நானும் ஜனாதிபதியின் 
இஃப்தாரில் கலந்து கொண்டேன்!
உண்மை நிலை என்ன?
-அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்-ஹலீமி-



அன்றைய தினம் இறுதி நேரம் வரை அந்நிகழ்வில் கலந்து கொள்ளும் எண்ணம் எனக்கிருக்கவில்லை. ஏனெனில் குறித்த தினம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அச்சமூகத்தின் கருப்பு நாள் என்றே சொல்ல வேண்டும். ஜம்இய்யத்துல் உலமா சார்பாக சுமார் 25 ஆலிம்களுக்கு அழைப்பிதழ்கள் வந்திருந்தன. எல்லோரும் போலவே தலைவர் உட்பட ஏனையவர்களும் கலந்துகொள்ளும் எண்ணத்துடன் இருக்க வில்லை.

ஆனால் அன்றைய தினம் காலையில் ஜனாதிபதியுடனான ஒரு சந்திப்பு ஜம்இய்யத்துல்; உலமா தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்..எம். றிஸ்வி தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நடைபெற்றது. இதற்கு முன்பும் சுமார் 4 தடவைகள் சந்தித்து முஸ்லிம் சமூகம் சார்ந்த பல முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவைகளை நிறைவேற்றுவதாக சாதகமான பதில் கிடைத்தும் ஆனேகமானவைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அன்றைய நாள் காலையில் நடந்த சந்திப்பில் குறித்த மூன்று விடயங்களை நிறைவேற்றுவதாக வாக்களித்தாலே தவிர தம்மாலும் தம்முடைய ஆலிம்களாலும் இஃப்தார் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என திட்டமாக ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்ட பெண்கள் ஆடை தொடர்பான சுற்றுநிரூபம் தொடர்பாகவும் அவரிடம் கூறப்பட்ட போது அதே இடத்திலிருந்து உடனடியாக குறித்த அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்னசிரி அவர்களை தொடர்புகொண்டு ஜனாதிபதி கடுமையாக சாடினார். மேலும் குறித்த மூன்று விடயங்களையும் முழுமையாக ஜனாதிபதி அவர்கள் ஏற்றுக் கொண்டதற்கிணங்கவே ஜம்இய்யாவின் தலைவர் உற்பட ஏனைய அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

அந்த மூன்று விடயங்களும்:

1.முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் கண்காணிக்கப்டல் வேண்டும்.
2.சிறையில் இருக்கின்ற அப்பாவி மக்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
3.முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் மீள்பரிசீலனை செய்யப்படல் வேண்டும்.

குறித்த இஃப்தார் நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் உரையாற்றும் போது ஜம்இய்யத்துல் உலமா தம்மை பல தடவைகள் சந்தித்து வேண்டுகோள்கள் விடுத்துள்ளார்கள் அவைகளை; நான் கவனத்தில் கொள்வேன் எனவும் இன்று காலையிலும் தம்மிடம் பல முக்கிய வேண்டுகோள்களையும் விடுத்துள்ளனர் எனக் கூறி குறித்த கடிதத்தை வாசித்தும் காட்டினார்.

நிகழ்வுகளைப் புறக்கணிப்பது சரியானதா?

பொது மக்கள்; இது போன்ற நிகழ்வுகளை புறகணிப்பது வேறு ஒரு சமூகம் சார்ந்த தலைவர் அல்லது பிரதிநிதிகள் புறக்கணிப்பது வேறு. பொது மக்கள் சொல்வது போன்று ஒரு சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் இவைகள் போன்றவற்றைப் புறக்கணித்து விட்டு மீண்டும் சமூகத்தின் ஒரு தேவைக்கு அவர்களை அணுக முடியாத நிலையை உருவாக்க முடியாது. குறிப்பாக நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எக்கட்டத்திலும் அவரையே நாடவேண்டிய ஒரு சூழலில் இருக்கிறோம். எனவே தான் குறித்த நிகழ்வுக்கு அன்றைய தினம் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த பல அமைச்சர்களும், பல சமூகத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஜம்இய்யத்துல் உலமா தலைவர் இஃப்தாரை புறக்கணித்தார்!

வேண்டா வெறுப்போடு (சமூக நலனுக்கான நோக்கோடு) கலந்து கொண்ட அவர் பேரீத்தம் பழம் தண்ணீரோடு இஃப்தாரை முடித்துக் கொண்டார். தம்மோடு அமர்ந்து இரவுணவு உண்ண ஜனாதிபதி இவரை அழைத்த போதும் தொழ வேணடும் எனக் கூறி அவ்விடத்தை விட்டு எழுந்து சென்று விட்டார் என்ற செய்தி எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

ஜனாதிபதி தமதுரையை நிகழ்த்த முன்பே ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் தமது அதிருப்தியையும் முஸ்லிம் சமூகம் தற்போது மனமுடைந்து இருக்கும் நிலையையும் ஞாபகப்படுத்தினார். அதனையே ஜனாதிபதி அவர்கள் தமதுரையில் 'நீங்கள் மனமுடைந்து இருக்கிறீர்கள் என நான் அறிவேன். என்னைப் பொறுத்த வரையில் குறித்த இரண்டு ஆளுனர்களுக்கும்;; இனவாதிகளால் கூறப்படும் குற்றச் சாட்டுக்கள் பொய்யானவைகள். அவர்களின் இராஜினாமா எனக்கு பெரிதும் வருத்தத்தை அளிக்கிறது. அத்துடன் அவர்கள் இருவரும் எனது நெருங்கிய நண்பர்கள் என்றும்; அந்த இராஜினாமா பெரும் ஆபத்துக்களிலிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாத்து இருக்கிறது' எனவும் கூறினார்.

எனவே புனிதமிகு ரமழான் மாதத்தில் நாம் எமது அமல்களையும், நன்மைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அநியாயமான யாருடைய விமர்சனங்களும் எவரையும் ஒன்றும் செய்து விட முடியாது. எனவே உண்மை நிலையையும், நியாயமும் அறியாது வீணாக பிறரை குற்றம் சொல்கிறவர்கள் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கேட்டு அவனது நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம். அல்லாஹ் நம் அனைவரையும் மன்னித்து பொறுந்திக் கொள்வானா! ஆமீன்.
-அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்-ஹலீமி-

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top