பட்டதாரிகளின் பதறல்
இன்று உலகில் சிறந்த வியாபாரம் செய்யும் நிறுவனங்களாக கல்வி நிறுவனங்களும் சுகாதார நிறுவனங்களும் காணப்படுகின்றன.இவை இரண்டும் உலகில் உள்ள அனைவருக்கும் நாளாந்தம் மிகவும் அவசியமானதென்பதால் இவற்றிற்கான கேள்விகளும் அதிகமாகும்.இலங்கை நாட்டை பல விடயங்களில் குறை கூறினாலும் கல்வி,சுகாதாரம் ஆகியவற்றில் இலங்கை நாட்டில் வழங்கப்படுகின்ற சலுகை போற்றத்தக்கது.இருப்பினும் இலங்கையின் கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென பலராலும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கு இலங்கையில் நடைமுறையில் உள்ள இலவச கல்வி மற்றும் சுகாதார முறைமை பிரதான காரணமாகும்.இலங்கை மக்கள் எழுத்தறிவில் மேன்பட்டவர்களாவர்.ஆண்டு ஒன்று முதல் பல்கலைக்கழகம் வரை இலங்கையில் இலவச கல்வி போதிக்கப்படுகிறது.கல்வி கற்க தேவையான பாடப்புத்தகம்,சீருடை ஆகியன கூட இலவசமாக வழங்கப்படுகின்றன.இது இலங்கை மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.உலகில் விரல் நீட்டி சொல்லக் கூடிய முக்கியமான நாடுகளில் கூட கல்விக்கு இத்தனை சலுகைகள் இல்லை.எமக்கு அண்மையில் உள்ள இந்திய நாட்டில் இலவச கல்வி முறைமை காணப்படுகின்ற போதும் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.இலங்கை நாட்டில் அரச கல்வி நிறுவனங்களே முதன்மை ஸ்தானத்தில் உள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது.இலங்கையில் எப்படி வசதி படைத்தவனும் தனது பிள்ளையை ஏ.எல் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறச் செய்து பல்கலைக்கழகம் புகுவதையே பெருமையாக கருதுவான்.இலங்கை நாடு அரச கல்வியை இந்த ஸ்தானத்தில் வைத்திருப்பதற்கு இலங்கை மக்கள் அனைவரும் இலங்கை நாட்டிற்கு நன்றி செலுத்த கடமைப் பட்டவர்கள்.இலங்கை அரசு அரச கல்வியை இந்த ஸ்தானத்தில் வைத்து பேணுவதாலேயே பல ஏழை மாணவர்கள் வசதி படைத்தோருக்கு சரி நிகராக கல்வி பயில்கின்றனர்.
இலங்கை நாட்டில் கல்வி பயிலும் ஒரு மாணவன் எப்போதும் ஏ.எல் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக்கழகம் செல்வதையே முதன்மை இலக்காக கொள்வான்.இதற்கு அடுத்த நிலை படிப்புக்களுக்கு இதன் பின்னரே வழி திறக்கப்படும்.ஒரு மாணவன் பட்டப்படிப்பை நிறைவு செய்வானாக இருந்தால் அதன் பின்னருள்ள மேற் படிப்புக்களை தான் வேலை செய்யும் நிறுவனத்தின் சலுகைகளினூடாக,தனது தொழிலின் மூலம் வரும் வருமானத்தின் ஊடாக,புலமை பரிசில்கள் மூலமாக அடைந்து கொள்ளலாம்.அதாவது ஒரு திறமைமிக்க ஏழை மாணவன் படிப்பின் உச்சத்தை அடைவதற்கு இலங்கை அரசின் கல்விச் சலுகைகள் வழி சமைத்துக் கொடுக்கின்றன.இலங்கையை பொறுத்தமட்டில் மிகப் பெரும் போட்டிக்கு மத்தியில் இலங்கை மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படுகிறார்கள்.இவ்வாறு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு இலங்கை அரசு இலவசமாக கல்வியை வழங்குகிறது.இதனை பூர்த்தி செய்த மாணவர்கள் இன்று தொழில் இல்லாமல் வீதியில் கறுப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இலங்கையில் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை தொழில் பிரச்சினை நிலவியே வருகிறது.எது எவ்வாறு இருப்பினும் கல்வித் துறையில் ஒரு வசதி படைத்தவனுக்கு நிகராக மிளிர வாய்ப்பளித்த இலங்கை நாட்டிற்கு குறித்த பட்டதாரிகள் எப்போதும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை எப்போதும் மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.தற்போது ஆர்ப்பாட்டம் செய்யும் ஒரு சில பட்டதாரி மாணவர்களிடையே நன்றி மறந்து செயற்படுகின்ற ஒரு தோற்றத்தை அவதானிக்க முடிகிறது.பட்டதாரிகள் ஒரு குறித்த துறையில் நன்கு பயிற்றப்பட்டவர்கள் என்பதால் இலங்கை நாட்டின் மிக முக்கிய இடத்தில் வைத்து போற்றத்தக்கவர்கள்.இவ்வாறானவர்கள் தான் இலங்கை நாட்டை அபிவிருத்தி பாதையில் பயணிக்கச் செய்ய முடியும்.இவர்கள் வீதியில் நின்று ஆர்ப்பாட்டம் செய்வதெல்லாம் அழகல்ல.இதனை சாதாரணமாக புறக்கணித்தும் செல்ல முடியாது.இவர்களின் ஆர்ப்பாட்டத்தை பல்வேறு கோணங்களில் நோக்க வேண்டிய தேவை உள்ளது.
