வடக்கு மற்றும் கிழக்கில் மூன்று வீதிகளை
அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா உறுதி
சர்வதேச தரத்திற்கு நிகராக வடக்கு மற்றும் கிழக்கில் மூன்று வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா இணக்கம் வெளியிட்டுள்ளதாக அந்நாட்டின் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அந்நாட்டு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, யாழ்ப்பாணம் - மன்னார், மன்னார் - வவுனியா, தம்புள்ள - திருகோணமலை ஆகிய வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும், இதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உள்நாட்டு அனுமதி மற்றும் காணி சுவீகரிப்பு போன்றவை தொடர்பான பொறுப்புக்களை உள்ளூர் அமைப்புகள் பெற்றுக்கொண்டால் மாத்திரம் இது சாத்தியப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய சந்திப்பின் போது குறித்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான நிதி தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் விரிவான திட்ட அறிக்கை ஒன்றை தயாரிக்க குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாகவும், இறுதி அறிக்கையினை பெற்றுக்கொண்டே இந்திய அரசாங்கம் இந்த அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment