சம்பளம் வழங்குமாறு அறிவித்த கடிதத்தை

கல்முனை ஸாஹிறாக்கல்லூரி அதிபர் நியமனம்

என கருதி பாடசாலை பொறுப்பை ஏற்க வந்த

         இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி
        
 (அபூ முஜாஹித்)

கல்முனை ஸாஹிறாக்கல்லூரியில் தற்காலிக அதிபராகக் கடமையாற்றி கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளராக மீண்டும் கடமையேற்ற ஜனாப். பீ.எம்.எம்.பதுர்தீன் என்பவருக்கு இடைநிறுத்தப்பட்டிருந்த சம்பளத்தை வழங்குமாறு கல்வியமைச்சு வலயக்கல்விப் பணிப்பாளருக்கு பணித்திருந்த கடிதத்தை ஸாஹிறாக்கல்லூரி அதிபர் நியமனக் கடிதமாக கருதி பாடசாலை பொறுப்பை ஏற்க வந்த ஜனாப். பதுர்தீன் அவர்களது அறிவீனம் குறித்து பிரதேசக்கல்விமான்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஜனாப். பதுர்தீன் பாடசாலைப் பொறுப்புக்களை அப்பாடசாலையின் சிரேஸ்ட பிரதி அதிபர் ஜனாப். எம்.எஸ். மொஹம்மட்டிடம் கையளித்த பின் கடந்த 03.04.2017ம் திகதியுடன் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்கு உதவிக்கல்விப் பணிப்பாளராக கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சுச் செயலாளரின் பணிப்புரைக்கமைய கடமைக்கு அறிக்கை செய்தார்.
இவருக்கு 2017 பெப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான சம்பளங்கள் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையேற்கவில்லை என்பதற்காக இடைநிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இவர் ஏப்ரல் 03ம் திகதி கடமையேற்றுக்கொண்டதும் அவ்வாரமே அவருக்குரிய பெப்ரவரி, மார்ச் நிலுவைச் சம்பளங்களையும், ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தையும் கல்முனை வலயக்கல்வி அலுவலகம் மூலமாகப் பெற்றுக்கொண்டு அவ்வலுவலகத்திலேயே கடமையிலுள்ளார்.

ஆனால், கல்வியமைச்சிற்கு தனக்கு கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தால் சம்பளம் வழங்கப்படவில்லை என தவறான தகவலை வழங்கியதற்கமைய இசுறுபாய கல்வி அமைச்சு 19.05.2017ம் திகதியிட்டு கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் இவருக்கான நிறுத்தப்பட்ட சம்பளத்தை வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது. அவ்வாறு அமைச்சினால்; அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் சிங்கள மொழி மூலம் அனுப்பப்பட்டிருந்தமையினால் அதன் உள்ளடக்கம் என்னவென்று தெரியாத குறித்த பதுர்தீன் தனக்கு அதிபர் நியமனம் கிடைத்து விட்டதாகக் கருதி 24.05.2017ம் திகதி சாய்ந்தமருது பிரதேச ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர், பதவி விலக்கப்பட்ட பழைய மாணவர் சங்கச் செயலாளர், பழைய மாணவர் சங்கப் புதிய செயலாளர் டாக்டர் ஒருவருடன் பாடசாலைக்கு சமூகமளித்து பாடசாலைப் பொறுப்புக்களைக் கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவருக்கு அமைச்சு வழங்கியுள்ள கடிதத்தில் பின்வரும் விடயங்கள் காட்டப்பட்டுள்ளன.
01.          இவர் கடந்த 08.05.2016ம் திகதி அமைச்சின் கடிதம் மூலம் கல்முனை ஸாஹிறாக்கல்லூரிக்கு தற்காலிக அதிபராக அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியை எதிர்பார்த்து நியமனம் வழங்கப்பட்டதாகவும்,
02.          தற்போது இவர் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மத்திய அரச சேவைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும்,
03.          இவரை மத்திய அரசு ஊழியராகக் கணித்து நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளத்தை வழங்குமாறும் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளரிடம் கேட்கப்பட்டுள்ளது.
இவருக்கு 08.05.2016ம் திகதி தற்காலிக அதிபர் நியமனம் வழங்கப்பட்ட போதும் 03 மாத காலத்திற்குள் முறையான விடுவிப்பைப் பெறாத காரணத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு அதிகாரிகள் உறுதியளித்தபடி 2017 ஜனவரியுடன் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமைக்கு அறிக்கை செய்யுமாறு பணித்த உத்தரவை மதிக்காமையினால் இவரது சம்பளம் நிறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு கிழக்கு மாகாணக்கல்வியமைச்சு இவர் மாகாண அரச சேவைக்குரியவர் என்பதனால் வலயக்கல்வி அலுவலகத்திற்கு அறிக்கை செய்யுமாறு கேட்டுக்கொண்டதற்கமைய 03.04.2017ம் திகதி அறிக்கையிட்டமையினால் இசுறுபாய கல்வி அமைச்சு வழங்கிய தற்காலிக அதிபர் நியமனம் இரத்தாகிவிட்டது. இந்த சட்ட நுணுக்கத்தை அறியாத ஜனாப். பதுர்தீனும் அவருக்கு ஆதரவானவர்களும் சம்பளத்தை வழங்குமாறு கோரிய கடிதத்தை அதிபர் நியமனமாகக் கருதி செயற்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
தற்போது இவ்வதிபர் பிரச்சினை பிரதேச பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன் பாடசாலை கல்விச் சமூகம், ஊர் முக்கியஸ்தர்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், பழைய மாணவர்கள் ஆகியோர் ஒன்றுகூடி ஜனாப். பதுர்தீனை கல்முனை ஸாறாக்கல்லூரி அதிபராகக் கடமையாற்ற அனுமதிப்பதில்லை எனவும் சாய்ந்தமருது, கல்முனைக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையே அதிபராக ஏற்றுக்கொள்வது எனவும் தீர்மானித்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில்   கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ஜனாப். பதுர்தீனை கல்முனை ஸாறாக்கல்லூரி அதிபராக மீள கடமையேற்கும்படி நேற்று 24 ஆம் திகதி மாலை கடிதம் வழங்கியுள்ளார்.
ஜனாப். பதுர்தீனுக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

திரு.PMM.பதுறுத்தீன்(SLEAS111)                          2017.05.24
வலயக் கல்வி அலுவலகம்,
கல்முனை.
மீளக் கடமையேற்றல்
மேற்படி விடயம் தொடர்பாக தங்களின் 2017.05.24 ஆம் திகதிய கடிதத்தின் கோரிக்கைக்கமைவாக,
தாங்கள் மத்திய கல்வி அமைச்சின் செயலாளரின் ED/4/58/20/16/3ஆம் இலக்க 2017.05.19 ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் கமு/கமு/ஸாஹிறாக் கல்லூரியில் அதிபராகக் கடமையேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
எம்.எஸ்.அப்துல் ஜலீல்
வலயக் கல்விப் பணிப்பாளர்,
வலயக் கல்வி அலுவலகம்,
கல்முனை.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top