கல்முனைக் கரையோர மாவட்டம்:
17 வருடங்களுக்கு முன்
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா
பகிரங்கமாகத் தெரிவித்த கருத்து
அம்பாறை மாவட்டத்திலிருந்து தெஹியத்தக்கண்டி, கிராந்துருக்கோட்டே ஆகிய பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு தமிழ் பேசுகின்ற மக்களுக்கான பெரும்பான்மை ஒழுங்கு அம்பாறைக் கச்சேரியில் செய்யப்படல் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதைவிடுத்து கரையோரக் கச்சேரி என்ற பெயரில் இம்மாவட்டத்திலுள்ள முழுக்காணியையும் பறி கொடுத்துவிட்டு மக்கள் குடியிருக்கின்ற பிரதேசங்களை மட்டும் இனைத்து ஒரு சில திணைக்களங்களைக் கொண்டதாகத் திட்டமிடப்படுகின்ற பிரிவினை எமக்குத் தேவையில்லை. இவ்வாறு முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்கள் 17 வருடங்களுக்கு முன் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறுதிப் பகுதியில் கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசல் வீதியின் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைக்க அமைச்சர் அதாவுல்லா அவர்கள் கல்முனை வருகை தந்திருந்த போது கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பில் இவர் கொண்டிருந்த நிலைப்பாடு தொடர்பில் இங்குள்ள சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து ஒரு குழப்ப நிலையை அங்கு ஏற்படுத்தியிருந்தனர். கோஷங்களையும் எழுப்பிக்கொண்டிருந்தனர்.
குறிப்பிட்டபடி அதாவுல்லா அவர்களினால் கல்முனை கடற்கரைப்பள்ளி
வீதியில் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் முன்னாள் அமைச்சரின் அன்றைய கல்முனை இணைப்பாளர் ஏ.சி.ஏ.சத்தார் தலைமையில் இடம்பெறவிருந்த பொதுக் கூட்டத்தை ஒரு சில அரசியல்வாதிகள் அவ்விடத்தில் திட்டமிட்டு
ஏற்படுத்தியிருந்த குழப்ப நிலை காரணமாக அமைதி கருதி முன்னாள் அமைச்சர் அதாவுல்லா நடத்த விரும்பவில்லை.
சம்பவ இடத்திற்கு சென்றிருந்த நான் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களை (அன்று அவர் அமைச்சர் பதவியில் இருந்தார்) வீடு ஒன்றில் இருப்பதாக அறிந்து அவரிடம் சென்று அவரிடம் கூட்டம் நடைபெற்றிருந்தால் எதனை அந்த மேடையில் பேச நினைத்திருந்தீர்களோ
அவைகளை நீங்கள் என்னக்கு சொல்லுவீர்களா? என்று
அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர் தாராளமாக என்று கூறிவிட்டு ஒரு சிகரெட்டை பற்றவைத்து
கையில் எடுத்துகொண்டார். ஆனால், என்னோடு கதைக்கும்போது பற்றவைக்கப்பட்ட அந்த சிகரெட்டை
வாயில் வைத்து புகைக்கவே இல்லை. அது கையில் புகைந்து கொண்டிருந்தது. இது இப்போதும்
எனக்கு நன்றாக ஞாபகத்திலுள்ளது. இவ்விடத்தில் கருத்து வேறுபாடுகள் உள்ள கல்முனை கரையோர மாவட்டம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லா
அவர்களிடம் அவரின் கருத்துக்களைக் கேட்டேன்.
அந்த சந்தர்ப்பத்தில்தான் முன்னாள் அமைச்சர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்கள் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:-
தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதுதான் அம்பாறை மாவட்டமாகும். கல்லோயா அபிவிருத்தித் திட்டம் எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அன்றுதான் அம்பாறை நகரம் உருவாக்கப்பட்டது. அங்குள்ள கொண்டவட்டுவான் பிரதேசத்தில் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களின் வயல் காணியும் அவர்கள் உருவாக்கிய பள்ளிவாசலும் இன்றும் உள்ளது.
இப்படியான பல தொடர்புகள் இருந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஏதோ அரசியல் காரணங்களுக்காக எங்கோ தூரத்தில் இருந்து கொண்டிருக்கின்ற தெஹியத்தக்கண்டி, கிராந்துருக்கோட்டே போன்ற பிரதேசங்களை அம்பாறை மாவட்டத்துடன் இணைத்திருக்கிறார்கள். இதனால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் ரீதியான பலம் இம்மாவட்டத்தில் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது.
