ஐதராபாத்தில் பணத்திற்காக வயதான ஓமான், கட்டார் நாட்டவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் கும்பலை இந்திய பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஐதராபத் பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் 5 ஓமான் நாட்டவர்கள், 3 கட்டார் நாட்டவர்கள் மற்றும் மும்பை மதகுரு பாரித் அகமது கான் உட்பட மூன்று மத குருக்களையும் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய ஐதராபாத் பொலிஸார், ஐதராபாத் நகரில் இரு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டதில், 20 பேரை கைது செய்து உள்ளோம்.

சிறுமிகள் திருமணத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு உள்ளனர். 12 சிறுமிகள் இந்த கொடூரத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் பலாத்காரம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

குறித்த கும்பலானது சிறுமிகள் உள்ள ஏழை குடும்பங்களை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. அரபு நாடுகளுக்கு அழைத்து செல்வதாக ஆசைவார்த்தை கூறியும், பணம் வழங்குவதாக கூறியும் ஏமாற்றி உள்ளனர்.

அரபு நாடுகளில் மிகவும் மகிழ்ச்சியாக சிறுமிகள் வாழலாம் எனவும் ஏமாற்றி உள்ளனர். சிறுமிகளை திருமணம் செய்ய அரபு நாட்டவர்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் செலவு செய்து உள்ளனர்.

பணம் முகவர்கள் மற்றும் திருமணம் செய்துவைக்கும் மத குருக்களால் பெறப்பட்டு உள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவர் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ரூ.5 லட்சம் கொடுத்து திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமியின் தாயார் பொலிஸில் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் உறவினர்கள், முகவர்கள் பணம் வாங்கிக்கொண்டு சிறுமியை முதியவருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

கடந்த 2015-ல் ஐதராபாத்தில் ஒவ்வொரு வாரமும் 5, 6 சிறுமிகள் அரபு நாட்டவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் அவலநிலை காணப்படுகிறது என பொலிஸ் தரப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top