மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையிலான வரைவு நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் தமது வேட்பாளர் பட்டியலில் குறைந்தபட்சம் 30 வீதத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்த திருத்தச் சட்ட வரைவு அமைந்திருந்தது.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, அரசாங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்ட வரைவை முன்வைத்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் சட்டமா அதிபரின் அறிவுரை பெறப்பட்டு பிற்பகலில் அமர்வு ஆரம்பமானது.

இந்த திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டமா அதிபர் ஆலோசனை கூறியிருந்தார்.

குறித்த சட்டமூலத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் பதிவாகின.

மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின்போதே இது நிறைவேற்றப்பட்டது.

அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top