நாடாளுமன்றிற்கு பஸ்ஸில் பயணித்த

எளிமையான எம்பியின் இன்றைய நிலை

பஸ்களில் ,மோட்டார் சைக்கிள்களில் பயணித்து-பெட்டிக் கடைகளில் சாப்பிட்டு-நடை பாதை கடைகளில் பொருட்கள் வாங்கி-மக்களோடு மக்களாக இருந்து அரசியல் செய்பவர்கள்தான் ஜேவிபியினர்.
ஆனால்,அப்படிப்பட்ட கட்சிக்குள்ளும் சிலர் சுகபோக வாழ்க்கையை விரும்பி இருந்தனர் என்பது விமல்வீரவன்ச அக்கட்சியை விட்டுச் சென்ற பிறகுதான்  தெரிய வந்தது.
அந்த விமல் வீரவன்சவுடன் சேர்ந்து ஜேவிபியை விட்டுச் சென்றவர்களுள்  ஒருவர்தான் இப்போதைய மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினரும் அப்போதைய அமைச்சருமான வீரகுமார திஸாநாயக்க.
வாகன துஷ்பிரயோகம் தொடர்பில் வீரவன்ஸ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வீரகுமார திஸாநாயக்கவிடமும் இந்த துஷ்பிரயோகம் தொடர்பில் பொலிஸார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ஒரு காலத்தில் மக்களோடு மக்களாக பஸ்ஸில் நாடாளுமன்றத்துக்கு வந்து போய் அரசியல் செய்த இவர் இறுதியில் வாகன துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கின்றது.
எனது ஊடக வாழ்க்கையில் நான் சந்தித்த இனிமையான சம்பவங்களுள் ஒன்று இது.2001 முதல் 2007 வரையான காலப் பகுதியில் நான் வத்தளையில் தங்கி இருந்தேன்.அது நான் நாடாளுமன்ற நிருபராக இருந்த காலம்.
பட்ஜெட் விவாத காலத்தின்போது நாடாளுமன்ற ஊழியர்களுக்காக இலங்கை போக்குவரத்து சபையால் அமர்த்தப்படும் பஸ்களிலேயே நானும் பயணிப்பதுண்டு.
இந்த வீரகுமார திஸாநாயக்க எம்பியும் அதே பஸ்ஸில்தான் மக்களோடு மக்களாக நாடாளுமன்றிற்கு வருவார்.இதைக் கண்டு வியப்படைந்த நான் இது தொடர்பில் அவரிடம் கேட்டபோது எம்பிக்கள் என்பதற்காக நாங்கள் அதி சிற்ப்புவாய்ந்தவர்கள் அல்லர்.மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்கு சேவை செய்யும் ஊழியர்கள்.எங்கள் வாழ்க்கை இப்படி எளிமையாகத்தான் இருக்கும் என்றார்.
அன்றிலிருந்து ஒரு மாதமளவில் நானும் அவரும் அந்த பஸ்ஸில்தான் நாடாளுமன்றிற்கு சென்று வருவோம்.நாடாளுமன்ற அமர்வு முடிந்ததும் நான் வத்தளையில் இறங்கிவிடுவேன்.அவர் தங்கொட்டுவைக்கு சென்றுவிடுவார்.
ஆனால்,அவர் ஜேவிபியை விட்டுச் சென்றபின் அதே எளிமையான வாழ்வு அவரிடம் இருக்கின்றதா என்பது கேள்விக்குறிதான்.தலைவன் எப்படியோ தொண்டனும் அப்படியே என்பார்கள்.இவரின் தலைவர் எப்படிப்பட்ட ஆடம்பரப் பிரியர் என்பதை நன்கு அறிவோம்.

[ M.I.Mubarak-Senior Journalist ]


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top