புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம் மக்களை

மனிதாபிமானத்துடன் குடியேற்றவேண்டிய பொறுப்பு

வடமாகாணத்தில் அதிகாரத்தை வைத்திருக்கும்

கட்சிக்கு இருக்கின்றது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன்



'வாருங்கள், குடியேறுங்கள், முழு உதவிகளையும் உங்களுக்கு நல்குகின்றோம்' என்று வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களை தமிழ்த் தலைவர்கள் அழைக்கின்றார்கள். அதே நேரம் அவர்களை நம்பி குடியேறச் செல்லும்போது அதே கட்சியை சேர்ந்த இன்னும் ஒரு சாரார் தடை போடுகின்றார்கள் இது எமக்கு வேதனை தருகின்றது. இவ்வாறு  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கவலை வெளியிட்டார்.
இலங்கையிலுள்ள தொலைக்காட்சி ஒன்றில் புதன்கிழமை இரவு (2017.05.24) இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மறிச்சுக்கட்டி விவகாரம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினை, தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விளக்கமளித்தார்.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் இக்கருத்தை கவலையுடன் வெளியிட்டார்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் கூறியதாவது,
சுமார் 25 வருடங்களாக பல பிரதேசங்களில் வாழும் அகதிகளின் மீள்குடியேற்றத்தில் குறிப்பிடத்தக்களவு எந்தவொரு முன்னேற்றமோ, எந்தவொரு திட்டமோ மேற்கொள்ளப்படாத நிலையில் நாம் அரசிடம் விடுத்த வேண்டுகோளையடுத்தே மீள்குடியேற்ற விசேட செயலணி உருவாக்கப்பட்டது.
எனினும், இந்தச் செயலணியை இயங்கவிடப்போவதில்லையென யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் வலுவாக கூறப்பட்டதாக  சுபியான் மெளலவி அவர்களால் எனக்கு கூறப்பட்டது.
புலிகளால் உடமைகள் பறிக்கப்பட்டு துரத்தப்பட்ட அங்கு சிறுபான்மையினராக வாழ்ந்த முஸ்லிம் மக்களை மனிதாபிமானத்துடனும், மனச்சாட்சியுடனும், மீண்டும் குடியேற்ற வேண்டிய பொறுப்பு மாவட்ட, பிரதேச அபிவிருத்தி குழுக்களினதும், வடமாகாண சபையினதும் அதிகாரத்தை வைத்திருக்கும் கட்சிக்கு இருக்கின்றது. எனினும், அவர்கள் உதவாவிட்டாலும் பரவாயில்லை தடையாக இருக்கின்றார்கள் என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் பிரச்சினை.
புலிகள் வடக்கிலே கோலோச்சிய காலம் வேறு, இப்போது ஜனநாயகம் நிலவுகின்றது. எனினும் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பங்கு கொண்டவர்கள் வடக்கு முஸ்லிம்கள் குடியேற இன்னும் முட்டுக்கட்டையாக இருப்பதுதான் கவலைக்குரியதும் வேதனையானதுமான விடயமாக உள்ளது.
அரசியல் அமைப்புச் சபைக் கூட்டங்களில் தேர்தல் முறை மாற்றம், அரசியல் சீர்திருத்தம் என்ற பாரிய விடயங்களை எல்லாம் பேசிக்கொண்டு இருப்பவர்கள் துரத்தப்பட்ட, தங்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த அவர்களுக்கு சிறுபான்மையினரான சகோதர முஸ்லிம் இனத்தை அரவணைக்க மறுக்கின்றார்கள் என்பதுதான் ஆச்சிரியமாக இருக்கின்றது.
இது தொடர்பில் எங்களுடன் அமர்ந்து ஒரு சில மணி நேரமாவது, பேசுவதற்கும் விரும்புகிறார்கள் இல்லை. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் இந்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அவர்களின் காணிப்பிரச்சினை தொடர்பிலும் தீர்வை காண வேண்டியதன் அவசியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் ஐயா, வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றேன். அவர்கள் இந்த விடயத்தில் நியாயமாக சிந்திக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கின்றேன்.
நல்லாட்சியின் முக்கிய கர்த்தாவான ஜ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டோம்.இந்த ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் தொடர்பில் கணிசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியும், பிரதமரும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் 100சதவீதம் உதவி அளிப்பார்களென்று நம்புகின்றோம். விசேட செயலணிக்கு வடக்கில் உள்ள வேறு எவராவது தடைகள் ஏதும் போட்டால் எங்களது ஒட்டுமொத்த பலத்தையும் பயன்படுத்தி நியாயம் கேட்போம்.
உள்ளுர் பொறிமுறையிலோ இந்த அரசாங்கத்திலோ பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டால் ஜெனீவா வரை சென்று பாதிக்கப்பட்ட மக்களை நியாயம் கேட்க வைப்போம்.

இருந்தும் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நல்ல நியாயம் கிடைக்கும் என நம்புகின்றோம். இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top