தற்போது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்ற பட்டதாரிகளை இவ்வரசு பெரிதாக கணக்கில் கொண்டதாக தெரியவில்லை.வீதியில் செல்லும் அரசியல் வாதிகள் இவர்களை கண்டால் இறங்கி குசலம் விசாரித்து செல்வது போன்றே இவர்களின் ஆர்ப்பாட்ட நிலை உள்ளது.இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.இவர்களின் ஆர்ப்பாட்டம் எதனையும்,யாரையும் பாதிக்கவில்லை.மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் யாராவது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள்.கல்வித் துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.அச் செயல் அரசுக்கு சவாலாக அமையும்.இது ஒரு வகையான சவால்.இதே போன்று வீதியில் செல்லும் பஸ்களை உடைத்து ரௌடிகள் போன்று செயற்பட்டால் அதுவும் அரசுக்கு நேரடியான அழுத்தத்தை வழங்கும்.இவ்வார்ப்பாட்டக் காரர்கள் அந்த பாணிக்கு செல்லாமல் ஒரு அழகிய முறையில் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்வதால் அது அரசுக்கு தலைவலியாக அமையவில்லை.யாவரினதும் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை அரசு உணர்ந்து கொள்வது சிறந்தது.இன்று இலங்கை அரசு மஹிந்த ராஜபக்ஸவின் மூலமாக,சர்வதேசங்களின் மூலமாக,நாள் தோறும் இடம்பெறும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களினூடாகவென பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.இலங்கை அரச பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் எதிர்ப்புக்கள் வருடம் தாண்டியும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.தற்போது இலங்கை அரசு எதிர்கொண்டுள்ள சவால்களுடன் ஒப்பிடும் போது இது ஒரு சவாலே அல்ல.இவ் ஆர்ப்பாட்டத்தில் எதுவித வித்தியாசங்களையும் காண முடியவில்லை.பட்டதாரிகள் வீதியில் கொட்டில் அடித்து எதிர்ப்பை காட்டுவதால் என்ன நடந்துவிடப் போகிறது? இன்று புதுமையான ஆர்ப்பாட்டம் செய்வதில் தமிழ் நாட்டு விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் முறைமை முன்னுதாரணமானது.ஒரு நாளைக்கு எலியை உண்டும் மறு நாள் சாரி உடுத்தும் புல்லை உண்டுமென நாளுக்கு நாள் வித்தியாசமான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றனர்.இந்த வித்தியாசத்திற்காகவே இதனை ஊடகங்கள் நாளாந்தம் வெளிக்கொண்டு வரும்.ஏதோ ஒரு வகையில் இது தொடர்பான செய்திகள் வெளி வந்த வண்ணமிருக்கும்.இது அரசுக்கு தொடர்ச்சியான நச்சரிப்பை வழங்கிக்கொண்டே இருக்கும்.இதனை அடிக்கடி பார்க்கும் போது இதனை தீர்க்க வேண்டுமென்ற சிந்தனை எழும்.இப் பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தை சிங்கள மொழி ஊடகங்கள் பெரிதும் கணக்கில் கொள்ளவில்லை.இது வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் என்பதால் இதில் தமிழ் மொழியின் செல்வாக்கே அதிகம் காணப்படும்.இதனை சிங்கள மொழி ஊடகங்கள் கணக்கில் கொள்ளாமைக்கு இது ஒரு காரணமாக அமையலாம் பொதுவாக இன்றைய ஆட்சியாளர்கள் சிங்கள மொழி மூலமான ஊடகங்களையே அதிகம் பார்ப்பவர்கள்.இவ்விடத்தில் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளின் தீர்விற்கு சிங்கள மொழி மூலமான ஊடகத்தின் தேவை உணரப்படுகிறது.
