2020ஆம் ஆண்டளவில் நாடுஅனைத்து துறைகளிலும்

அபிவிருத்தி அடையும்

லக்சந்த செவனவீடமைப்புத் தொகுதியின்

இரண்டாம் கட்டம் கையளிக்கும் வைபவத்தில் ஜனாதிபதி

2020ஆம் அண்டளவில் நாட்டில் வீடு, நகர அபிவிருத்தி, விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட சகல துறைகளிலும் சிறப்பான முன்னேற்றத்தினை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்தினால் முடியுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு தேவையான உணவு. வீடு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளுக்காக சகல அரசாங்கங்களும் முன்னுரிமையளித்து செயற்படுவது அவசியமாகும். சில அரசாங்கங்கள் அதனை சரியாக இனங்கண்டுக்கொள்ளாமல் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் மாத்திரம் செயற்படுவதனால் எமது நாட்டில் குறைந்த வருமானமுடைய மக்கள் தமது வாழ்வாதாரம் தொடர்பாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்றும்  ஜனாதிபதி கூறினார்.


கொலன்னாவ சாலமுள்ள பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 396 வீடுகளை கொண்ட 'லக்சந்த செவன' வீடமைப்புத் தொகுதியின் இரண்டாம் கட்ட பணியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பொது மக்களிடம கையளிக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விடயங்களை குறிப்பிட்டார்.


புதிய பெருந்தெருக்கல் மற்றும் வானளாவ உயர்ந்த அலங்கார கட்டிடங்களில் அவதானிக்கும் செழிப்பு கொழும்பு நகரில் வாழும் மக்களின் வாழ்க்கையிலும் காணப்பட வேண்டும். பௌதீக வளங்களின் அபிவிருத்தியினால் கண்கள் குளிர்ச்சியடைந்தாலும் மக்களின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்த முடியாவிடின்  அந்த அபிவிருத்தி செயற்பாடுகளினால் பயனேதும் இல்லை என்றும்; தெரிவித்தார்.

நாட்டில் சகல மக்களையும் பொருளாதார ரீதியில் மேம்படுத்துதல் தற்போதைய அரசின் குறிக்காளாகும் என்பதுடன் இன்று நாட்டின் சகல துறைகளினதும் அபிவிருத்தியையும் விரைவபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், 2020ஆம் அண்டளவில் நாட்டில் வீடு, நகர அபிவிருத்தி, விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட சகல துறைகளிலும் சிறப்பான முன்னேற்றத்தினை பெற்றுக்கொள்வதற்கு அரசினால் முடியுமென தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

தற்போது ஒருசிலர் அரசாங்கத்தின் மீது  பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து  பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவதுடன் சில ஊடகங்களும் பாதகமான விடயங்களை மாத்திரம் தெரிவித்து தமது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள். ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் வரையறைகளுக்கு அப்பாற்பட்டு நாட்டுக்கு அழிவுகளை ஏற்படுத்த வேண்டாமென தான் அனைவரிடமும் கேட்டுக்கொள்வதாகவும் இவற்றின் பிரதிகூலங்களை அரசியல்வாதிகள் தனிப்பட்ட ரீதியில் பெற்றுக்கொள்வதில்லை. நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.

1188 மில்லியன் முதலீட்டில் நிர்மாணிக்கப்ட்ட 'லக்சந்த செவன' வீடமைப்புத் தொகுதி 396 வீடுகளைக் கொண்டுள்ளது. கொழும்பு பழைய களனி பாலத்திற்கு சமாந்தரமாக நிர்மாணிக்கப்படும் புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகளால் வீடுகளை இழந்த சேதுவத்தை, வதுள்ள வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 280 குடும்பங்களுக்கும் இத்திட்டத்தில் வீடுகள் வழங்கப்படும்.

கொழும்பு நகரத்தில் குறைந்த வசதிகளைக் கொண்டு பின்தங்கிய நகர் பிரதேசங்களை சிறந்த நகரமாக மாற்றுவதற்கு பெரு நகரம் மற்றும் மேல் மாகாண அஅபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுடன் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் 'திவிசுறு புறவற' நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைந்ததாக இந்த 'லக்சந்த செவன' வீடமைப்புத் தொகுதி நிர்மாணிக்கப்படுவதுடன் 450 சதுர அடிகளைக் கொண்ட ஒவ்வொரு வீடுகளும் இரு படுக்கை அறைகள், ஒரு வரவேற்பறை, ஒரு சமயலறை, விராந்தை மற்றும் சுகாதார வசதிகளைக்கொண்டது. இந்த வீடமைப்புத் தொகுதியை நிர்மாணிப்பதுடன், போக்குவரத்து வசதிகளை விரிவபடுத்தல், சனசமூக நிலையம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் விரிவுபடுத்தப்படுகிறது.
நினைவுப் பலகையை திரை நீக்கம் செய்து, வீடமைப்பு தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டார்,
அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, அர்ஜூன ரணதுங்க, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜப்பானிய தூதுவர் உள்ளிட்ட விருந்தினர்களும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top