பள்ளிவாசல் தாக்குதல்களை நியாயப்படுத்தும் விமலும்

பேரினவாதிகளுக்குத் துணை போகும் சிங்கள ஊடகங்களும்


ஞானசாரவின் பிரசாரம் மற்றும் வர்த்தக நிலையங்கள்-பள்ளிவாசல்கள் மீதான  தாக்குதல்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் தொடர்வதை முழு நாடும் அறியும்.
ஆனால்,முஸ்லிம்கள் தாக்கப்படுவதை விரும்பும் சிங்கள ஊடகங்கள் இப்படியான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்றே காட்டிக்கொள்வதாக இல்லை.அப்படிக் காட்டினாலும் அதைப் பார்க்கும் மக்கள் அது இயற்கை அனர்த்தம் என்று நினைக்கும் வகையில்தான் செய்தி அமைக்கப்படுகின்றது.
பள்ளிவாசல்கள்மீது  மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை பொதுவாக வணக்கஸ்தலங்கள்மீதான தாக்குதல்கள் என்று செய்தி வெளிடுவதாலும் ஓரிரு வினாடிகளில் அந்தச் செய்திகள் முடிந்துவிடுவதாலும்  எந்த மதத்துக்குரிய வணக்கஸ்தலம் என்று மக்களால் அறிய முடியாமல் போகின்றது.மின்னல் வேகத்தில் அந்தச் செய்தி வந்து போவதால் அது முக்கியமற்ற சாதாரண சம்பவம் என்று மக்கள் எண்ணுகின்றனர்.
வர்த்தக நிலையங்கள்மீது மேற்கொள்ளப்படும் பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான செய்திகளும்  இதே பாணியில்தான் வெளியிடப்படுகின்றன. இயற்கை அனர்த்தம் போலவே அவை காண்பிக்கப்படுகின்றன. எந்தவொரு செய்தியிலும் அவை முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் என்று சுட்டிக்காட்டப்படுவதில்லை.அந்தச் செய்திகளும் மின்னல் வேகத்தில் வந்து மின்னல் வேகத்தில்தான் மறைகின்றன.

அதைவிடவும் கேவலமான-இனவாத சிந்தனைகொண்ட இந்தச் செயலைப் பாருங்கள்.இந்த வாரம் சிங்களத் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவிடம் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர் கேட்கின்றார் '' முஸ்லிம்களின் சில வணக்கஸ்தலங்கள் தாக்கப்படுகின்றன என்று இணையத்தளங்களில் பார்த்தேன். அதுபற்றி என்ன நினைக்கிண்றீர்கள்'' என்று.
முழு நாட்டு முஸ்லிம்களையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கும்-நாடுபூராகவும் நிகழ்த்தப்பட்டு வரும் இந்தச் சம்பவங்களை இணையத்தளங்களில் பார்த்தேன் என்று சொல்வதன் ஊடாக அவை பெரி சம்பவங்கள் அல்ல என்றும் இனவாத செயற்பாடுகள் அல்ல என்றும் அவர் மறை முகமாகச் சொல்கிறார்.
இதற்கு விமல் வழங்கும் பதில் இதை விட இனவாதம் கொண்டதாகவும் முஸ்லிம்களை மேலும் காயப்படுத்துவதாகவும் அமைத்திருக்கின்றது.
''நானும் அறிந்தேன். அமெரிக்கா இதற்குக் கண்டனமும் தெரிவித்துள்ளது. வடக்கு-கிழக்கில் பௌத்த விகாரைகள் தாக்கப்படும்போது கண்டனம் தெரிவிக்காத அமெரிக்கா முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்படும்போது மாத்திரம் கண்டனம் தெரிவிக்கின்றது.'' என்று சொல்கிறார் விமல்.
விமலின் இனவாதம் எப்படி இருக்கின்றது என்று பார்த்தீர்களா.பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதை அவர் எப்படி நியாயப்படுத்துகின்றார் பாருங்கள்.இந்த இனவாதத் தாக்குதல்களின் பின்னணியில் அந்த அரசியல் சக்தி செயற்படுகின்றது என்பதை அந்த நிகழ்ச்சியைப் பார்த்த சிங்கள மக்கள் விளங்கி இருப்பார்கள்.
பேரினவாதத்துக்குத் துணைபோகும் சிங்கள ஊடகங்களும் இவ்வாறான இனவாத அரசியல்வாதிகளும் இருக்கும்வரை ஒருபோதும் இந்த நாட்டில் பேரினவாதத்தை இல்லாதொழிக்க முடியாது.

முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருவிகளுள் ஒன்றாகப் பார்க்கப்படும் தனித்துவமான ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு இல்லாத பட்சத்தில் இவ்வாறான அவல நிலை தொடரவே செய்யும்.

[எம்..முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர்]

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top