தாய்லாந்து
பாடசாலை விடுதி தீ விபத்தில்
18 மாணவிகள் பலி
தாய்லாந்திலுள்ள பாடசாலை விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 18 மாணவிகள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பழங்குடியின மக்கள் அதிக அளவு வசிக்கும் சியாங் ராய் மாகாணத்தில் பிதாக்கியார்ட் வித்தயா என்ற தனியார் பாடசாலை செயல்பட்டு வருகிறது.
இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த பாடசாலை வளாகத்தில் 38 பெண் குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் சியாங் ராய் மற்றும் சியாங் மாய் மாகாணத்துக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
பாடசாலை விடுதியில் மாணவிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், 18 மாணவிகள் உடல் கருகி உயிரிழந்தனர். பலியானவர்கள் அனைவரும் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். அதில், இரண்டு மாணவிகள் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணமால் போன மேலும் இரண்டு மாணவிகளை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. எஞ்சிய மாணவிகளை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை அடையாளம் காண்பதற்கு மருத்துவர்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment