மீதொட்டமுல்ல அனர்த்தம்

நிர்மூலமான வீடுகளின் பெறுமதிக்கான

கொடுப்பனவு செலுத்தப்படும்

பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் நிர்மூலமான வீடுகளின் முழுமையான பெறுமதிக்குரிய கொடுப்பனவுகளை உரிமையாளர்களுக்கு வழங்குவதென அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 இந்தப் பகுதியில் வாடகை வீடுகளில் வாழ்ந்தவர்களுக்கும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்படுமென பிரதமர் கூறினார். மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பிரதமர் கருத்து வெளியிட்டார். இந்தச் சந்திப்பு நேற்று  அலரிமாளிகையில் இடம்பெற்றது.
 இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள் தமது துயர்களை பிரதமரிடம் பகிரங்கமாக எடுத்துரைக்க வாய்ப்பு கிடைத்தது.
 அபாய வலயங்களில் இருந்து வெளியேற விரும்பும் குடும்பங்களுக்கு புதிய வீடுகளை பெற்றுக்கொடுத்தல், பாதிப்புக்களை மதிப்பிடும் வரையில் 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குதல், வெளியேற விரும்பும் குடும்பங்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவுகளை பெற்றுக்கொடுத்தல்,  பாதிக்கப்பட்டவர்கள் வீடமைப்பு அதிகார சபையிடமிருந்து பெற்றுக் கொண்ட கடனுக்கான நிலுவையை ரத்து செய்தல், சேதமடைந்த சொத்துக்கள், மற்றும் வாகனங்களுக்கு இழப்பீடு வழங்குதல் முதலான தீர்மானங்கள் பற்றி மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

 பாதிக்கப்பட்ட சகல மக்களும் பிரதேச செயலக அலுவலகங்களுக்குச் சென்று தமது காணிகள் பற்றிய பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டுமென பிரதமர் ஆலோசனை வழங்கினார். காணி உரித்துக்கள் தொடர்பான நெருக்கடிகளுக்கு வியாழக்கிழமை தீர்வு காணுமாறு அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.        




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top