சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அமைப்பு தயார் செய்த திட்டம்

நடைமுறைபடுத்தப்படாதது ஏன்?

புத்திஜீவிகளும் சமூக நலன் விரும்பிகளும் கேள்வி!

2005 ஆம் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுனாமியின் பின்னர் கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அமைப்பு ஒன்று காரைதீவிலிருந்து சாய்ந்தமருது ஊருக்குள் செல்லும் தோணாவை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றைத் தயார் செய்து அன்றிருந்த கல்முனை மேயர் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைமைகளிடம் சமர்ப்பித்திருந்தது.  அத்திட்டத்திற்கு என்ன நடந்துவிட்டது? அத்திட்டம் நடைமுறைபடுத்தப்படாதது ஏன்? என இப்பிரதேச புத்திஜீவிகளும் சமூக நலன் விரும்பிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சாய்ந்தமருது தோணாவும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களும் சரியான முறையில் திட்டமிடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படாததால் அப்பிரதேசம் மீண்டும் அழுக்குகளை உள்வாங்கும் அதன் பழைய நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது.
இது வரை சாய்ந்தமருது தோணாவில் முன்னாள் பிரதி அமைச்சர் எஸ். நிஜாமுதீன் அவர்களால் சுமார் 5 இலட்சம் ரூபா செலவிடப்பட்டு புல்,பூண்டுகள் அகற்றப்பட்டது. கல்முனை மாநகர சபையால் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரூபாக்களும் இவ்வாறே செலவிடப்பட்டன். இதன் பின்னர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டில்  30 மில்லியன் ரூபா (3 கோடி ரூபா) செலவில் தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால், அத்திட்டம் தோணாவில் உள்ள  புல்,பூண்டுகளை அகற்றுவதற்கும் கொங்கிறீட்டுடில் ஒரு பகுதியாகவும்  கிறவலில் ஒரு பகுதியும்மாகப் ஒரு பாதை மாத்திரம் அமைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது தோணா 30 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படவிருப்பதாகக் கூறியே கடந்த மே மாதம் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதற்கட்ட அபிவிருத்தி வேலைகளை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.
இவ்வேலைத் திட்டத்தை இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் நடைமுறைப்படுத்தவிருப்பதாகவும் இத்திட்டம் இரண்டு மாதங்களுக்குள் முடிவுறும் எனவும் மக்களுக்கு அவ்விடத்தில்  காட்சிப்படுத்தப்பட்டிருந்ததையும் மக்கள் நினைவு கூறுகின்றார்கள்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அமைப்பு தயார் செய்த் சாய்ந்தமருது தோணா சம்மந்தமான திட்டத்தினை  எதிர்காலத்தில் செயற்படுத்த அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்களால் கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
காரைதீவு தெற்கு எல்லையில் உள்ள வெட்டுவாய்க்காலில் இருந்து ஆரம்பித்து சாய்ந்தமருது ஒஸ்மன் வீதிக்கு அருகாமையில் கடலுடன் சங்கமிக்கும் பிரதான வடிச்சல் வாவியே தோணா அல்லது தொடுவாய் அல்லது கரச்சை எனப் பல பெயர்களினால் அழைக்கப் படுகின்றது. இதன் நீளம் சுமார் ஐந்து கி.மீ ஆகும்.
இத்தோணா சில பகுதிகளில் மிக விசாலமாகவும் சில இடங்களில் மிக ஒடுக்கமாகவும் காணப்படுகின்றது. இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட இத்தோணாவின் அகலம் தற்போது பன்மடங்கு குறைந்தவிட்டது. அக்காலத்தில் இத்தோணாவின் இருமருங்கிலும் பல வகையான மரங்களும் (தென்னை, மா, பாலை என்பன) செடி கொடிகளும் (கிண்ணை,தாளை,தண்டல், சாப்பை பன் என்பன) காணப்பட்டன. இவை வெள்ளப் பெருக்கின்போது தண்ணீர் ஊருக்குள் செல்லாது அரண் போல் பாதுகாத்தன.
தோணாவின் முக்கிய பிரயோசனம் மாரிகாலங்களில் வழிந்தோடும் நீரை கடலிற்குள் செலுத்துவதன் மூலம் ஊருக்குள் வெள்ளப்பெருக்கைத் தவிர்த்தலாகும். இதற்காக மாரிகாலங்களில் முகத்துவாரம் ஊர் மக்களால் வெட்டப்படும்.
தற்போது இத் தோணாவும் அதனை அண்டிய பிரதேசங்களும் குப்பை கூழங்கள் கொட்டும் இடங்களாகவும் சுற்றாடல் சுகாதாரத்துக்குப் பங்கமான பிரதேசங்களாகவும் காட்சியளிக்கின்றன. மேலும் இத் தோணா பாதுகாப்பற்றதாக உள்ளதால் பலர் இதற்குள் தவறி விழுந்து மரணித்தும் உள்ளனர்.;
2004 சுனாமியின்போது தோணாவுள் பிரவேசித்த கடல் அலைகள் தோணாவின் இருமருங்கிலும் காணப்பட்ட செடி கொடிகளினால் ஆன அரண் இல்லாததனால் இலகுவாகவும் வேகமாகவும் ஊருக்குள் பிரவேசித்து பலத்த சேதங்களை ஏற்படுத்தின.
இத்தோணா ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அமைப்பினால் தயார் செய்யப்பட்டு கையளிக்கப்பட்டிருக்கும் திட்டத்தைப் பின்பற்றி நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
இதன்மூலமாக தோணாவும் இதன் அண்டைய பிரதேசங்களும் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து இப்பிரதேசத்தை பாதுகாப்பானதாகவும் பொழுது போக்குக்கான கேந்திரமாகவும் மாற்ற வேண்டும். என்பதே மக்கள் விருப்பமாகும்.

 த்திட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இப்பிரதேசத்திற்கும்  மக்களுக்கும்  பொருளாதார ரீதியாகவும் சுற்றாடல் சுகாதாரம் ரீதியாகவும் பல நன்மைகள் கிட்டும்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top