நல்லாட்சியின் எனும்  பேயாட்சி



எமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளினூடாகவும் பலவிதமான படிப்பினைகளை பெற்றுக்கொள்ளலாம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆட்சி பீடத்திலிருந்து விரட்டி  கொண்டு வந்த ஆட்சிக்கு நல்லாட்சியென  பெயர் சூட்டி அழைத்து,அவ் ஆட்சியை யாவரும் பெருமைப்படுத்தினார்கள்.இன்று அவ் ஆட்சி சென்று கொண்டிருக்கும் பாதையை பார்க்கும் போது நல்லாட்சி என்ற பெயருக்கு இவ் ஆட்சி எந்த விதத்திலும் தகுதியற்றதாகும்.இதனூடாக எப்போதும் மனித சிந்தனைகள் ஒரு எல்லைக்குட்பட்டது தான் என்ற படிப்பினையை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்.

மாணிக்கமடு விவகாரம்

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இறக்காம பிரதேசமானது  சிறுபான்மையினர் வாழும் பிரதேசமாகும். அந்த பிரதேசத்தில் மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது.இப் புத்தர் சிலை தொல் பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான காணியிலே வைக்கப்பட்டுள்ளது. தொல் பெருள் திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் எந்த விதமான நிர்மாணங்களையும் செய்ய முடியாது. இச் சட்டத்தில் புத்தர் சிலைகளுக்கு மாத்திரம் எந்த  விதி விலக்கும் வழங்கப்படவுமில்லை. அதாவது இங்கு சில வைப்பதாக இருந்தால் தொல் பொருள் இடங்களில் புத்தர் சிலை  வைக்க அனுமதியுள்ளதென சட்டத்தை மாற்ற வேண்டும். முதலில் இப் புத்தர் சிலை நிறுவப்பட்டமையானது சட்டத்துக்கு முரணான செயலாகும். அதற்காகவே அக் குழுவினர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனை மு.கா சட்டரீதியாக கையாள வழக்குத்தாக்கல் செய்திருந்தது. இவ் விடயமானமது நேரடியாக சட்டத்துடன் தொடர்புபடுவதால் இவ் விடயத்தில் மு.கா வழக்குத் தாக்கல் செய்திருந்தமை ஒரு கோணத்தில் சிறந்த வழி முறையாக இருந்தாலும் குறித்த சிலை நிருவலாளர்கள் சட்டத்தை மதிப்பவர்களாகவும் இலங்கை அரசு சட்டத்தை நிலை நிறுத்த எதையும் செய்யும் ஆற்றல் படைத்ததாகவும் இருக்க வேண்டும். ஞானசார தேரர் நீதி மன்ற உத்தரவையே அவமதித்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இப்படி இருக்கையில் வழக்குத் தாக்கல் செய்து இதனை சாதிக்க முடியும் என நம்புவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசை பட்ட கதையாகவே அமையும். இருந்த போதிலும் இவ்விடயத்தில் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் மிகவும் சிரத்தை எடுத்திருந்தமையை மறுக்க முடியாது. இச் சிலையை அகற்ற  இயலுமான அத்தனை வழிகளையும் பயன்படுத்த வேண்டும்.அந்த வகையில் இதுவும் ஒரு வழியாகும்.நீதி மன்றம் சிலை நிருவலாளர்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கிவிட்டால் அது முஸ்லிம்களுக்கு மிகவும் சாதகமாகவும் அமைந்துவிடும்.

 இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் உள்ளதன் காரணமாகவும் மாணிக்கமடு பிரதேசமானது தடை செய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதன்  காரணமாகவும் அவர்கள் சிறிதளவாவது சட்டத்தை மதிப்பவர்களாக இருந்தால் குறைந்தது நீதி மன்ற தீர்ப்பு வரும் வரையாவது அங்கு எந்த வித மத அனுஸ்டானங்களை செய்யாமல் பொறுமையாக இருந்திருக்க வேண்டும். கடந்த பத்தாம் திகதி வெசாக் தினமன்று அங்கு பௌத்த தேரர்களினால் மத அனுஸ்டானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதி மன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகாம வரும் என நினைத்திருந்தால் இவ்வாறு நீதி மன்ற தடையை மீறி செயற்பட முனைந்திருக்க மாட்டார்கள்.இதனூடாக முஸ்லிம்களின் நீதி மன்ற நாடுகை தங்களது சாதகாமான பதிலை வழங்காதென குறித்த இனவாதிகள் கருதி இருக்கலாம். அங்கு மேற்கொள்ளப்பட்ட மத அனுஸ்டானத்துக்கு பாதுகாப்பு படையினரின் அதி உச்ச பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. நீதி மன்றத்தின் கட்டளையை மீற பாதுகாப்பு படையினர் உதவி நல்கியுள்ளனர்.ஒரு நாட்டில் அனைவரும் இறுதியாக நாடிச் செல்கின்ற நீதி மன்றத்தின் கட்டளையை செயற்படுத்த வேண்டிய பாதுகாப்பு படையினர் அதனை மீறுவதற்கு உதவி செய்வது இந் நாடு நீதியற்ற பாதையில் பயணிப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதுவெல்லாம் முஸ்லிம்களுக்கும் இந் நாட்டின் எதிர்காலத்துக்கும் சிறந்த சமிஞ்சைகள் அல்ல. இன்று பலர் ஒரு தவறு செய்கின்ற போது அது நீதி மன்றத்தில் நிரூபணமானால் தனக்கு இத் தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பல விடயங்களை செய்யாது தவிர்ந்து கொள்கின்றனர். அதே நேரம் தனது இந்த அதிகாரத்தை பாவித்தால் நீதி மன்றத்தால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டால் அத் தவறை அஞ்சாமல் செய்வோம். நீதி மன்றத்தை கூட கணக்கில் எடுக்காமல் செல்லும் செயற்பாடுகளானது எதிர்கால பௌத்த தேரர்களுக்கு தவறான பாதையை காட்டி வம்.கடந்த வெசாக் தினமன்று மாணிக்கமடுவில் அதிகமான இளம் வயதுடைய பௌத்த தேரர்கள் கலந்துகொண்டதாக அறிய முடிகிறது.இவர்கள் தவறான வழியின் பால் நடைபயில இவைகள் வழி சமைக்கும் என்பதில் மாற்றமில்லை. இன்றைய ஒரு ஞானசார தேரரால் பல ஞானசார தேரர்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றார்கள்.

இங்கு மாத்திரம் புத்தர் சிலை நிறுவப்படுமாக இருந்தால் ஒன்று தானே என்று பொறுமையுடன் இருந்து விடலாம். அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தொல் பொருள் திணைக்களத்துக்குரிய இடங்கள் உள்ளன.இதனை வேடிக்கை பார்க்கும் போது ஒவ்வொரு இடமாக சில வைத்து வரக் கூடிய அச்சம் தோன்றியுள்ளது.இங்கு சில வைப்பதை ஏற்றுக்கொண்டீர்கள்,ஏன் அங்கு வைப்பதை எதிர்க்கின்றீர்கள் என கேட்டால் எதுவும் கூற முடியாது போய் விடும். தற்போது அச் சிலைக்கு அருகாமையில் பௌத்த மதஸ்தலம் ஒன்றை கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கான எல்லை நில அளவைகள் கூட முடிந்துவிட்டன. இப் பௌத்த மதஸ்தலமானது தமிழ் மதத்தை சேர்ந்த ஒரு தனி நபரின் காணி என்பது குறிப்பிடத்தக்கது. அன்றே தீகவாபிக்கு செல்லும் பக்தர்கள் தங்கிச் செல்ல ஒரு மடம் அமைக்கடப் போகிறது என்ற கதை பிசு பிசுத்திருந்தது.அது மீண்டும் ஆறு மாதங்களின் பின் பௌத்த விகாரை அமைக்கப்படப்போவதாக மாறியுள்ளது. இதற்கெல்லாம் இவர்கள் கற்பிக்கும் நியாயம் இங்கு பல வருடங்களுக்கு முன்பு சிலையும் பௌத்த விகாரையும் இருந்தது என்பதாகும். முன்பொரு காலத்தில் சிலையும் பௌத்த விகாரையும் இருந்திருந்தால் முதலில் அவற்றுக்கான ஆதாரங்கள்  வெளிப்படுத்தப்பட வேண்டும். அது யாரால் உடைக்கப்பட்டது என்ற வரலாறுகள் தேடப்படல் வேண்டும். தொல் பொருள் இடங்களை அது  இன்று எவ்வாறு உள்ளதோ அவ்வாறே பாதுக்காப்பட வேண்டுமே தவிர அவைகள் முன்னர் இருந்தது போன்ற புணரமைக்கப்பட முடியாது. அதன் அழிவுகள் கூட சில வரலாற்றை நினைவு கூறும் என்பது குறிப்பிடத்தக்கது. அவைகள் மீள புணர் நிர்மாணம் செய்யப்படும் போது தொல் பொருள் இடம் என்ற அந்தஸ்தை இழந்துவிடும். இவைகள் தொல் பொருள் இடங்களாக இருந்தால் இங்கு கட்டட  நிறுவல்களுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக அவர்களே குறித்த இடங்களை பாதுகாக்கின்றனர். இச் சிலை நிறுவலுக்கும் கட்டட நிறுவலுக்கும் இவற்றினை நிறுவ முயற்சிப்பவர்கள் கூறும் நியாயங்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவையல்ல.

மாணிக்கமடுவில் சிலை வைக்கப்பட்ட போது முஸ்லிம்கள் கொதித்து எழுந்த போதும் அவர்களின் கொதிப்புக்கள் சில நாட்களிலேயே அடங்கிவிட்டது. தொடர்ச்சியான அழுத்தங்களை யாருமே வழங்கவில்லை. அன்று பௌத்த மக்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை எதற்கு போன்ற கருத்துக்களை அமைச்சர் ராஜித கூறியிருந்தார். இவற்றை சாதகமாக பயன்படுத்தி அதனை நீக்க அதன் பின்னால் உறுதியாக நின்றிருக்க வேண்டும். இன்று இந்த சிலை வைப்பானது விமர்சனத்தை தோற்றுவித்துள்ளதால் இச் சிலைக்கு ஏதேனும் பாதிப்புக்கள் நிகழுமாக இருந்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கை நாட்டில் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களே இச் சிலையை உடைத்துவிட்டு முஸ்லிம் மக்கள் தலை மீது பழி போட்டால் இலங்கை முஸ்லிம்களின் நிலை என்னவாகும்? அதே போன்று முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு ஏதேனும் செய்துவிட்டால் அதன் விளைவுகளை சுமக்க போவது யார்? குறித்த இடத்தில் பன்சலை அமையப்பெறுமாக இருந்தால் அதனை சுற்றி சிங்கள மக்களின் நடமாட்டம் அதிகரிக்கும். அங்கு அவர்களின் மத அனுஸ்டானங்கள் இடம்பெறும். அம்பாறை மாவட்டத்தில் அவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். அதே போன்று அதனை சுற்றியுள்ள சிறுபான்மையினர் தங்களது காணிகளை குறைந்த விலைக்காவது விற்பனை செய்துவிட்டு ஓடும் நிலை ஏற்படும். அவர்கள் தீகவாபியை தளமாக கொண்டு அம்பாறை மாவட்டத்தின் பாரிய நிலப்பரப்பை தங்கள் வசப்படுத்திக்கொள்வர்.பொத்துவில் தொகுதியில் அமைந்துள்ள ஒலுவில் முஸ்லிம் கிராமத்தை உள்ளடக்கியதாக தீகவாபி பிரதேச சபை ஒன்றை நிறுவுவதற்கான கதையாடல்கள் பல ஆண்டு காலமாக உள்ளன. அவற்றுக்கு இப் பிரதேசத்தை அவர்கள் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது வலுச் சேர்க்கும். அண்மையில் ஒலுவில் அஷ்ரப் நகர் வீதி தீகவாபி வீதியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தீகவாபிக்கு புனித பிரதேசத்துக்கு சொந்தமானதென பேரினவாதிகள் முஸ்லிம் கிராமங்களை தங்களுடையதென உரிமை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது. அது போன்று அண்மையில் அமைச்சர் தயா கமகே தீகவாபியை சுற்றியுள்ள 12000 ஏக்கர் காணி தீகவாபி புனித பிரதேசத்துக்கு சொந்தமானதென அம்பாறை மாவட்டத்தின் பல முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் தீகவாபிக்கு போகும் வழியில் தங்க தங்குமிடம் ஒன்றை  அமைக்கப்போவதாக கூறியவர்கள் தற்போது அங்கு பன்சலை நிறுவலுக்கான ஆதாரங்களை முன் வைக்கின்றனர். இவற்றை எல்லாம் வைத்து சிந்தித்தால் இவற்றின் பின்னால் பாரிய சதி ஒன்று உள்ளமை தெளிவாகிறது.

மாணிக்கமடு விவகாரத்தில் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தலையீடு செய்துள்ளார். அங்கு சென்ற ஞானசார தேரர் அங்கு சென்று விகாரை அமைப்பதற்கு தனது பூரண ஆதரவை வழங்கியுள்ளார். மேலும்,முஸ்லிம்கள் செறிந்து வாழும் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள விகாரைக்கும் தான் விஜயம் செய்ய போவதாக கூறியுள்ளார். இவரின் இக் கூற்றில் பல விடயங்கள் உள்ளன. இவர் ஏன் அக்கரைப்பற்று விகாரைக்கும் தான் விஜயம் செய்யப்போவதாக கூற வேண்டும்? அதாவது இவர்கள் தங்கள் ஆதிக்கத்தை பௌத்த மதஸ்தலங்கள் ஊடாகவே நிறுவி வருகின்றனர் என்பதை அச் செய்தி வெளிப்படுத்துகிறது. இறக்காமத்தில் பன்சலை அமையப்பெறுவதனூடாக  தங்கள் ஆதிங்களை அதிகரிப்பது இவர்களது நோக்கங்களாக இருக்கலாம். இங்கு சிலை வைக்க வருபவர்களின் செயற்பாடுகளானது பொது பல சேனாவின் செயற்பாடுகளுக்கு ஒத்ததாகவே உள்ளது. இதன் பின்னணியில் பொது பல சேனா இருப்பதாக காட்டாமல் இத் திட்டத்தை செயற்படுவது அவர்களது நோக்கமாக இருக்கலாம். குருநாகலில் பொது பல சேனா அமைப்பானது தனது முகத்தை வெளிக்காட்டாமலேயே முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாட்டை முன்னெடுத்ததாக அவர்கள் பகிரங்கமாக பெருமை பாராட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு முஸ்லிம்களின் எதிர்ப்புக்கள் அதிகமாக இருப்பதால் இறுதியில் தங்களது முகத்தை வெளிக்காட்டி செய்ய வேண்டிய நிலைக்கு பொது பல சேனா அமைப்பினர் தள்ளப்பட்டிருக்கலாம்.

மாவில்லு வர்த்தமானி

மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதை போன்றே மாவில்லு வர்த்தமானி பார்க்கப்படுகிறது. 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இருந்து இரவோடு இரவாக விரட்டியடிக்கப்பட்டனர்.அவர்கள் அங்கிருந்து வெளியேறிய பின் அங்கு உயர்ந்த மரங்கள் வளர்ந்து காடுகளாக மாறின. ஏற்கனவே வில்பத்து வனத்துக்கு அருகாமையில் இக் காணிகள் இருந்தமையால் மரங்களோடு மரங்கள் சேர்ந்து காடுகளாக தோற்றமளித்தன.யுத்தம் முடிந்த பிறகு தங்களது பூர்வீக குடிகளில் குடியமரலாம் என்ற  மகிழ்ச்சியோடு சென்ற மக்களை நோக்கி பெரும் பான்மையின இனவாதிகள் போர்க்கொடி தூக்கினர். முஸ்லிம்களின் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் தடுக்கப்பட்டது. அந்த வகையில் 2012ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை வில்பத்து வனத்துக்கு சொந்தமான காணிகளாக வர்த்தமாணிப்படுத்தினார். அதில் முஸ்லிம்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டிருந்தது.அந்த அநீதியை இன்று வரை திருத்திக்கொள்ள முடியாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இருந்தாலும் அதற்கு பகரமான காணிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் ஒரு குறித்த தொகை (முழுமையான அளவல்ல) வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அப்படி இருக்கையில் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் அரசு மீண்டும் அப் பகுதி முஸ்லிம்களின் தலையில் இடியை விழச் செய்துள்ளது. ஜனாதிபதி மைத்திரி வெளிநாட்டில் இருக்கும் போது மாவில்லு வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளார். அப்படி ஜனாதிபதி மைத்திரிக்கு என்ன அவசரம் என்று சிந்தித்தாலே இவ்விடயத்தில் இனவாதிகளின் வாசிப்புக்கு ஜனாதிபதியின் ஆட்டம் தெளிவாகிறது.

அன்று மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் வனமாக வர்த்தமானிப்படுத்தப்பட்ட போது அன்று அதனை யாருமே அறிந்திருக்கவில்லை.2015ம் ஆண்டு `காலப்பகுதியிலே அது வெளிச்சத்துக்கு வந்திருந்தது.அன்று அதனை யாருமே அறிந்திருக்காகத்தான் காரணமாக அது விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளை குறை கூற முடியாது. அப்படி குறை கூற வேண்டுமாக இருந்தால் அவர்கள் அக் காலத்தில் அது தொடர்பில் சுட்டிக்காட்டியவர்களாக இருக்க வேண்டும். அன்று முஸ்லிம்களுக்கு தெரியாமல் இவ்விடயம் அரங்கேற்றப்பட்டமையனது பிழையானது என ஒரு வகையில் கூறினாலும் இன்னுமொரு வகையில் எமது முஸ்லிம் மக்கள் இவ்வாறான வர்த்தமானியில் அன்று கவனம் இல்லாமல் இருந்திருக்கலாம். அக் காலத்தில் இப்படியான ஒரு சதி நிகழலாம் என்ற சிந்தனை இருக்கவில்லை. இருந்தாலும் இப்படியானதொரு சதி நிகழ்ந்துவிட்டது என இருக்காமல் அவ் வர்த்தமானியை மீளப் பெறுவதில் எமது முஸ்லிம் சமூகம் உறுதியாக இருக்கவில்லை. ஆறிய கஞ்சு பழங் கஞ்சு என்பது போல அவ் விடயம் தொடர்பில் பெரிதும் கவனம் செலுத்தப்படவில்லை.

இன்று மாவில்லு வர்த்தமானியை ஜனாதிபதி மைத்திரி வெளிநாட்டில் இருந்து தனது கையொப்பத்தை இட்டு அனுமதித்துள்ளார். வெளிநாட்டில் இருந்தவாறு கையொப்பம் இடுமளவு ஜனாதிபதி மைத்திருக்கு என்ன அவசரம். இந்த அவசரத்தின் பின்னால் இனவாத அழுத்தங்கள் இருக்க வேண்டும் என்றே பெரிதும் நம்பப்படுகிறது. இன்று வில்பத்து வனத்தை அண்டிய முசலி பிரதேச காணிகள் தொடர்பில் அப் பகுதியில் முன்னர் வாழ்ந்த,வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் சில இனவாதிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் நிலவுகிறது. இவ் விடயத்தில் பாரிய பிரச்சினைகள் இருப்பது யாவரும் அறிந்ததே.இங்கு ஏதாவது ஒரு முடிவு எடுப்பதானால் அது தொடர்பில் முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் கலந்துரையாடியே  ஜனாதிபதி மைத்திரி எடுத்திருக்க வேண்டும். ஒரு வர்த்தமானி வெளியிடப்பட்டு அதனை மீளப் பெறுவது பெரிய விடயமல்ல.கு றித்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதனை ஏற்றுக்கொண்டு மீளப் பெறுமாறு கூறினால் போதுமாகும். இது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் நிலவுகின்ற போது இவ்வாறு செயற்படுவதானது இனவாதிகளின் வாதத்தை வலுக்கச் செய்யும்.மீளப் பெறும் நடவடிக்கைகளுக்கு எதிராக இனவாதிகள் கிளர்ந்து எழுந்தால் அது நிச்சயம் தாக்கம் செலுத்தும். அப்படி இருக்கையில் முஸ்லிம்,தமிழ் அரசியல் வாதிகளிடம் வினவாது இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி செயற்பட்டுள்ளமையானது இனவாதிகளின் ஊதல்கள் மைத்திரியின் காதுகளை நிறைத்துள்ளதை அறிந்து கொள்ளச் செய்கிறது.ஜனாதிபதி மைத்திரி முஸ்லிம்களை புறக்கணித்த பாதையில் பயணிப்பதையும்  எடுத்து காட்டுகிறது.

