எம்.ஜி.ஆருக்குப் பின்னர்  ஜெயலலிதா
அப்போலோவில் ஒரு மாதம்

தமிழக  முதல்வருக்கு வந்திருக்கும் நோய்?

1984ல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போலோவில் ஒரு மாதம் வரை சிகிச்சைக்காகத் தங்கி இருந்தார். அவருக்கு அடுத்து நீண்ட நாட்கள் 2016ல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான்.,
கடந்த செப் 22ல் அப்போலோவின் விவிஐபி-க்களுக்கான அறை எண் 2008ல் அவர் அனுமதிக்கப்பட்டார். அது தொடங்கி, அவருக்கு காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, நாட்பட்ட சர்க்கரை வியாதி, நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, சுவாசப் பிரச்னை, இதயம் சார்ந்த நோய் என்று பல்வேறு செய்திகளைத் தன் அறிக்கை வழியாகப் பகிர்ந்து வருகின்றது அப்போலோ.
 அது தொடர்பான சிகிச்சைகளுக்காக லண்டன், சிங்கப்பூர் மற்றும் டெல்லியிலிருந்து நிபுணத்துவம் பெற்ற பல டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 10ல் ஜெயலலிதா., நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தங்கியிருக்க வேண்டும் என்ற செய்தியுடன் தனது அறிக்கைப் படலத்தைத் தற்காலிகமாக முடித்துக்கொண்டது அப்போலோ.
நீண்ட நாட்கள் என்பது எத்தனை நாள் என இறுதி செய்யப்படாத நிலையில் முதல்வரது அப்போலோ வாசம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. முதல்வருக்கு உடலில் இதுதான் சிக்கல் என்று இன்றளவும் எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை.
இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, உட்கார்ந்திருக்கிறார். மயக்க நிலையில் வைத்திருக்க மருந்துகள் எதுவும் தரப்படவில்லை, இது அவரது உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பெரிய முன்னேற்றம் என்கிற தகவல்களை மருத்துவமனை வட்டாரங்கள் பகிர்ந்துள்ளன.
மேலும் அவர் நுரையீரல் நீர் வீக்கத்திற்காகத்தான் மருத்துவமனையில் தங்கி நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்துவருகிறார். தற்போது சிகிச்சை அளிக்கும் மருத்துவர் குழு, மருந்தின் அளவுகளில் மாற்றம் கொண்டுவந்துள்ளதால்தான் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர். அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் மருத்துவர்கள் வட்டாரமே இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
பல்மனரி எடீமா (Pulmonary Oedema) எனப்படும் இந்நோய் நுரையீரலின் சுவாசப்பைகளில் அதிகமான நீர்க்கோர்ப்பு ஏற்படுவதால் உண்டாகிறது. இதயத்திலிருந்து ரத்தம் எடுத்துச் செல்லும் வால்வுகளில் பழுது ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடு பாதிக்கும். அதன் காரணமாக சுவாசப்பைகளில் திரவங்களின் சேர்மாணம் ஏற்படும். அது சுவாசத்தைக் கட்டுப்படுத்தும். நுரையீரலை வீக்கப்படுத்தும். வாழ்வினுடைய செயல்பாடுகளை சரிசெய்வது மட்டுமே இதற்கான சிகிச்சை முறை. திடீரென அதிகமாக வியர்ப்பது, மூச்சுப் பிரச்னை, சில நேரங்களில் இருமல் ஏற்படும்போது ரத்தம் கசிவது, சருமம் வெளுத்துப்போவது இவை தவிர கால்கள் வீங்கி கொள்வது, கல்லீரல் வீக்கம், மூச்சு விடும்போது ஒரு விதம் சத்தம் ஏற்படுவது, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும்.
இந்நிலையில், அப்போலோ வெளியிட்ட அறிக்கையில் அதிதீவிர சிகிச்சைபிரிவு மருத்துவ நிபுணர்கள், நுரையீரல் நோய் நிபுணர்கள், இதய நோய் நிபுணர்கள், மூச்சு பிரச்னைக்கான சிகிச்சை நிபுணர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், நீரிழிவு நோய் நிபுணர்கள் மற்றும் ஹார்மோன் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை குழுவினர் உள்ளடங்கிய மருத்துவர்கள் குழு, முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகத் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறதா? எப்போது மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார் என்பது போன்ற தகவல்கள் எதுவும் அதில் இல்லை.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top