15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம்

10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது



போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வலைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் 6 சந்தேக நபர்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குழு ஒன்றுனை கைது செய்துள்ளனர்.
திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைவாக வேரஹெர, மருதானை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்.
இதன் போது போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வந்த மருதானை - தேவனம்பியதிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு அது தொடர்பில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன் மோட்டார் வாகன திணைக்களத்தினுள் உள்ள சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே இந்த சட்ட விரோத நடவடிக்கை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளமையும், அதனூடாக இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு போலி சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்ப்ட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் இது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தியுள்ள திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர், போலியாக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் பட்டியல் அடங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஹார்ட் டிஸ்க் எனப்படும் வன் தட்டு ஒன்றினை மீட்டுள்ளதுடன் அதிலிருந்து தகவல்களைப் பெற்று போலி சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருப்போருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
இதனைவிட நாளை முதலாம் திகதி மோட்டார் வாகன திணைக்களத்துக்கு செல்லும் சிறப்பு பொலிஸ் குழு அங்கு, இந்த சட்ட விரோத கும்பலுடன் தொடர்பினைப் பேணிய அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்துவது குறித்தும் ஆராயவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top