மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததினால்

முழுமையாக பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு வீடுகள்

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததினால் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் முழுமையாக பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பதிலாக ஆய்வுப்பிரிவுத் தலைவர் கே.ஒஸ்மன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
21.04.2017
ஊடக அறிக்கை
2017.04.21ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற முன்னேற்றம் தொடர்பான கூட்டம்.
 மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் உள்ள குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் சலுகை அளிப்பது தொடர்பில் இன்றைய தினம் (21) இடம்பெற்ற முன்னேற்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், முழுமையாக பாதிக்கப்பட்ட 60 வீடுகளில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்காக, இன்றைய தினம் (21) வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனையின் பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், அவ்வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக இரண்டரை இலட்சம் ரூபாவும், அவற்றை கொண்டு செல்வதற்காக 10,000 ரூபா போக்குவரத்து கொடுப்பனவும் கிடைக்கவுள்ளது.
முழுமையான நட்டஈடு பெற்றுக் கொடுக்கப்படும் வரை அல்லது நிரந்தர வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும் வரை, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வலயங்களிலிருந்து வெளியேறுகின்ற குடும்பங்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவாக ஐம்பதாயிரம் ரூபாவும், பொருட்கள் போக்குவரத்துக்காக பத்தாயிரம் ரூபாவும் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்காக மூன்று மாத காலப்பிரிவிற்குள் வீடொன்றோ அல்லது மதிப்பீட்டு தொகையையோ பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில் குறித்த அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.
வீடுகளை பெற்றுக் கொள்வதற்கு விருப்பமற்ற குடும்பங்கள் இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளமையினால், அக்குடும்பங்களுக்காக மதிப்பீட்டு தொகையின் அடிப்படையில், சாதாரண நட்டஈட்டு தொகையொன்றை பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதியவர்கள் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நட்டஈட்டினை பெற்றுக் கொள்ளும் நபர்களுக்காக போக்குவரத்து மற்றும் வீட்டு உபகரணங்களுக்காக பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள கொடுப்பனவு உரித்தாகும்.
முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள 60 வீடுகளுக்கும், பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ள 22 வீடுகளுக்கும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வலயத்தில் அமைந்துள்ளது என தற்போது அனுமானிக்கப்பட்டுள்ள 211 வீடுகளுக்கும் இவ்வேலைத்திட்டம் துரித கதியில் அமுலாக்கப்படவுள்ளது.
குப்பை மேடு சரிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தஹம்புற மற்றும் பன்சல்ஹேன ஆகிய பிரதேசங்களின் வீட்டு உரிமையாளர்களுக்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்த வீட்டுக் கடன் தொகையினை முழுமையாக இரத்துச் செய்வதற்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் மாத்திரமல்லாமல், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள வலயங்களில் வசிப்பவர்கள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீட்டுக் கடன் தொகையினை பெற்றிருப்பின், அவ்வீட்டுக் கடன்களும் இரத்துச் செய்யப்படும்.
தொடர்ந்தும் இவ்வாறான குடியேற்றங்கள் நிகழாது தடுப்பதற்காக திண்மக்; கழிவுகளை பயன்படுத்துவது தொடர்பான தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கான அவசியத்தை பிரதமரினால் சுட்டிக் காட்டப்பட்டது. அதனடிப்படையில் ஜனாதிபதியவர்களின் ஆலோசனையின் படி வாராந்தம், பிரதமர் உட்பட குறித்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, துரித வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வனைத்து கூட்டங்களும் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறும்.
 பாதிப்புக்கு உள்ளாகியுள்ள வீட்டு உரிமையாளர்களுக்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற வீடுகளுக்கு செலவிடப்படுகின்ற முழு தொகையும், கொழும்பு நகர சபை மற்றும் திரைசேரியுடன் இணைந்து உரித்த அமைச்சுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு பிரதமரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் சலுகை தொடர்பில் இட்டுக்கட்டப்படுகின்ற தகவல்கள் வெளியாகின்றன. இதனால் உண்மையினை பொதுமக்களுக்கு சரியாக விளங்கிக் கொள்வதற்காக வேண்டி, முறையான ஊடக பாவனையின் அவசியம் எழுந்துள்ளது. இதற்காக முறையான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி அவர்களினால் குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top