என் தாயின் கல்லறையில் என்னையும் அடக்கம் செய்யுங்கள்’ - 

இங்கிலாந்தை உலுக்கிய சிறுவனின் கோரிக்கை

போலந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஃபிலிப்புக்கு  திடீரென்று உடல்நிலை மோசமானது. என்ன நோய் என்றே தெரியவில்லை. தாயைப் பறிகொடுத்தவன். தந்தைதான் சிறுவனுக்கு எல்லாமே. சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என பதை பதைத்துப் போகிறார் தந்தை. இங்கிலாந்து நாட்டுக்கு சிறுவனை அழைத்து செல்ல முடிவு செய்கிறார்.

இங்கிலாந்து புறப்படும் முன் , தாயின் கல்லறைக்கு செல்கிறான் சிறுவன். தாயின் கல்லறையில் விழுந்து வணங்கி ஆசி வாங்கிக் கொண்டான். தாயுடன் நின்று புகைப்படம் எடுப்பது போலவே... அந்த கல்லறைக்கு அருகில் நின்றும் புகைப்படமும் எடுத்துக் கொண்டான். அங்கேயே வர இருக்கிறோம் என்று தெரியவில்லை அந்தச் சிறுவனுக்கு. வாழ்க்கைதான் சில சமயங்களில் மிகவும் கொடூரமானதாயிற்றே!
போலந்து நாட்டைச் சேர்ந்தவர் Piotr Kwasny. இவரது மனைவி அக்னீஸ்கா. கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்தனர். இரு ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை. ஃபிலிப் என பெயரிட்டு செல்லமாக வளர்த்தனர். சிறிய குடும்பம். வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை அக்னீஸ்காவைப் புற்றுநோய் தாக்கியது. க்வான்சியால் மனைவியை காப்பாற்ற முடியவில்லை. உயிருக்குயிரான மனைவியை புற்று நோய் அவரிடம் இருந்து பறித்தது. போலந்து  நாட்டில் உள்ள Wadowice அக்னீஸ்காவின் சொந்த ஊர். அந்த சிறிய கிராமத்தில் மனைவியின் உடலை புதைத்தார் க்வான்ஸி.

தந்தையும் மகனும் தனியாக வாழத் தொடங்கினர். க்வான்ஸியால் மகனைத் தனித்து பார்த்துக் கொள்ள முடியவில்லை. மகனுக்காக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தார். ஒரு குழந்தை பிறந்தது. இரு குழந்தைகளை  தத்தும் எடுத்தனர். வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போதுதான், மகன் ஃபிலிப்புக்கும் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மகனைக் காப்பாற்ற லண்டன் கொண்டு செல்ல முடிவெடுத்தார்.

பல்வேறு கட்ட பரிசோதனைக்கு பிறகு சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பது தெரியவந்தது. துடித்துப் போனார் க்வான்ஸி. ஏற்கனவே மனைவியை புற்று நோய்க்கு பலி கொடுத்து விட்ட நிலையில், மகனுக்கும் புற்று நோய் என்றால்... எந்த தந்தையால்தான்  தாங்கிக் கொள்ள முடியும் ?
கடந்த 2013ம் ஆண்டு லண்டனில் உள்ள குழந்தைகள் புற்று நோய் மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். சற்று உடல் நிலைத் தேறி வந்த நிலையில் கடந்த செப்டம்பரில் ஃபிலிப்பின் உடல்நிலைமோசமானது. மூக்கில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. கால்களில் ரண வலி ஏற்பட்டது. தாங்க முடியாத வேதனையில் சிறுவன் துடித்தான். கடைசி கட்டமாக ஃபிலிப்புக்கு அளிக்கப்பட்ட கீமோதெரபியும், ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையும் அளிக்கப்பட்டது. எவையும்  பலன் அளிக்கவில்லை. தற்போது வலிநிவாரண சிகிச்சை மட்டுமே ஃபிலிப்புக்கு அளிக்கப்பட்டு வருகிறது
சிறுவனுக்கு தனது தனது வாழ்நாள் எண்ணப்படுவது தெரிந்தே இருந்தது. என்ன நினைத்தானோ தெரியவில்லை. 'நான் இறந்த பின், எனது உடலை தாயின் கல்லறையிலேயே அடக்கம் செய்து விடுங்கள்' என வேண்டுகோள் விடுத்தான்.
ஐந்து வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட மனைவியின் சவப்பட்டியைத் தோண்டி எடுத்து மகனின் ஆசையை நிறைவேற்ற போக்குவரத்து உள்ளிட்டவற்றிற்கு போதிய பணம் இல்லாத  நிலையில் இருந்தார் க்வான்ஸி. 6500 பவுண்டுகள் வரை ஆகும் என்ற தகவல் ஆன்லைனில் தகவல் பரவியது. இங்கிலாந்து நாடே உருகிப் போனது.   6,500 பவுண்டு நிதிஉதவி திரட்ட திட்டமிடப்பட்டது. இப்போதுவரை 37000 பவுண்டு நிதி திரட்டப்பட்டுள்ளதாம்.
லண்டனில் சிறுவன் ஃபிலிப் அனுமதிக்கப்பட்டுள்ள புற்று நோய் மையம் பிரசித்தி பெற்றது. புற்று நோயை தொடக்க நிலையில் கண்டுபிடித்தால், குணப்படுத்தி விடலாம். இந்த மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் குழந்தைகள், வார்டில் உள்ள மணியை மூன்று முறை அடித்து ஓசையை எழுப்புவார்கள். அந்த மணிச்சத்தம் மற்ற குழந்தைகளுக்கும் தைரியத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்பதால் இது ஒரு பாரம்பர்ய நிகழ்வாக இந்த மருத்துவமனையில் நிகழுமாம்.

"என் மகன் ஃபிலிப்பின் கரங்கள் மட்டும் அந்த மணியை நோக்கி நீளப் போவதில்லை.. நான் என் மகனை அடக்கம் செய்யவேண்டும் என்று நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. இந்த நிலை எவருக்கும் வரக்கூடாதுஎனது மனைவியின் கல்லறையில் மகன் புதைக்கப்பட்டால் சொர்க்கத்தில் அவனை அவள் பார்த்துக் கொள்வார் என்று நான் திடமாக நம்புகிறேன்என்கிறார் க்வான்ஸி.

மார்ச் மாத ஆரம்பத்திலேயே மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். வலிக்கான சின்ன சிகிச்சைகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகின்றன.

வாழ்க்கை சில சமயம் காட்டும் கோரமுகம், பார்க்கவே இயலாத அளவு கொடுமையானது. இவ்வளவுதான் வாழ்க்கை என்றானபின்னும், கோபம், வெறுப்பு, பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம் என்று வாழ்ந்து கொண்டிருப்பது அர்த்தமேயற்றது.
(சிகிச்சைக்கு முன்பும் இப்போதும்.. ஃபிலிப்)




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top