குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்
நீச்சல் மசாஜ்

பச்சிளம் குழந்தைகளை நீச்சல் குளத்தில் நீந்த விட்டு மசாஜ் செய்யும் வித்தியாசமான பயிற்சி மையம் ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
அங்கு ஆறு மாதங்களை கடந்த குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். குழந்தையின் கழுத்து பகுதிகளை சூழ்ந்திருக்கும்படி காற்று பலூன்கள் பிரேத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அது குழந்தைகள் தண்ணீரில் மூழ்கிவிடாமல் தடுக்கும் பாதுகாப்பு கவசமாக அமைந்துள்ளது.
பொதுவாகவே பச்சிளம் குழந்தைகள் படுத்த படுக்கையாக இருந்தாலும் அவர்களின் கை, கால்கள் எப்போதும் துறுதுறுவென்று அடித்துக் கொண்டிருக்கும். கால்களையும், கைகளையும் அங்கும், இங்கும் அசைத்து கொண்டே இருப்பார்கள். அதனால் குழந்தைகளை நீச்சல் குளத்தில் பழக்குவது எளிதான விஷயமாக அமைந்திருக்கிறது.
அங்கு குழந்தைகள் கழுத்தில் காற்று பலூன்களை பொருத்தி நீச்சல் குளத்தில் விட்டதுமே அவைகள் குதூகலமாகிவிடுகின்றன. படுக்கையில் எப்படி கை, கால்களை அசைப்பார்களோ அதைவிட அதிகமாகவே நீச்சல் குளத்தில் சுழலுகிறார்கள்.
அது அவர்களுக்கு சிறந்த மசாஜ் பயிற்சியாக அமையும், புத்துணர்வையும் கொடுக்கும் என்பது பயிற்சி மைய நிர்வாகிகளின் கருத்தாக இருக்கிறது. குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக காற்றுப் பலூன்களில் பின்னணி இசையும் ஒலிக்கிறது. ஒருசில பச்சிளம் குழந்தைகள் சரிவர தூங்காமல், சாப்பிடாமல், சுறுசுறுப்பின்றி சோர்வாக இருப்பார்கள். அவர்களுக்கு இந்த நீச்சல் மசாஜ் பயிற்சி நல்ல பலனை கொடுக்கும் என்கிறார்கள்.

ஒரு குழந்தைக்கு 8 வாரங்கள் இந்த மசாஜ் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் மூலம் ஒரே நேரத்தில் மசாஜ், நீச்சல், நீர் சிகிச்சை ஆகிய மூன்று பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. குழந்தைகள் நீச்சல் குளத்தில் நீந்தியபடி பயிற்சி செய்யும் காட்சிகள் வைரலாக இணையதளங்களில் பரவி வருகிறது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top