இன்று இலங்கை நாட்டில் பட்டதாரிகள் மாத்திரம் தொழில் இன்றி அலையவில்லை.பல்வேறு மட்டத்திலும் தொழில் அற்றோர் உள்ளனர்.இதற்கு இலங்கையில் புதிதாக தொழில் வழங்கக் கூடிய நிறுவனங்கள் உருவாக்கப்படாமை பிரதான காரணமாகும்.ஒரு பட்டதாரிக்கு தொழில் வழங்க வேண்டுமாக இருந்தால் அதன் கீழ் நிலை கல்வித் தரமுடைய பலருக்கு தொழில் வழங்க வேண்டும்.அவர்களின் செயற்பாடுகளை கவனிப்பவர்களாக அல்லது அவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொடுப்பவர்களாகவே பட்டதாரிகள் அமைவார்கள்.அதாவது இங்கு நான் குறிப்பிட வருகின்ற விடயம் ஒரு பட்டதாரிக்கு தொழில் வழங்கும் போது அது பலருக்கு தொழில் வழங்க வேண்டிய நிலைக்கு இட்டுச் செல்வதால் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவது சாதாரண விடயமல்ல என்பதாகும்.தற்போதைய இலங்கை அரசின் பொருளாதார நிலமை மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது.இந் நிலையில் இப் பட்டதாரிகளுக்கு ஏதோ ஒரு வகையில் இப் பிரச்சினையை தீர்க்க தொழில் வழங்கி சமாளிக்கும் நிலையில் இலங்கை அரசில்லை.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் முதல் ஆட்சிக் காலத்தின் இறுதிக் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஒரு புறக்கணிக்கத்தக்களவான எண்ணிக்கையானோரை தவிர மற்ற அனைவருக்கும் தொழில் வழங்கப்பட்டிருந்தது.அதனை அவர் திறம்பட சமாளித்திருந்தமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.இவ்வரசு தோன்றிய போது தொழில் ரீதியான பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதும் அதனை நோக்கிய காய் நகர்த்தல்களை அவதானிக்க முடியவில்லை.
இன்று இலங்கை நாட்டில் சில அரச நிருவாக ரீதியாக தொழில் வாய்ப்புக்களே உள்ளன.இவைகள் மட்டுப் படுத்தப்பட்ட வேலை வாய்ப்பையே கொண்டுள்ளன.இச் சேவையில் இருந்து வருடமொன்றிற்கு வயது காரணமாக வெளியேறுபவர்களை தவிர அதிக எண்ணிக்கையான பல்கலைக்கழக பட்டதாரிகள்கள் உருவாக்கப்படுகிறார்கள்.இங்கு படித்தவர்கள் வேலையின்றி எஞ்சவே செய்வார்கள்.அரச தொழில் நிறுவனங்கள் மக்களுக்கு சேவை வழங்குவதை அடிப்படையாக கொண்டவை.இவைகள் இலாபத்தை அடிப்படையாக கொண்டதல்ல.இங்கு அதிகமான தொழில் வாய்ப்புக்கள் உருவாவதை எதிர்பார்க்க முடியாது.ஒரு நாட்டில் உற்பத்தி ரீதியான நிறுவனங்கள் உருவாகும் போது நாளுக்கு நாள் தனது நிறுவனத்தை முன்னேற்ற அந் நிறுவனம் சிந்திக்கும்.இதன் காரணமாக பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் உருவாகும்.இலங்கையில் கண்ணில் தென்படுகின்ற சிறிய பொருட்கள் உட்பட பெரும்பாலானவை வெளிநாட்டு உற்பத்தி பொருட்களே.இவைகளை இலங்கையில் உற்பத்தி செய்தாலே இலங்கையின் தொழில் தேவையை நிவர்த்திக்கலாம்.இலங்கை அரசு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் அனைவருக்கும் தொழில் வழங்க வேண்டுமாக இருந்தால் வயது காரணமாக வருடமொன்றிற்கு வெளியேறுபவர்களையும் புதிதாக உருவாக்க வேண்டிய தொழில் வாய்ப்புக்களையும் கணக்கிட்டு அவ் எண்ணிக்கையானவர்களுக்கு மாத்திரமே பல்கலைக்கழகம் சென்று கற்க வாய்ப்பளிக்க வேண்டும்.இவ்வாறு இலங்கை அரசு செய்திருந்தால் இன்று கறுப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் பலர் பல்கலைக்கழகத்தின் வாடையை கூட நுகர்ந்திருக்க மாட்டார்கள்.இலங்கை அரசினால் வருடமொன்றிற்கு எத்தனை மாணவர்களுக்கு பல்கலைக்கழக கல்வியை போதிக்க இயலுமோ அத்தனை மாணவர்களே பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார்கள்.இலங்கை அரசியலமைப்பின் 27 (2)(ஏ) சமத்துவமான கல்வி வாய்ப்புக்கான உரிமையை எல்லா பிரசைகளுக்கும் உறுதி செய்வதாக கூறுகிறது.இலங்கை அரச பல்கலைக்கழகங்ளுக்கு இலங்கை அரசால் கல்வி போதிக்க இயலுமானவர்கள் தெரிவு செய்யப்படுவதனூடாக சமத்துவமான கல்வி வாய்ப்பு என்ற இலங்கை அரசியலமைப்பின் இப் பகுதி மீறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசானது ஓ.எல் பரீட்சையில் ஒரு குறித்த பெறு பேறுகளை பெறுபவர்களுக்கே ஏ.எல் கற்க வாய்ப்பளிக்கின்றது.இதன் மூலம் குறித்த அடைவு மட்டத்தை பெறுபவர்களே ஏ.எல் கற்க தகுதியானவர்களாக கணக்கிடுகிறது.இங்கு மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படவில்லை.பல்கலைக்கழக மாணவர்கள் ஏ.எல் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படுகிறார்கள்.பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் உயர் தரப்பரீட்சையில் முதற் பெறுபேறுகளை பெறுபவர்கள்.இங்கு மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படுகிறது.இலங்கை நாடு தனது கல்வித் துறைக்கு அதிகமான நிதியை ஒதுக்கும் போது பல்கலைக்கழகத்தினூடாக இன்னும் அதிகமான பட்டதாரிகளை உருவாக்க முடியும்.இது கல்விப் புரட்சிக்கு வித்திடும்.இது போன்று மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் போது இலங்கை அரசு அதிகமான பட்டதாரிகளை உருவாக்க பின் வாங்கும்.இது இலங்கை நாட்டின் கல்விப் புரட்சிக்கு சிறந்ததல்ல.இவர்களின் ஆர்பாட்ட கோணம் பட்டதாரிகளின் தொழில்களை உறுதி செய்யுங்கள் என்றில்லாமல் இலங்கை அரசு இலங்கை மக்களின் தொழில் வாய்ப்பை உறுதி செய்யுங்கள் என்ற வகையில் அமைவது பொருத்தமானது.இன்று தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான தொழில் வாய்ப்பை தாங்களே தேடிக்கொள்வதை அவதானிக்க முடிகிறது.தனியார் கல்வி துறை நோக்கி பயணிப்பவர்கள் நாட்டின் கேள்வியில் உள்ள அல்லது தங்களுக்கு விருப்பமான தொழிலை நோக்கிய கற்கை நெறிகளை பயில்வார்கள்.இதன் காரணமாக மிக இலகுவாக தொழிலையும் பெற்றுக்கொள்வார்கள்.இவர்கள் அரசு தொழில் தர வேண்டுமென பெரிதும் எதிர்பார்ப்பதில்லை.இலங்கையில் கல்வி தனியார் மயமாவதன் சிந்தனைகள் இக் கருத்தினூடாக நான் தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்பவர்கள் அனைவரும் சிறந்த தொழில் வாய்ப்பை பெற்றுள்ளார்கள் என கூற வரவில்லை.அரச பல்கலைக்கழகங்களில் ஏ.எல் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலேயே (z.score) அவர்களுக்குரிய துறை கிடைக்கும்.சில வேளை குறித்த துறை தங்களுக்கு பிடிக்காத மற்றும் தொழில் கேள்விகள் குறைந்த துறை என்றாலும் அரச பல்கலைக்கழகத்தில் கல்வி பயில வேண்டும் என்பதற்காக பல்கலைக்ககழகங்களில் இணைந்து கொள்வார்கள்.ஒரு துறையில் மிளிர அத் துறை மீது இயல்பாகவே ஆர்வம் இருக்கக் வேண்டும்.ஒரு குறித்த துறையில் உச்சத்தில் நின்று மிளிர்த்தல் அத் துறையில் ஏதோ ஒரு வகையில் தொழிலொன்றை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.தொழில் கேள்விகள் குறைந்த துறையை கற்றால் தொழில் கிடைப்பது கடினம் தான்.இன்று பத்திரிகைகளிலே நாளாந்தம் ஏதாவது தொழிலுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும்.சண்டே ஒப்சேவரில் பல பக்கங்களில் தொழில் அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருக்கும்.திறமையுள்ளவர்கள் முதன்மை இடத்தை அடைவதன் மூலம் தொழிலை பெற்றுக்கொள்ளலாம்.இங்கு தொழில் கிடைக்காமல் இருப்பவர்கள் தொழில் கேள்விக் குரிய கற்கை நெறிகளை கற்காதவர்களும் குறித்த துறையில் உச்சத்தில் மிளிராதவர்களுமாவர்.இன்று ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் போட்டிப் பரீட்ச அற்ற தொழில் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.பரீட்சையை எதிர்கொள்ள ஏன் அச்சம்? ஒருவர் ஏ.எல் பரீட்சையில் முதன்மை பெறுபேறுகளை பெற்றாலே பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்படுவார்.இல்லை சித்தி பெற்ற அனைவரையும் தெரிவு செய்யுங்கள் என்றால் அது சாத்தியமல்ல.அது போன்ற நிலை தான் போட்டிப் பரீட்சை இன்றி பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கப்பட வேண்டுமென்ற பட்டதாரிகளின் கோரிக்கையாகும்.
இன்று வடக்கு,கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பட்டதாரிகளே இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.ஏனைய மாகாணங்களில் உள்ள பட்டதாரிகள் மௌனமாக இருப்பதற்கான காரணம் என்ன? வடக்கு,கிழக்கு மக்களின் மனோ நிலையானது அரச தொழில் துறையை நோக்கியதாகவே உள்ளது.அதே நேரம் ஏனைய மாகாணங்களை சேர்ந்த மக்கள் தனியார் துறையை நோக்கியும் பழக்கப்பட்டு வருகிறார்கள்.அது போன்று பெரும் பான்மையின மக்களின் வாழ்க்கை முறையை எடுத்து நோக்கினால் படித்தவன் என தம்பட்டம் அடிக்காது சாரனை மடித்து கட்டிக் கொண்டு வயலில் வேளாண்மை செய்வார்கள்.இதன் காரணமாக அவர்களுக்கு ஒரு சிறு தொழில் கிடைத்தாலும் அவர்களுக்கு துணையாக இன்னுமொரு தொழில் இருப்பதால் தங்களது தேவைகளை சமாளித்துக் கொள்வார்கள்.தங்களது வீடுகளில் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான மரக்கறி வகைகளை நட்டிருப்பார்கள்.அவர்களின் வாழ்க்கை செலவு மிகக் குறைவாகவே காணப்படும்.இதன் காரணமாக அவர்களுக்கு சிறிய தொழில் கிடைத்தாலும் அதனை வைத்து சமாளித்துக் கொள்வார்கள்.பெரிதும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.தங்களது படிப்புக்கேற்ற தொழில் கிடைக்கும் வரை எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்.வடக்கு,கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஓரளவு படித்தவர்கள் கூட தாங்கள் படித்த படிப்பை நோக்கிய தொழில்களையே பெரிதும் எதிர்பார்த்திருப்பார்கள்.ஊதியம் அதிகம் வழங்கினால் மாத்திரமே செல்வார்கள்.இங்கு வாழ்க்கை செலவும் அதிகமாக காணப்படும்.அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாழ்க்கை செலவு மிகவும் அதிகமாகும்.
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பாரிய கைத் தொழில் பேட்டைகளோ அல்லது பாரிய தனியார் மற்றும் அரச நிறுவனங்களோ இல்லை.படித்த பட்டதாரிகள் தனியார் துறையுடன் ஒன்றிணையும் வசதியுமில்லை.இதற்கு வடக்கு,கிழக்கு மாகாண அரசியல் வாதிகளே வகை கூற வேண்டும்.வடக்கு,கிழக்கு மாகாணத்தில் மிக நீண்ட காலமான யுத்தம் நிலவியதன் காரணமாக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பாரிய நிறுவனங்கள் நிறுவப்படாமைக்கு தமிழ் அரசியல் வாதிகளை பொறுப்புக் கூற முடியாது.முஸ்லிம் அரசியல் வாதிகளை பொறுத்தமட்டில் அவர்கள் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களுடனேயே இருந்தார்கள்.இருக்கின்றார்கள்.இவர்கள் இவ்வாறான தொழில் வழங்கங்களை சிந்தித்து தனியார் நிறுவனங்களை நிறுவ முயற்சித்திருக்க வேண்டும்.முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்களது பொக்கட்டுகளை நிரப்புவதிலேயே அதிக அக்கறை கொண்டவர்கள்.கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் இலங்கையில் நெல் உற்பத்தி செய்வதில் முதன்மையான மாவட்டங்களில் ஒன்று.இங்கு நவீன வசதிகளுடன் கூடிய நெல் குற்றும் ஆலைகள் இல்லை.அங்கு உற்பத்தியாக்கப்படும் பெருமளவான நெல்கள் அனுராதபுரம்,பொலநறுவை ஆகிய இடங்களுக்கே ஏற்றப்படும்.கிழக்கு மாகாணத்தில் மீன் வளமிக்க கடல் காணப்படுவதால் இதனை மையமாக கொண்ட பல்வேறு நிறுவனங்களை நிறுவலாம்.அதாவது இம் மாகாணங்களில் உள்ள வளங்களை பயன்படுத்தி அமைக்க முடியுமான நிறுவனங்கள் கூட இன்னும் அமைக்கப்படவில்லை.இப்படி இருந்தால் தொழில் தட்டுப்பாடு நிலவாமல் இருக்குமா? இது போன்று வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்கின்ற மக்கள் சிங்கள மொழி புலமை குறைந்தவர்களாக இருப்பார்கள்.மொழி என்பது அறிவல்ல.இருப்பினும் தொடர்பாடலுக்கு அது முக்கியமானது.வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் எங்காவது தொழில் புரிய வேண்டுமாக இருந்தால் சிங்கள மொழி அவசியம்.அதிகமான தனியார் நிறுவனங்கள் சிங்கள மொழி புலமை உடையவர்களையே தொழிலுக்கு தெரிவு செய்வார்கள்.அப்போது தான் தனியார் நிறுவனங்களில் தொழிலை தேடி பெற்றுக்கொள்ள முடியும்.வடக்கு,கிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற மக்களுக்கு சிங்கள மொழி புலமை காணப்படுவதால் அவர்கள் மிக இலகுவாக ஏதாவதொரு தொழிலை பெற்றுக்கொள்வார்கள்.இலங்கையில் மிக அரிதாகவே ஆங்கில மொழிப் புலமை பயன்படும்.சிங்கள மொழியுடன் ஆங்கில அறிவும் இருந்தால் இன்றைய தொழில் சந்தையில் அவ்வாறானவர்களின் விலை அதிகமாகும்.
