிய இந்தக் காரியத்தால், இன்னும் நூறு ஆண்டுக்கு பிரான்ஸ் நம்மைப் பார்த்து மிரளும்' என்றார்.
.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைவதற்காகச் சென்ற ஒசாமாவை துருக்கி அதிகாரிகள் கைது செய்து பிரான்ஸிடம் ஒப்படைத்தனர்.
பிறகு ஐந்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவரை, தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பொலிஸார் விடுவித்தனர்.
எனினும், "இன்ஸ்டாகிராம்' வலைதளம் மூலம் ஒசாமா தனது குழுவினருடன் ரகசியமாக தகவல்களைப் பரிமாறி, பாரீஸில் தாக்குதல் நிகழ்த்த சதித் திட்டம் தீட்டினார்.
அதன் பிறகுதான் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் "சார்லி ஹெப்டோ' பத்திரிகை அலுவலகத்தில் இரு சகோதரர்கள் தாக்குதல் நிகழ்த்தி 12 பேரைக் கொன்றனர்.
அவர்களது குழுவில் ஊடுருவி நான் தெரிந்து கொண்டதெல்லாம், பயங்கரவாதத்தில் இணையும் இளைஞர்களின் பேச்சுக்களில் இஸ்லாமிய மதம் குறித்தோ, உலக முன்னேற்றம் குறித்தோ எதுவுமே காணப்படவில்லை என்பதுதான்.
அவர்கள் அனைவரும் வழி தவறிய, விரக்தியடைந்த, தற்கொலை மனப்பான்மை கொண்ட, எளிதில் ஏமாறக்கூடிய இளைஞர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

கிடைக்காத ஒன்றைத் தேடி அலையும் அவர்கள், .எஸ். பயங்கரவாத அமைப்பு உருவாகியுள்ள காலத்தில் வாழ்வதுதான் அவர்களது துரதிருஷ்டம் என்று அந்த ஆவணப் படத்தில் சையது ரம்ஸி குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top