நீதிமன்ற அவமதிப்பு:

வேடிக்கை பார்த்த பொலிஸாருக்கு

மே மாதம் 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளை


திருகோணமலை நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளையை கிழித்து, காலுக்குக் கீழே போட்டு மிதித்து, தகாத வார்த்தைகளால் பேசிய சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை, மே மாதம் 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, திருகோணமலை நீதிமன்றம், வெள்ளிக்கிழமை (28) கட்டளை பிறப்பித்துள்ளது.
கடந்த 25ஆம் திகதி, கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் வேலையில்லாப்பட்டதாரிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது, திருகோணமலை தலைமையகப் பொலிஸாரினால் ஆர்ப்பாட்டத்துக்குத் தற்காலிகத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு, நீதிமன்றத்தைக் கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.
அவ்விண்ணப்பத்தை விசாரித்த திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, அமைதியான முறையில் பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாதவாறு நடந்துகொள்ளுமாறு, வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு கட்டளை பிறப்பித்தார்.
திருகோணமலை நீதிமன்றத்தினால் வழங்கிய கட்டளையை, வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆர்பாட்டத்துக்கு ஆதரவளித்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மூவர், தலைமையகப் பொலிஸாருக்கு முன்னால் கிழித்தெரிந்தனர்.
அவ்வேளையில், அச்செயற்பாட்டைப் பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டித்து, திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நீதிமன்றத்துக்கு முன்னால், கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று (29) முன்னெடுக்கப்பட்டது.


இதேவேளை, திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தினால் தலைமையகப் பொலிஸாரினால் கோவையிடப்பட்ட வழக்கினை நகர்த்தல் பிரேரணை மூலம் நீதிமன்றத்துக்கு அழைத்து விசாரணை செய்த போதே, திருகோணமலை பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் அவ்விடத்தில் கடமையாற்றிய பொலிஸ் பொறுப்பதிகாரிகளை, எதிர்வரும் 2ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்டார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top