இன்று ஆர்ப்பாட்டம் செய்பவர்களில் அதிகமானவர்கள் கலைத்துறை பட்ட தாரிகளே.இவர்களின் ஆர்ப்பாட்டத்தில் வைத்திய பட்டதாரிகளோ அல்லது பொறியியல் பட்டதாரிகளோ ஒருவர் கூட இருக்க மாட்டார்கள் என்பதை உறுதி பட நம்பலாம்.இன்றைய தொழில் சந்தையில் இவர்களுக்கான கேள்விகள் அதிகம் இருப்பதால் அவர்களுக்கு இவ்வாறான ஆர்ப்பாட்டம் செய்யும் தேவை இல்லை.நாங்கள் பல்கலைக்கழகம் சென்று கற்றும் தொழில் இன்றி இருப்பதா என்ற கேள்விகளை குறித்த பட்டதாரிகளிடையே அவதானிக்க முடிகிறது.உடனடியாக தொழில் வேண்டுமென்றால் பொறியியல்,மருத்துவம் போன்ற தொழில் கேள்வி நிலவுகின்ற துறைகளை இவர்கள் தெர்தேடுத்திருந்தால் இந் நிலை வந்திருக்காது.இன்று தொழில் செய்கின்ற கலைத் துறையை சேர்ந்த பட்டதாரிகளில் அதிகமானவர்கள் தாங்கள் கற்ற கல்விக்கும் செய்யும் தொழிலுக்கு சிறிதும் சம்பந்தமற்ற தொழிலை செய்பவர்களே அதிகமாகும்.பல்கலைக்கழகம் என்பது கல்வியை போதிக்கும் இடமே தவிர அங்கு இணைபவர்களுக்கு தொழில் ரீதியான வழி காட்டும் இடமல்ல.உதாரணத்திற்கு மொழித் துறையை எடுத்து நோக்குவோம்.ஒரு மாணவன் மொழியில் பாண்டித்தியம் பெறுவதன் மூலம் என்ன தொழில் செய்ய முடியும்? அது அறிவே தவிர தொழில் வழி காட்டலல்ல.அதே நேரம் இலங்கையில் மொழி பெயர்ப்பு ரீதியான கற்கை நெறிகள் உள்ளன.இதனை கற்கும் ஒருவன் ஒரு மொழியை இன்னுமொரு மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்ய முடியும்.இதனை தொழில் ரீதியான கற்கை நெறியாக கொள்ளலாம்.ஒரு மனிதனுக்கு கல்வி போதிக்கப்படுவதனூடாக அம் மனிதன் குறித்த துறையில் முறையான அறிவை பெறுகிறான்.விவசாய பட்டதாரிகளை எடுத்துக் கொள்வோம்.அவர்கள் எங்காவது சென்று ஒரு பதவியை பெற்று உழைக்கவே விரும்புகின்றனர்.ஒரு விவசாய பட்டதாரி அவன் கற்றவைகளை கொண்டு சிறந்த முறையில் விவசாயத்தில் செய்து வாழ சிந்திப்பதில்லை.அதாவது சுய தொழில் வழி காட்டல்கள் சிந்தனைகள் இலங்கை மாணவர்களிடையே விதைக்கப்பட வேண்டும்.இலங்கையின் பாட விதானங்கள் தொழில் துறையை மையமாக கொண்டு மாற்றப்படல் வேண்டும்.இவற்றை கருத்திற் கொண்டே 1972ம் ஆண்டு காலப்பகுதியில் தொழில் முன்னிலைப் பாடம் காட்டாயமாக்கப்பட்டிருந்தது.இலங்கையின் கல்வித் துறையினுள் விவசாயம்,மனையியல்,கைத்தொழில் போன்ற பாடங்கள் உட் புகுத்தப்பட்டன.இருந்தாலும் இவைகள் ஒரு மாணவனுக்கு தொழிலை நோக்கிய சிந்தனைகளில் வெற்றியளிக்கவில்லை என்றே கூற வேண்டும்.
போட்டிப் பரீட்சைகளில் அரசியல் தலையீடுகள் மலிந்து கிடக்கின்றன.இதன் விளைவால் இன்று அதிகமான இளைஞர்கள் அரசியல் வாதிகளின் பின்னால் அலைந்து வால் பிடித்து திரிகின்றனர்.எது எவ்வாறு இருப்பினும் இலங்கை அரசு ஏனைய அனைத்து விடயங்களையும் புறந்தள்ளி தொழில் புரட்சி நோக்கி சிந்திக்க வேண்டிய காலமிது.
குறிப்பு:.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
0 comments:
Post a Comment