நாட்டில் கலவரத்தை ஏற்படும் தேவை
முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கே உள்ளதாக
பொதுபல சேனா தெரிவிப்பு!
இலங்கையில் முஸ்லிம், சிங்கள கலவரத்தை ஏற்படுத்தும் தேவை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
ராஜகிரியவில் உள்ள விகாரை ஒன்றில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலாந்த விதானகே இதனை கூறியுள்ளார்.
குருணாகல் இப்பாகமுவ பிரதேசத்தில் அண்மையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய முயற்சித்தனர்.
அதன் பின்னர், அங்குள்ள பள்ளி வாசல் ஒன்றின் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அதில் இரண்டு குண்டுகள் வெடிக்கவில்லை.
இவற்றுக்கான சீ.சீ.டி.வி கெமரா காட்சிகள் அவர்களிடம் இல்லை. ஞானசார தேரர் றிசார்ட் பதியூதீனின் அமைச்சுக்கு சென்றதாக கூறப்பட்டது. அதற்கும் இவர்களிடம் சீ.சீ.டி.வி.கெமரா காட்சிகள் இல்லை.
இவை எல்லாம் முஸ்லிம் அமைச்சர்கள் செய்யும் சூழ்ச்சிகள். இவர்களுக்கு நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் தெளிவான தேவை இருக்கின்றது.
நாட்டில் முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தும் கடுமையான தேவை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கே உள்ளது. வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் தேவை இவர்களுக்கு உள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து அமைப்புகளுக்கு நிதியுதவி பெற்ற ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. 6 மில்லியன் ரூபாவை அமெரிக்க தூதரகம் வழங்கியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பணத்தை நிதியுதவியாக பெற அவர்களே தமது பள்ளி வாசல்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஆனால் இந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து பொதுபல சேனா மீது குற்றம் சுமத்துகின்றனர்.
ஏன் இவர்கள் பொதுபல சேனா மீது இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்?. அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீ.சீ.டி.வி. கெமராக்கள் செயலிழக்கின்றன. இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பாணந்துறையில் நஷ்டமடைந்த கடைகள் மீது அவர்களே தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளனர். காப்புறுதியை பெறவே இவர்கள் கடைகளை தாக்கிக்கொண்டுள்ளனர்.
1983ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டிருக்காவிட்டால் நாடு பொருளாதாரத்திலும் கல்வியிலும் வளர்ச்சியடைந்திருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இது உண்மையான காரணம் இல்லை. நாட்டின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியாது போனதன் காரணமாக தமிழர்கள் ஆயுதங்களை கையில் எடுத்தனர்.
தற்போது ஏற்பட்டுள்ள முஸ்லிம், சிங்கள பிரச்சினைக்கு நாட்டை முன்னேற்ற அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரி சமமான வகையில் செல்வம் பகிர்ந்து செல்லாமை, மக்களின் உரிமைகள் நிறைவேற்றப்படாமை, அரசியலில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருக்கும் அதீத அதிகாரங்கள் இவற்றுக்கு காரணம் எனவும் டிலாந்த விதானகே கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment