மியான்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், அங்கு அவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கொழும்பு, அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் தெவட்டகஹ பள்ளிவாசலில் இருந்து ஆரம்பித்த பேரணி மியன்மார் துாதரகம் வரை சென்றது, களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மரிக்கார், முஜிபுர்ரஹ்மான் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் அசாத் சாலி ஆகியோர் இருந்தனர்

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யத்துல் உலமா, மஜ்லிஸ் சூறா மற்றும் பொது அமைப்புக்கள் என்பன இணைந்து ஜும்ஆத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

ஹிஜ்ரா சந்தியிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது சம்மாந்துறை பிரதேச செயலகம் வரை சென்று அங்கு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால் ஐக்கிய நாடுகள் சபைக்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் மகஜர்கள் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டன.

இதேவேளை வாழைச்சேனை , மூதூர் அக்கரைச்சேனை, மீறாவோடை ,தோப்பூர் ஆகிய பகுதிகளிலும் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top