பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற வகையில் நீதிமன்ற வழக்குகளுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபரான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எவருக்கும் தெரியாமல் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குற்றச் செயல்கள் தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஞானசார தேரர் கடந்த முதலாம் திகதி நாட்டில் இருந்து தப்பிச் சென்று விட்டதாக தெரியவந்துள்ளது.

தேரருக்கு எதிராக கடந்த முதலாம் திகதி ஹோமாகமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றதுடன் அவரோ, அவரது சட்டத்தரணியோ நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

இதனால், ஞானசார தேரரை கைதுசெய்ய அன்றைய தினமே நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார். எனினும் அவர் யாருக்கும் தெரியாத வழியில் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு நாளைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

நாளைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாது போனால், மேன்முறையீட்டு நீதிமன்றமும் பிடியாணை பிறப்பிக்கும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுபல சேனா அமைப்பினால், அளுத்கமை, பேருவளை பகுதியில் நடத்தப்பட்ட இனவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணைகள் முடிவடைந்துள்ளன.

சட்டரீதியான ஆலோசனைகளை பெறுவதற்காக விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரும் விரைவில் ஆலோசனையை வழங்க உள்ளதுடன், ஞானசார தேரர் பிரதான குற்றவாளியாக பெயரிடப்பட உள்ளார்.

ஏற்பட்டுள்ள பாதகமான நிலைமையில், ஞானசார தேரரை பாதுகாக்க விஜேதாச ராஜபக்ச போன்ற ஒருவர் நீதியமைச்சர் பதவியில் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவர், நாட்டில் இருந்து தப்பிச் செல்ல தீர்மானித்துள்ளார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top