கல்முனை ஸாஹிறாக்கல்லூரிக்கு பதுர்தீனுக்கு

அதிபர் நியமனத்தை கல்வியமைச்சு வழங்கவில்லை.

சம்பளத்தை வழங்குமர்று மட்டுமே கூறியுள்ளது

அதிபர் நியமனம் வழங்கியுள்ளதாகக் கூறுவது வெட்கக்கேடானது

(அபூ முஜாஹித்)

கல்முனை  ஸாஹிறாக் கல்லூரியில் தற்காலிக அதிராகக் கடமையாற்றிய திரு. பீ.எம்.எம்.பதுர்தீன் என்பவருக்கு கடந்த வாரம் அதாவது 2017.05.19ம் திகதி கல்விமைச்சு வழங்கிய கடிதம் கல்முனை ஸாஹிறாக்கல்லூரிக்கான அதிபர் நியமனக் கடிதம் அல்ல. அது ஒரு சம்பளத்தை வழங்குமாறு கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்த கடிதமாகும் என இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கச் செயலாளரும், சிரேஷ்ட பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஜனாப். .எல்.எம்.முக்தார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ஹேமந்த பிரேமதிலக்க அவர்களுடன் தான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பாக விசாரித்த போது குறித்த பதுர்தீனுக்கு இரு மாதங்களுக்கான சம்பளம் கல்முனை வலயக்கல்வி அலுவலகம் மூலமாக வழங்கவில்லைனவும், தான் இன்னமும்  ஸாஹிறாக் கல்லூரியில் தற்காலிக அதிபராகவே கடமையாற்றுவதாகவும் அவர் கல்விமைச்சிற்கு அறிவித்ததற்கமையவே மேற்படி கடிதம் வழங்கப்பட்டதாக உறுதிப்படுத்தினார்.
இதன்போது திரு. பதுர்தீன் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரின் 2017.02.13ம் திகதிய கடிதத்திற்கமைய கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் 2017.04.03ம் திகதியன்று ஒரு உதவிக்கல்விப் பணிப்பாளராகக் கடமையேற்றுள்ளதாகவும் அதன் காரணமாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான சம்பளத்தை நிலுவையுடன் ஏப்ரல் மாத சம்பளத்துடன் சேர்த்து பெற்றுக் கொண்டதாகவும் ஜனாப். முக்தார் கல்வியமைச்சின் மேலதிக செயலாளரிடம் தெரிவித்த போது,
குறித்த பதுர்தீன் இத்தகவல்களை தனக்கு வழங்கவில்லை எனவும், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கடிதத்திற்கமைய அவர் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையேற்றிருந்தால் இசுறுபாய கல்வி அமைச்சினால் 2016.05.08ம் திகதியிட்டு வழங்கப்பட்ட தற்காலிக கடமை புரியும் (Temporary cover up duty)  அதிபர் நியமனம் தொடர்பான கடிதம் செல்லுபடியற்றதாகிவிட்டது எனவும் உறுதிபடத் தெரிவித்தார். அப்போது பொய்யான தகவலைக் கூறி கல்விமைச்சையும், கல்விமைச்சு அதிகாரிகளையும் தவறாக வழி நடாத்திய குறித்த பதுர்தீனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வியமைச்சின் மேலதிக செயலாளரை தாம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நிலைமை இவ்வாறிருக்க கல்முனை ஸாறாக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையானது உண்மை நிலவரத்தையும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் வழங்குமாறு அறிவித்த கடிதத்தின் உள்ளடக்கத்தையும் புரிந்து கொள்ளாது குறித்த பதுர்தீன் கல்முனை ஸாஹிறாக்கல்லூரி அதிபராகக் கடமையேற்கச் சென்றதாகவும், பிரதி அதிபர் எம்.எஸ்.முஹம்மட் அவருக்கு இடையூறு செய்ததாகவும் அபாண்டமான குற்றச்சாட்டொன்றை சுமத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு பழைய மாணவர் சங்கம் தமது கல்லூரியின் அல்லது பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் அப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றுவதை வரவேற்பது ஒரு தார்மீகக் கடமை மட்டுமன்றி பழைய மாணவர்களின் தலையாய கடமையுமாகும். மாறாக கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளை கல்முனை ஸாஹிறாக்கல்லூரியின் பழைய மாணவரல்லாத அக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியரல்லாத, கல்லூரிக்கு எந்த வகையிலும் கடந்த காலங்களில் உதவியிராத மருதமுனையைச் சேர்ந்த திரு. பதுர்தீனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதும், அவர்தான் கல்முனை ஸாஹிறாவின் அதிபர் எ கும்மாளமிடுவதும், கூக்குரலிடுவதும் தனது தாயின் முலைக்காம்பை கடிப்பதற்கு சமனாகும். இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து கல்முனை ஸாஹிறா பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை தவிர்ந்திருக்க வேண்டும்.

கொழும்பிலுள்ள குளு குளு அறைகளில் இருந்து கொண்டு கல்முனை ஸாஹிறாவின் பெயரைப் பயன்படுத்தி தம்மைப் பிரபல்யப்படுத்தும் செயற்பாடுகளை பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை அண்மைக் காலமாக செயற்பட்டு வருவதுடன் இக் கிளையானது திரு. பதுர்தீனுக்கு மாதாந்தம் ஒரு தொகைப் பணத்தை இலஞ்சமாகக் கொடுத்து வந்ததையும் கல்முனை ஸாஹிறா கல்விச் சமூகம் நன்கு அறிந்து வைத்துள்ளது.

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளருக்கு கல்விமைச்சு அனுப்பி வைத்த2017.05.19ம் திகதிய கடிதத்தின் உண்மை நிலவரம் தெரியாது அவர் அவரை 2017.05.24ம் திகதியிட்டு கல்முனை  ஸாஹிறாக் கல்லூரியின் அதிபர் பொறுப்பைக் கடமையேற்குமாறு கல்வி நிருவாகத்திற்கு முரணான விதத்தில் கடிதம் வழங்கியுள்ளார்.
இவ்வாறான கடிதம் ஒன்றை தேசிய பாடசாலை ஒன்றிற்கு வழங்குவதற்கு எந்த விதமான அதிகாரமும் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளருக்கோ, மாகாணக்கல்விப் பணிப்பாளருக்கோ கல்வி அமைச்சு வழங்கவில்லை. ஒரு ஆசிரியரைத்தானும் இடமாற்றம் செய்ய முடியாத கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் ஒரு கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தரை தேசிய பாடசாலைக்கு அதிபராக நியமித்தமை நகைப்பிற்குரியது.

தற்போது பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திரு. எம்.எஸ்.முஹம்மட்டை தொடர்ந்தும் பாடசாலையின் அதிபராக வைத்திருக்க வேண்டும் எ கல்முனைக்குடி, சாய்ந்தமருது மக்கள் பிரதிநிதிகளும் ஏனைய அரசியல்வாதிகளும், பழைய மாணவர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கமும், ஊர் முக்கியஸ்தர்களும், நலன் விரும்பிகளும்  முடிவெடுத்து இருக்கையில் கல்முனை ஸாஹிறா கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை அதிபர் விடயத்தில் மூக்கை  நுழைத்து மருதமுனை பதுர்தீனுக்கு ஸாஹிறாக் கல்லூரியின் அதிபர் பதவியை பெற்றுக் கொடுக்க முனைந்திருப்பதன்  மர்மம் என்னவென கேள்வி எழுப்பப்டுகிறது.

திரு. பதுர்தீனின் தனது சொந்தக் கிராமமான மருதமுனைக் கிராமத்தில் உள்ள ம்ஸ் மத்திய கல்லூரியில் முதலாம் தர அதிபராக உள்ள திருமதி. ரீபா ஹூசைன் பெரிய நீலாவணை அக்பர் கிராமப் பாடசாலையில் இரண்டாம் தர அதிபராக உள்ள திரு. சாதிக் என்போர் கல்முனைக்குடியைச் சேர்ந்தவர்களாக இருப்பதனால் அவர்களுக்கு இன்னமும் அங்கு பாடசாலைப் பொறுப்புக்களை வழங்காதிருப்பது குறித்து  ஸாஹிறா பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையினர் ஏன் அறியாதுள்ளனர். குறித்த இருவரும் கல்முனை ஸாஹிறாவின் பழைய மாணவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாதா?

இதனை ஒரு பிரதேசவாதமாக நாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் மருதமுனைப் பாடசாலைகளுக்கு மருதமுனையைச் சேர்ந்தோரை அதிபர்களாக நியமிப்பதற்கு அக்கிராமத்தின் முக்கியஸ்தர்கள் தீர்மானித்து நடவடிக்கை எடுக்கையில் கல்முனைக்குடி, சாய்ந்தமருதுவிற்குப் பொதுவான பாடசாலையான ஸாஹிறா தேசிய பாடசாலைக்கு இவ்விரண்டு ஊர்களுக்கும் பொதுவான எம்.எஸ்.முஹம்மட்டை அதிபராக வைத்திருப்பதில் இவ்விரு கிராமத்து மக்களும் தீர்மானித்ததில் தவறில்லை. இதனை ஸாஹிறாப் பழைய மாணவர் சங்கம் ஏன் உணர்ந்து கொள்ளத் தவறியது என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது.

திரு. பதுர்தீனுக்கு அவர் ஓய்வுபெறும் வரை கல்முனை ஸாஹிறாக்கல்லூரி அதிபராகக் கடமையாற்றுமாறு கல்விமைச்சு கடிதம் வழங்கியிருப்பதாக சுமார் இரு மாதங்களுக்கு முன்னர் சிலர் கதை பரப்பியதும் அதில் முக்கிய பங்கை பழைய மாணவர் சங்க கொழும்புக்கிளை வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெளியூர் அழகனை விட உள்ளுர் முடவன் உயர்ந்தவன் என்பதனை கல்முனை ஸாஹிறா பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையினர் உணர்ந்து செயற்பட வேண்டுமென பிரதேசக் கல்விமான்களும், பெரியோர்களும் வேண்டிக்கொள்கின்றனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top