அளுத்கமை கலவரத்திற்கு இழப்பீட்டை மட்டுமல்ல

நீதியையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்

–  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ



அளுத்கமை கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்பிப்பதோடு நின்று விடாமல் அதனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதோடு  அக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடமும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடமும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வேண்டுகோள் விடுப்பதாக தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவரது ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

தேர்தல் ஒன்று நெருங்கியுள்ள சூழ் நிலையில் அளுத்கமை கலவரம் தொடர்பிலான  கருத்தாடலொன்று சென்று கொண்டிருப்பதை அறிய முடிகிறது.அளுத்கமை கலவரம் தொடர்பான கருத்தாடல்களை நாம் வரவேற்கின்றோம்.அப்போது தான் முஸ்லிம்கள் அதிர்ச்சிகரமான பல உண்மைகளை அறிந்து கொள்வார்கள்.அளுத்கமை கலவரத்தின் போதான  இழப்பீடுகளை  மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக,அமைச்சரவை பத்திரமொன்றை சமர்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அதற்கு ஏற்ப அது தயார் செய்யப்படுகின்ற விடயமும் இக் கருத்தாடல்களினூடாக அறிய கிடைத்தது.

இக் கலவரம் எமது ஆட்சி காலத்தில் இடம்பெற்ற வடு எம்மீதுள்ளதால் இதன் போதான இழப்பீடுகள் வழங்கப்பட்டால் எமக்கும் மிக்க மகிழ்ச்சி தான்.எமது ஆட்சிக் காலத்தில் அக் கலவரத்தின் போது சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் மிக குறுகிய காலத்தினுள் புணரமைப்பு செய்து கொடுக்கப்பட்டது.நாம் கலவரத்தின் போதான இழப்பீடுகளை உடனே  மதிப்பீடு செய்த போதும் அவ் வருடமே எமது ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் அவற்றை எம்மால் வழங்க முடியாமல் போனது என்பதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இது தொடர்பான அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை பார்த்த போது பல வினாக்கள் எழுகின்றன.

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அளுத்கமை கலவரம் நடந்து 1000 நாட்கள் கடந்தும் இன்னும் இழப்பீடுகளோ நீதியோ அம் மக்களுக்கு கிடைக்கவில்லை என உரையாற்றியதை தொடர்ந்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை பத்திரத்தை சமர்பிக்குமாறு ஆலோசனை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.அப்படியானால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் உரையாற்றியதன் பின்புதான் அளுத்கமை கலவரத்திற்கு இழப்பீடுகள்  வழங்கப்படவில்லை என்பதை பிரதமர் ரணில் அறிந்துள்ளாரா? இல்லை..அளுத்கமை கலவரம் என்ற ஒன்று நடந்ததையே அதன் பின்னர் தான் அறிந்துள்ளாரா? அளுத்கமை கலவரத்தை காட்டி ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தம் பக்கம் ஈர்த்து ஆட்சியமைத்த இவ்வரசு இவ்வாரிருப்பது முஸ்லிம்கள் மீதான அவர்களது பொடு போக்கை பறை சாட்டி நிற்கின்றது.

அமைச்சர் ஹிஸ்புல்லாவின் பேச்சில் இழப்பீடுகள்  மாத்திரம் வழங்கப்பட வேண்டுமென பேசப்பட்டிருக்கவில்லை.அதனோடு சேர்த்து இக் கலவரத்தை திட்டமிட்ட சூத்திரதாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டிருந்தது.இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏதாவது ஆலோசனை வழங்கியுள்ளாரா? அப்படி வழங்கியிருந்தால் அது என்ன என்பதை வெளிப்படுத்துவார்களா?

இக் கலவரத்தின் சூத்திரதாரிகள் அனைவரும் இவ்வரசுடனேயே ஒட்டி குடும்பம் நடாத்திக் கொண்டிருக்கும் நிலையில் நாம் அவர்களிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது.அமைச்சர் றிஷாத் பதியுதீன் உட்பட பலர் ஞானசார தேரரை கைது செய்ய கோரிய போது அவரை கைது செய்தால் இவ்வாட்சியை விட்டு நாம் விலகுவோம் என அமைச்சர் சம்பிக்க கூறியிருந்தார்.இன்று அவர் இவ்வாட்சியின் பக்கமே உள்ளார்.இருந்தாலும் இது தொடர்பில் கேள்விகள் எழுப்புவதை கடமையாக கருதுகிறோம்.

இது ஞானசார தேரரை நாய்க் கூண்டில் அடைப்போம் என கூறிக் கொண்டு ஆட்சியமைத்த அரசு.ஞானசார தேரர் அன்று போல் இன்றும் துள்ளித் திரிகின்ற போதும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.நாய்க் கூடு செய்யாமையினால் அவர் கைது செய்யப்படவில்லை என்றால் நாம் அதனை செய்து தருகிறோம்.

நிவாரணம் என்பது பணத்துடன் தொடர்பு பட்ட விடயம்.இதனை திட்டமிட்டவர்கள் மீதான நடவடிக்கையே பிரதானமானது.இவர்கள் இது போன்ற திட்டங்களை எதிர்காலத்திலும் திட்டமிடலாம்.அவ்வாறு இருக்க அளுத்கமை சூத்திரதாரிகள் விடத்தில் சட்டத்தை நிலைநாட்ட தயங்குவதேன்.

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆயிரம் நாட்கள் கடந்த பின்னர் பாராளுமன்றத்தில் பேசிய போது பிரதமர் இவ்வாறான ஆலோசனையை வழங்கியிருந்தால் இது தொடர்பில் இதற்கு முன்பு அவரிடம் முஸ்லிம் எம்.பிகள் யாருமே சுட்டிக் காட்டவில்லையா?


இப்போது இதற்கு நிவாரணம் வழங்க சிந்திக்கின்றமை இதனை வைத்து மிக விரைவில் வரவுள்ள தேர்தல்களில் முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வாதற்காகவா என்பதையும் அரசாங்கமும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெளிவுபடுத்த வேண்டுமென அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top