சாய்ந்தமருது பொது நூலக வீதிச் சந்தியில்

கொட்டப்படும் கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது நூலக வீதி அல்-அமீன் சந்தியில் பொது மக்களால் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் குப்பைகள் அழுகல் அடைந்து இப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் இவ்வீதியில் வசிக்கும் பிரதேச வாசிகள்  பாடசாலை மாணவர்கள்  பாதசாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனால் இவ்விடத்தில் கழிவுக் குப்பைகளை கொட்டாமல் தடை செய்யக்கோரி பிரதேசவாசிகள்  மற்றும்  மாணவர்களால் கல்முனை மாநகர சபைக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவதற்கு நேற்று (24) செவ்வாய்க்கிழமை முற்பட்ட வேளை ஸ்தலத்திற்கு விஜயம் செய்த கல்முனை பொலிஸார் மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினர்.
கல்முனை மாநகர சபை  கல்முனை பொலிஸ் நிலையம்  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு மேற்படிவிடயம் கொண்டு வந்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதன் காரணமாகவே இப்போராட்டம் முன்னெடுப்பதற்கான முஸ்தீபுகளை பிரதேச மக்கள் மேற்கொண்டனர்.
இவ்வீதியில் அரச காரியாலயங்கள்  அரச உயர் கல்வி நிலையங்கள்  பாடசாலை,  வைத்தியசாலை, பொதுநூலகம் என்பன காணப்படுவதால் மக்களின் போக்குவரத்து அதிகமாக காணப்படும் வீதியாக இவ்வீதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ஸ்தலத்திற்கு வருகை தந்த சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் .எல்.எம்.பாறூக்  கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் ஆகியோர் இவ்வீதியில் இன்றிலிருந்து குப்பைகளை கொட்டவிடாது தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என வழங்கிய உறுதி மொழி அடுத்து இக்கவனயீர்ப்பு போராட்டம் பொதுமக்களால் கைவிடப்பட்டதுடன் பிரதேச வாசிகளினால் இவ்விடயம் சம்பந்தமான மகஜரும் கையளிக்கப்பட்டது.

ஓரிரு தினங்களுக்குள் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றுத்தருவதற்கு தவறும் பட்சத்தில் பிரதேச வாசிகளால் கைவிடப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என குறித்த அதிகாரிகளிடம் கூடியிருந்த மக்கள் தெரிவித்தனர்.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top