முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும், தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பலபிட்டவுக்கும், கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, தலா ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் அவர்களை விடுவித்தார்.

சரீரப் பிணையாளர்களில் இருவர் அரச அதிகாரிகளாக இருக்க வேண்டும் எனவும் ஒருவர் உறவினராக இருக்க வேண்டும். அரச அதிகாரிகள் இருவரும் நீதிமன்ற எல்லைக்குள் வசிப்பவர்களாக இருக்கவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

அத்துடன், பிணையில் விடுவிக்கப்பட்ட இருவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடைவிதித்த நீதிபதி, அவ்விருவரினதும் கடவுச்சீட்டை, நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.

2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதிக்கும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், (கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில்) சமய அனுட்டானத்துக்கான 'சில்' ஆடைகளை வழங்குவதற்காக, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபாய் நிதியை மோடி செய்தனர் என, மேற்குறிப்பிட்ட இருவருக்கும் எதிராக, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இருவரையும் குற்றவாளியாக இனங்கண்ட, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, அவர்களுக்கு தலா மூன்று வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை தீர்ப்பளித்திருந்தார்.

தலா 50 மில்லியன் ரூபாய் வீதம் 100 மில்லியன் ரூபாயை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு, நட்டஈடாகச் செலுத்த வேண்டும் என்றும் இருவருக்கும் தலா இரண்டு மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த நீதிபதி, கட்டத்தவறின் ஒருவருடம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top