ஜம்மு-காஷ்மீரில் தொடரும் பதற்றம்
பாடசாலைக் கட்டடங்களுக்கு தீ

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3 கல்வி நிலைய கட்டடங்களை பிரிவினைவாதிகள் தீ வைத்து எரித்துள்ளது காஷ்மீரில் மீண்டும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் கடந்த ஜூலை 8-ஆம் திகதி, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பர்ஹான் வானி, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஜீலை 9 -ஆம் திகதி முதல் வானியின் ஆதரவாளர்களும், அப்பகுதி இளைஞர்களும் அவ்வப்போது கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் மீது தீ வைத்து வன்முறை மிகுந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் பாதுகாப்பு கருதி பதற்றம் நிறைந்த பகுதிகளில், கடந்த ஜூலை மாதம் 9-ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொடர் வன்முறையால் இதுவரை 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இயல்பு நிலை திரும்பியிருந்ததால், கடந்த 110 தினங்களுக்கு மேலாக அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை ஊரடங்கு உத்தரவு அண்மையில் திரும்பப் பெறப்பட்டாலும் அங்கு இன்னும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பள்ளிகளை தொடர்ந்து முடக்கும் விதமாக, பள்ளி கட்டடங்களுக்கு, பிரிவினைவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள், தீ வைத்து எரித்து வருகின்றனர்; கடந்த சில நாட்களில், 20-க்கும் மேற்பட்ட கல்வி நிலைய கட்டடங்கள் தீக்கிறையாக்கப்பட்டுள்ளன. அனந்தநாக் பகுதியில், நேற்று ஒரே நாளில் மட்டும் 3 கல்வி நிலைய கட்டடங்களுக்கு, அடுத்தடுத்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீரில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதில், கல்வி நிலைய கட்டடங்கள் முழுவதும் சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஜம்மு- காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் இரு தினங்களாக கல்வி நிலைய கட்டடங்களுக்கு தீ வைத்து வருவதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top