ஏறாவூர் இரட்டைப் படுகொலை
 சந்தேகநபர்களின்விளக்கமறியல்

நவம்பர் 02ஆம் திகதி வரை நீடிப்பு

இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி, ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு, இன்று 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 சந்தேகநபர்களையும், மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய எம்..எம். றிஷ்வி முன்னிலையில் மட்டக்களப்புச் சிறைச்சாலை அதிகாரிகளால் இந்தச் சந்தேகநபர்கள் அறுவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 24) – (கொல்லப்பட்ட பெண்ணின் கணவனுடைய சகோதரன்), அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த 'வசம்பு' என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது 29), பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹமது றாசிம் (வயது 23), பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த  இஸ்மாயில் சப்ரின் (வயது 30) மற்றும் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள்  கடந்த செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி  மீட்கப்பட்டன.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top