முஸ்லிம்களுக்கு அரசியல் சுயமுகவரி பெற்றுத்தந்த
சரித்திர நாயகன் மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்
அன்னாரின் பிறந்த தினம் இன்றாகும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிறுவனத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆளுமை கொண்ட மறைந்த மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் பிறந்தந்தினம் இன்றாகும்.
தனித்துவத் தலைவராக விளங்கி தன் இனத்துக்காக இறுதிவரை போராடிய ஒரு தன்னிகரில்லா தலைவர்தான் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப்
முஹம்மது ஹுஸைன் (ஹுஸைன் விதானை) மதீனா உம்மா ஆகியோர்களுக்கு 1949 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் உள்ள சம்மாந்துறையில் இவர் 3 சகோதரிகளுடன் பிறந்தார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை கல்முனை பத்திமா கல்லூரியிலும் உயர்கல்வியை கல்முனை உவெஷ்லி உயர்தரக் கல்லூரியிலும் கற்றார்.
தனது பாடசாலை வாழ்வில் இன,மத மற்றும் குல பேதமின்றி அனைத்து மாணவர்களுடனும் அன்பாகப் பழகிய இவர் பாடசாலையில் இடம்பெறுகின்ற சகல நடவடிக்கைகளிலும் பங்குபற்றி தனது ஆற்றல்களை வெளிப்படித்தினார்.
தனது எதிர்கால எண்ணம்போல் சட்டத்தரணியாக தனது தொழிலை ஆரம்பித்த மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் ஃபேரியல் இஸ்மாயில் அவர்களை (முன்னாள் அமைச்சர்) காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். இவ்விருவருக்கும் ஒரு ஆண் மகனும் பிறந்தது.
சிறந்த பேச்சு வன்மையுள்ள சட்டத்தரணியாக, கவிஞனாக, ஊடகவியலாளனாக மற்றும் சிறந்த அரசியல்வாதி எனப் பல துறைகளிலும் இவர் பாண்டித்தியம் பெற்றிருந்தார்.
மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் தனது வாழ்வில் எழுதிய கவிதைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து 600 பக்கங்களைக் கொண்ட “ நான் எனும் நீ “ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இக்கவிதைத் தொகுப்பு எமது இலங்கை நாட்டில் மாத்திரமின்றி உலகில் வாழும் தமிழ் பேசும் மக்களின் வரவேற்பைப் பெற்ற நூலாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது.
இது மாத்திரமல்லாமல் தனது எழுத்தாற்றலால் மேலும் பல நூல்களை எழுதி வெளியிட்டார். முஸ்லிம் காங்கிரஸின் “ புதிய வெளிச்சங்கள் “ எனும் பாடல் தொகுப்பு இவராலேயே இயற்றப்பட்டது.
தன்னிடமிருந்த பேச்சுத்திறமை, வாதத்திறமை, இலக்கிய கலை இரசனை மற்றும் சட்டத்துறை வல்லுநர் என்பனவற்றை இணைத்து இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்காக அரசியலை மேற்கொண்டதால் அரசியலில் தடம் பதித்தார். இவரின் அரசியல் நடாத்தும் திறமை அனைத்து இன மக்கள் மத்தியிலும் இவரை பிரபல்யப்படுத்தியது.
தமிழ் மொழி பேசும் மக்களுக்காக குறிப்பாக இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்காக “ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் “ என்ற இயக்கத்தை முஸ்லிம் புத்திஜீவிகளை ஒன்றிணைத்து 1981 ஆம் ஆண்டில் தன்னை தலைவராகக் கொண்டு உருவாக்கினார்.
கல்முனையில் ஏற்பட்ட தமிழ், முஸ்லிம் இன முரண்பாடு மற்றும் அசாதாரண சூல்நிலை காரணமாக அன்னாரை கொழும்பு நோக்கி குடிபெயரச் செய்தது.
கொழும்பில் சட்டத்தரணி சுஹைர், மர்ஹும் எம்.பி.எம்.அஸ்ஹர் (நவமணி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்) போன்றோர்களுடன் ஒன்றிணைந்து இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் பல்வேறு விதமாகச் சிந்தித்தார்.
காலங்கள் கடந்தன அன்னாரால் உருவாக்கப்பட்ட“ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் “ 1988
ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி மரச்சின்னத்துடன் தேர்தல்கள் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் நுழைந்த மர்ஹும் அஷ்ரஃப் அவர்கள் தனது பேச்சாற்றலாலும் கணீரென்ற குரலினாலும் நாடாளுமன்றத்தையே அதிர வைத்தார். தமிழ் பேசும் மக்களின் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைக்காகவும் சுய கெளரவத்திற்காகவும் தனது நாடாளுமன்ற ஆசனத்தை திறம்பட பயன்படுத்திக்கொண்டார்.
1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து அதற்கமைய நாடாளுமன்றத் தேர்தலில் 9 ஆசனங்களைப் பெற்று இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மை இனக் கட்சிகளின் ஆதரவின்றி பெரும்பான்மை இன ஆட்சியாளர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்பதை நிருபித்துக் காட்டினார்.
1995 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி தனது பிறந்த நாளில் இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். ஒலுவிலில் ஒரு துறைமுகம் அவரது கனவாக இருந்தது.
“ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் “ ஒரு இனவாதக் கட்சி என பெரும்பான்மை இன அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கருத்துக்களைத் தெரிவித்ததனால் இக்கட்சிக்குள் இருந்தே “ தேசிய ஐக்கிய முன்னணி “ எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.
அன்னாரின் அரசியல் வாழ்க்கையென்பது வெறும் 10 வருடங்கள்தான்
1989 இல் நாடாளுமன்ற உறுப்பினரானவர் 2000 ஆம் ஆண்டு வபாத்தானார் . இந்த காலப்பகுதியில் இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று படுத்தி ஒரு பலமான சக்தியாக ஒரு கட்சியின் கீழ் ஒன்று திரட்டியது மட்டும்மன்றி பல்வேறு அபிவிருத்தி பணிகளையும் மேற்கொண்டார்.
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் சிறந்ததொரு மனிதராக அனைத்து விடயங்களிலும் சிறந்து விளங்கி ஸ்ரீ லங்கா வாழ் முஸ்லிம்கள்
மத்தியில் புரட்சியை ஏற்படுத்தினார்.
தற்போது பல பிரிவுகளாகப் பிரிந்து நின்று அரசியல் செய்து கொண்டிருக்கும் அனைவரும் ஒரு அணியில் ஒன்று சேர்ந்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அநீதிகளுக்கு குரல் கொடுப்பதே மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களுக்கு நாம் செய்யும் மாபெரும் கைமாறாகும்.
0 comments:
Post a Comment