நாடாளவிய ரீதியில் தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களை

நிரப்ப அடுத்த மாதம் விண்ணப்பம் கோரப்படவுள்ளது

கல்வியமைச்சு தகவல்

(அபூ முஜாஹித்)


நாடாளவிய ரீதியிலுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் கோரப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எச்.யூ.பிரேமதிலக்க தெரிவித்தார்.
நாடாளவிய ரீதியில் பல்தேசிய பாடசாலைகள் நிரந்தர அதிபரின்றி இயங்கி வருகின்றன. இவற்றை நிவர்த்தி செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் நடவடிக்கைகள் எடுத்த போதிலும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவும், அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெறாமை காரணமாகவும் ஏற்கனவே நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சைகள் இரத்துச் செய்யப்பட்டு விட்டன.
நாட்டில் 353 தேசிய பாடசாலைகள் உள்ளன. இவற்றுள் 130ற்கு மேற்பட்ட தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் இல்லை. இப்பாடசாலைகளில் முறையான நியமனமின்றி தற்காலிக அடிப்படையில் அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்.
தேசிய பாடசாலைகளின் அதிபர் பதவிகள் தொடர்பாக பாடசாலைகளின் தரத்தை பொறுத்து பொருத்தமான அதிபர்கள் தொடர்பாக வரையறை செய்யப்பட்டு பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கல்வி நிருவாக சேவையின் புதிய சேவை பிரமாணக்குறிப்பிற்கமைய இலங்கை கல்வி நிருவாக சேவையின் பொது ஆளணி உத்தியோகத்தர்களுக்கு தேசிய பாடசாலை அதிபர்களாக கடமையாற்ற முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன் தேசிய பாடசாலை அதிபராக இருப்பதற்கு பட்டதாரியாக இருப்பது கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் 36 தேசிய பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 90 வீதமான பாடசாலைகளில் நிரந்தர அதிபர் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top