37வது நாளாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு
டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 37-வது நாளாக டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததில் காய்ச்சல் முதலில் குணப்படுத்தப்பட்டது.
அதன் பிறகு சளி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் முழு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் லண்டனில் இருந்து பிரபல டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே அப்பல்லோ வந்து சிகிச்சை அளித்தார்.
இதே போல் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் மற்றும் சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்களும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.
இதில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே நேற்று முன்தினம் இரவு லண்டன் சென்று விட்டார். இன்னும் ஒரு சில தினங்களில் அவர் மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல் நிலையை கவனிக்க உள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து மற்றொரு பிசியோதெரபி நிபுணரும் சென்னைக்கு வர இருக்கிறார்.
ஜெயலலிதாவின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் அ.தி.மு.க வினர் தொடர்ந்து சிறப்பு பூஜை அபிஷேகம், செய்து வருகின்றனர். அப்பல்லோ ஆஸ்பத்திரி வாசலிலும் அ.தி.மு.க மகளிரணியினர் தினமும் பூஜை நடத்துகின்றனர்.
0 comments:
Post a Comment