இந்த இயற்கைக்கு மாறான அநீதியான செயல்பாடுகள் காரணமாக கிராந்துருக்கோட்டை, தெஹியத்தக்கண்டி பிரதேசங்களில் வாழ்கின்ற சிங்கள மக்கள் வெகு தூரத்திலுள்ள அம்பாறைக் கச்சேரிக்கு நாம் ஏன் எமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போய் வரல்வேண்டும். எமக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களான பொலன்னறுவை, மஹியங்கனை போன்ற பிரதேசங்களில் எமக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரமுடியாதா? என்று வினவத் தொடங்கியிருக்கிறார்கள்.
இப்படியான சூழ்நிலையில் கரையோரக் கச்சேரி விடயத்தில் எமது வாதாட்டம் வேறு விதமாக இருந்து கொண்டிருக்கிறது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள இங்கினியாகல, பதியத்தலாவ, உஹன போன்ற பகுதிகளில் எமது தமிழ் பேசும் மக்களுக்கு தேவைகள் பல இருந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் பேசும் மக்களுக்கென உருவாக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்திலிருந்து முழுக் காணியையும் அப்படியே பிரித்து எடுத்துக்கொண்டு மக்கள் குடியிருக்கின்ற பிரதேசங்களை ஒன்றிணைத்து மேலதிக கச்சேரி என்ற பெயரில் அரசு எதனையோ தரப்போகின்றது. இதற்கு நாங்கள் ஒருபோதும் உடன்படப்போவதில்லை.
கரையோரக் கச்சேரி என்கின்ற போது இதற்கென நிலங்கள் எல்லைப்படுத்தப்படல் வேண்டும். திணைக்களங்கள் வேறுபடுத்தப்படல் வேண்டும்.
இந்த திட்டமிடல் எதுவுமில்லாமல் பெயரளவுக்கு வழங்கப்படும் கச்சேரியை நாம் எப்படி ஏற்க முடியும்?
கரையோர மாவட்டத்திற்கான கச்சேரி விபரம் இம் மாவட்டத்திலுள்ள முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கூடி புத்திசாலித்தனமாக யோசித்து தீர்க்கதரிசனமாக முடிவு எடுக்கவேண்டிய விடயமாகும். இப்படியான ஒரு விடயத்தை அவசர புத்தி காரணமாகவோ அல்லது அரசியல் சுயநலத்திற்காகவோ புத்திசாலித்தனம் இல்லாத முறையில் இப்பிரதேச மக்களை விற்றுவிட்டு போகவும் முடியாது.
எனவே, இந்த மாவட்டத்திலிருந்து முழுக் காணியையும் அப்படியே பிரித்து குடியிருப்பு பிரதேசங்களை மட்டும் கொண்ட மேலதிகக் கச்சேரியைக் கொண்டுவருவது இப்பிரதேச மக்களின் எதிர்காலத்தைப் பாழடிப்பதாகும்.
கரையோரக் கச்சேரி என்றில்லாமல் தெஹியத்தக்கண்டி, கிராந்துருக்கோட்டே ஆகிய பிரதேசங்களை அம்பாறை மாவட்டத்திலிருந்து பிரித்து அம்பாறைக் கச்சேரியில் தமிழ் பேசும் மக்களுக்கான பெரும்பான்மை ஒழுங்கு செய்யப்படல் வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். இவ்வாறு அமைச்சர் அதாவுல்லா கரையோரக் கச்சேரி தொடர்பில் எம்மிiடம் கருத்து தெரிவித்தார்.
2003.07.01 ஆம் திகதி வெளியான வீரகேசரியில் என்னால் எழுதப்பட்ட இச் செய்தி பிரசுரமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்று நவமணியிலும் விரிவாக
அவரின் அக்கருத்து பிரசுரமாகியிருந்தது.
இச்செய்திகளை பத்திரிகைகளில் கண்ணுற்ற முன்னாள் அமைச்சர் அதாவுல்லா
அவர்கள் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வளவும் உங்களோடு நான் கதைத்துள்ளேனா? என ஆச்சிரியமாகக்
கேட்டுவிட்டு இதற்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கவே உங்களுக்கு தொலைபேசி எடுத்தேன் எனக்கூறி கல்முனைப் பிரதேச அபிவிருத்தி
விடயமாக 30 நிமிடங்களுக்கு மேல் என்னுடன் கதைத்தது இப்பொழுதும் ஞாபகத்தில் உள்ளது.
எனது ஊடக வரலாற்றில் செய்தி எழுதிய எனக்கு அந்த செய்தியைப் பார்த்து
நன்றி சொன்ன முதலாவது அரசியல்வாதி முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்கள்தான்.
ஏ.எல்.ஜுனைதீன்
ஊடகவியலாளர்.
0 comments:
Post a Comment