"ஸ்மார்ட்போனில்' இசையை இரசிக்கும்
இளைஞர்களின் கேட்கும் திறன் பறிபோகும் அபாயம்!

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை


காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ரசிக்கும் வழக்கம் இளைஞர்களிடையே பெருகி வருவதால், 100 கோடி இளைஞர்களுக்கு கேட்கும் திறன் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு கூறியிருப்பதாவது:
அதிக வருவாய் கொண்ட நாடுகளிலுள்ள 12 முதல் 35 வயதுக்குள்பட்டவர்களில், சுமார் அரைவாசி எண்ணிக்கையுடையோர் "ஸ்மார்ட்போன்'கள் உள்ளிட்ட ஒலிச் சாதனங்களிலிருந்து கேட்பொலிக் கருவிகளைப் பயன்படுத்தி இசையை அதிக ஒலியுடன் ரசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் 40 சதவீதத்தினர் பொது அரங்குகளிலும், இரவு நேர கேளிக்கை விடுதிகளிலும் உரக்க ஒலிக்கும் இசையை ரசித்து வருகின்றனர்.

இளைஞர்கள் அளவுக்கு அதிகமான ஒலியைக் கேட்பதற்கான சூழல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் கேட்கும் திறனை இழப்பதற்கான வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. அதிக ஒலியில் இசை கேட்டு, அதனால் கேட்கும் திறனை இழந்துவிட்டால் அதற்குப் பிறகு எப்போதுமே, எதையுமே கேட்க முடியாது என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top