மெக்ஸிகோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது. இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ள பலநூறு பிரேதங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

மெக்ஸிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியை அடுத்துள்ள பியூப்லா மாநிலம் மற்றும் பிறபகுதிகளில் நேற்று 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. கடந்த 1985-ம் ஆண்டு இந்நாட்டை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். அந்த கோரச் சம்பவத்தின் 32-வது ஆண்டு நினைவு நாளன்று தற்போது மீண்டும் தாக்கிய இந்த நிலநடுக்கம் பள்ளிக்கூடங்கள், வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சொந்தமான பலமாடி கட்டிடங்களை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் தரைமட்டமாக்கியது.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகளில் மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணப்படையினர் முழுமூச்சில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னர் வந்த முதல்கட்ட தகவல்களின்படி, இடிபாடுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானதாக தெரியவந்தது.

ஆனால், இன்று காலை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

குறிப்பாக, தலைநகர் மெக்சிகோ சிட்டியில் மட்டும் 117 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. முன்னர் கோபுரங்களாக தலைநிமிர்ந்து நின்று, தற்போது மண்மேடாக கிடக்கும் நூற்றுக்கணக்கான கட்டிட இடிபாடுகளுக்குள் இன்னும் ஆயிரக்கணக்கான பிரேதங்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top