கல்குடா மதுபான தொழிற் சாலை

இலங்கையில் இருக்கின்ற மதங்களில் பௌத்த மதம் உட்பட அனைத்து மதங்களும் மதுபானம் அருந்துவதை தடை செய்துள்ளது.மதங்கள் தடுக்கின்றவோ இல்லையோ அனைவரும் அதனை பிழையான செயலாக கருதுகின்றனர்.இன்று தமிழ் நாட்டிலே பெண்கள் மதுபான சாலைகளை முன்னின்று உடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வரசு ஆட்சிக்கு வரும் கோசங்களில் போதைப் பொருள் ஒழிப்பு கோசம் முதன்மையாக இருந்தது. மைத்திரி ஆட்சியமைத்து போதை பொருளை ஒழிப்பதாக ஓரிரு நிகழ்வுகளையும் நடாத்தி இருந்தார். இன்று இலங்கை நாட்டில் போதை பொருள் பாவனை தலை தூக்கியுள்ளதை கொழும்பு பிரதேசத்தில் பல வருடங்கள் முன்பிருந்தது போன்று குடுக் காரர்கள் நடு வீதிகளில் படுத்துறங்குவதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இவைகள் இவ்வரசின் ஆட்சிக் காலத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டுகின்ற போதும் இவ்வரசை மீறி இவைகள் நடக்கின்றன  என்ற வாதத்தை முன் வைத்து சிறிதளவு தப்பித்துக்கொள்ளலாம்.இவ்வாட்சி காலத்தில் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பிரதேசத்திலே மிகப் பெரும் மதுபான சாலை ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.இதுவும் தன்னை அறியாமலேயே நடக்கின்றது என சிறிதளவும் நியாயம் கற்பிக்க முடியாது.இவ்விடயமானது இலங்கையில் போதை பொருள் பாவனை அதிகரிப்பிற்கு இவ்வரசே காரணம் என்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது.குறித்த நிறுவனத்தை WD மென்டிஸ் என்ற நிறுவனமே ஆரம்பித்துள்ளது.இந் நிறுவனமானது மத்திய வாங்கி ஆளுநரின் மருமகனுடையது.மத்திய வங்கி ஆளுநர் யாருடைய ஆள் என்பது யாவரும் அறிந்ததே.குறிப்பாக இந்த நிறுவனத்துக்கு வரி விலக்கு அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில தமிழ் நாட்டில் பெண்கள் மது பான சாலைகளை உடைக்கின்ற போதும் பௌத்த மதத்தை காக்கப்போவதாக முஸ்லிம்களுக்கு பல இன்னல்களை வழங்கி கொண்டிருக்கும் பொது பல சேனா அமைப்பானது இவ்வாறான விடயங்களை தங்களது காதுகளுக்கும் எடுக்கவில்லை. இதனை எதிர்க்க அவர்களுக்கு கொந்தராத்து வழங்கப்படாமல் இருக்கலாம். இன்று கல்குடாவிலே மிகப் பெரிய மதுபானசாலை ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதனூடாக இவர்கள் தங்கள் மதத்தையே பூரணமாக பின்பற்றுபவர்களல்ல என்பதை கூறி நிற்கின்றது.இருப்பினும் இன்று இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்கள் தவிர்ந்து ஏனைய பிரதேசங்களில் மதுபான விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.இவ்வரசானது மதுபான சாலை ஒன்றை அமைக்க சிந்தித்தால் முஸ்லிம்கள் அதிகம் செறிந்து வாழும் பிரதேசங்களை தவிர்த்து கொள்ள வேண்டும்.இருப்பினும் இத் தொழிற்சாலை அமைப்பிற்கு எத்தனையோ இடங்கள் இருந்தும் இவ்விடம் தெரிவு செய்யப்பட்டதில் இனவாத சூழ்ச்சிகள் இருக்கலாம்.குறிப்பாக இவ்வாறான நிறுவனங்களை நிறுவுவதற்கு மாகாண மற்றும் பிரதேச சபை அனுமதிகள் பெறப்பட வேண்டும்.அவ்வாறான எந்த அனுமதிகளும் இங்கு பெறப்படாமல் நேரடியாக மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.இப்படி ஒழித்து இந் நிறுவனத்தை கொண்டு வந்த விடயமே இதில் வேறு சில சூழ்ச்சிகள் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இன்று இலங்கை நாட்டில் சிறுபான்மையின மக்களை நோக்கி பல்வேறு சதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.அவற்றில் மிக முக்கியமானது முஸ்லிம்களின் பொருளாதரத்தை முடக்குவதாகும்.முஸ்லிம்களை குடிப் பழக்கத்துக்கு அடிமையாக்குவதன் மூலம் மிக இலகுவாக அவர்களது பொருளாதாரத்தை அழித்துவிடலாம்.இஸ்லாத்தில் வட்டி தடை செய்யப்பட்டுள்ள போதும் முஸ்லிம் பிரதேசங்களில் வட்டிக் கடைகளாக வங்கிகள்  மலிந்து காணப்படுகின்றன.அங்கு சென்று அடகு வைத்தல் போன்ற விடயங்கள் பெரும் பாவமான விடயமாக யாரும் கருதுவதில்லை.இவ்வாறான நிறுவனங்கள் நிறுவப்படுவதனூடாக மதுபானம் அருந்துவதும் ஒரு சாதாரண விடயமாக மாறும்.இங்கு பலவாறான தொழில் வாய்ப்புக்களை வழங்கி இதற்கான எதிர்ப்புக்களை கட்டுப்படுத்த இதன் நிருவனவாளர்கள் சிந்திக்கலாம் இவ்விடயத்தில் சிறுபான்மையின மக்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள சிலர் இதற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.அது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சிலர் பகிரங்க நிகழ்வுகளிலும் இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இருந்த போதிலும் தமிழ் மக்களின் பலமான எதிர்ப்பின் காரணமாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நேரடியாக தங்களது எதிர்ப்பை வெளிக்காட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இவ்விடயத்தில் கல்குடா பிரதேசத்தில் முஸ்லிம்கள் ஜும்மா தொழுகையை தொடர்ந்து மிகப் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.ஒரு பாதையினூடாகவே தௌஹீத் ஜமாத்தும் கல்குடா ஜம்மியத்துல் உலமாவும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.இவ்விடயத்தில் இவ் இரு அமைப்பும் இணைந்து ஏன் செயற்பட முடியாது.இவ்விடயத்தில் மத,குழு வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவதே வெற்றியை தரும்.ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பௌத்த மத தேரர் ஒருவர் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top