எமது அமைச்சின் கீழான நிறுவனங்கள்
நல்ல பல திட்டங்களின் உச்ச பயன்களை
மக்கள் பெற்றுக்கொள்ள
வேண்டும் என்பதே
எங்களின் எதிர்பார்ப்பாகும்.
அமைச்சர்
றிஷாட் பதியுதீன்
எமது அமைச்சின் கீழான நிறுவனங்கள் மக்களின் காலடிக்கு வந்து,
மேற்கொள்ளும் நல்ல பல திட்டங்களின் உச்ச பயன்களை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும்.
அந்த அடிப்படையில் இன,மத அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்தையும் மக்கள் நலனையும் பிரதான இலக்காகக்கொண்டு சுய தொழில் முயற்சியாளர்களுக்கான இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்திச் சபை, நெடா, புடவைக்கைத்தொழில் நிறுவனம,; தேசிய வடிவமைப்பு நிறுவனம் மற்றும் பல நிறுவனங்கள் கூட்டாக இணைந்து வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் (2017.05.28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுய தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் நடமாடும் சேவையில் பிரதம அதிதியாகக் க கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் றிஷாட் பதியுதீன் இங்கு தொடர்ந்து பேசுகையில் மேலும் கூறியதாவது,
வன்னி மாவட்டம் யுத்தப் பாதிப்புக்களால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில்
ஒன்றாகும். இங்குள்ள மக்கள் தமது சொந்தக்காலில் சுதந்திரமாக, சுய தொழில் செய்து வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கிலேயே இந்த நடமாடும் சேவை நடாத்தப்படுகின்றது.
சுயதொழில் முயற்சியாளர்கள் தமக்கு ஏற்ற, தாம் விரும்பிய தொழிலை மேற்கொள்வதற்கு எனது அமைச்சு தேவையான
உதவிகளை வழங்கி உதவும். அமைச்சின் கீழான நிறுவனங்கள், தொழில் முயற்சியாளர்களுக்கு பொருத்தமான உதவிகளை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுகின்றது.
எனவேதான் அனைத்துத் திணைக்களங்களையும் ஒரு முகப்படுத்தி, ஒரே குடையின் கீழ் இப்பிரதேசத்திற்கு கொண்டு வந்து இந்த இடம் பெயர் சேவையை நடாத்துகின்றோம். இதன் மூலம் இப்பிரதேச மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் குடும்பச்சுமையைக் குறைக்கவும் வழி வகுக்கும் என நம்புகின்றோம்.
மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர்களுடன் இணைந்து முதன் முதலாக வன்னி மாவட்டத்திலே இந்த நடமாடும் சேவையை ஆரம்பித்து இப்பிரதேசத்தில் வரலாறு ஒன்றையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
இந்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டிருக்கும் உங்களிடம் வழங்கப்பட்டுள்ள கோவையிலிருக்கும் விவரங்களை வாசித்து, உங்களுக்கு ஏற்புடைய ஏதாவது ஒரு தொழிலை அடையாளப்படுத்தி அதிகாரிகளிடம் கொடுத்தால் உங்களின் விருப்பத்திற்கு
ஏற்ப மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ முடியும்.
உங்களால் விருப்பம் தெரிவிக்கப்படும் குறித்த தொழிலுக்கு பயிற்சிகளோ,தேவையான உபகரணங்களோ அல்லது கடன் உதவியோ வழங்கப்படும். அதுமட்டுமன்றி உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தவதற்குக் கூட வசதிகள் செய்து தரப்படும்.
இந்த மாவட்டத்திலே தென்னை, பனை வளம் உட்பட மேலும் பல வளங்கள் தாராளமாக பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகள் உண்டு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் உங்கள் ஆலோசனைகளைக் கூறினால் அது குறித்து பரிசீலிப்பதற்கும் உதவுவதற்கும் நாம் காத்திருக்கின்றோம்.
தனிநபர்கள் மாத்திரமின்றி கூட்டாகவும் சுயதொழிலை மேற்கொள்ள முடியும் கூட்டு முயற்சியின் மூலம் கூட்டுறவின் அடிப்படையில் அதனை உருவாக்கி பங்குதாரர்களாக மாறுங்கள் அது நீண்ட காலம் நிலைக்கக்கூடிய சிறப்பான முயற்சியாகும்.
இப்பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலருக்கு தொழில் செய்யக்கூடிய ஆற்றலும் அதில் விசேட திறமைகள் இருந்தும் ஆதரவு கொடுக்க யாருமில்லாத நிலையிலேதான் நாங்கள் இவ்வாறான நடமாடும் சேவைகளை
இம்மக்களின் காலடிக்கு கொண்டு வந்து கை கொடுக்க முன்வந்துள்ளோம்.
இந்த நடமாடும் சேவையில் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்குவதற்காக திணைக்களங்களின் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் உங்கள் காலடிக்கு வருகை தந்துள்ளனர். எனவே உரிய முறையில் இந்த நடமாடும் சேவையின் மூலம் இப்பிரதேச மக்கள் உச்ச
பயனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். இவ்வாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் கூறினார்.
இந்த நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன், ஜனூபர், ஜயதிலக்க, அமைச்சின் மேலதிக செயலாளர் தாஜூடீன் அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி மொகைடீன் உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment